Published:Updated:

மும்பை: இறந்து போன வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ.75 லட்சத்தை அபகரித்த வங்கி மேலாளர் !

சித்தரிப்பு காட்சி
சித்தரிப்பு காட்சி

மும்பையில் இறந்து போன வாடிக்கையாளர்கள் இருவரின் வங்கி கணக்கில் இருந்த ரூ.75 லட்சத்தை தனது பெயரிலும், தனது மனைவி பெயரிலும் மாற்றிக்கொண்ட வங்கி மேலாளர் பிடிபட்டுள்ளார்.

வங்கிகளில் இறந்துபோன வாடிக்கையாளர்களின் வங்கிக்கணக்குகள் அதிக அளவில் இருக்கிறது. இந்த கணக்குகளில் இருக்கும் கோடிக்கணக்கான பணத்தை இறந்தவர்களின் வாரிசுகள் எதாவது காரணத்திற்காக எடுக்காமல் இருப்பதுண்டு. சில நேரங்களில் சகோதரர்களிடையே இருக்கும் சண்டையால் அனைத்து சகோதரர்களும் சேர்ந்து சென்று பணத்தை எடுக்காமல் இருக்கக்கூடும். மும்பையில் அது போன்ற ஒரு வாடிக்கையாளர் வங்கியில் 53 லட்சம் பணத்தை வைத்து விட்டு இறந்து போனார். அவர் பணத்தை வங்கியில் வைத்திருந்தது அவரது மகளுக்கும் தெரியும். மும்பை போரிவலி பகுதியில் உள்ள ஒரு பன்னாட்டு வங்கியில் வைசாலிமோரே(69) என்ற பெண் கணக்கு வைத்திருந்தார். அவர் கடந்த 2020ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இறந்து போனார்.

சித்தரிப்பு காட்சி
சித்தரிப்பு காட்சி

அடுத்த ஒரு மாதத்தில் கொரோனா பொதுமுடக்கமும் வந்துவிட்டது. தாயார் இறந்தவுடன் அவரது மகள் தனது தாயாரின் வங்கிக்கு சென்று தனது அம்மாவின் வங்கி கணக்கில் உள்ள ரூ.53.95 லட்சதை எடுக்க முயன்றார். ஆனால் வங்கியில் இருந்த மேலாளர் பணத்தை கொடுக்காமல் இழுத்தடித்துக்கொண்டே இருந்தார். உடனே வைசாலியின் மகள் இது குறித்து வங்கி மேலிடத்தில் புகார் செய்தார். வங்கி நிர்வாகம் இது குறித்து விசாரணை நடத்தியபோது வைசாலியின் வங்கி கணக்கில் இருந்த பணம் முழுக்க ஜீவன் என்பவரது பெயருக்கு மாற்றப்பட்டு இருந்தது. உடனே வங்கி அதிகாரிகள் ஜீவன் என்பவரின் முகவரிக்கு சென்று பார்த்தபோது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

ஜீவன் பல ஆண்டுகளுக்கு முன்பே இறந்தார். அவர் இறந்த பிறகும் தொடர்ந்து வங்கிக் கணக்கு செயல்பாட்டில் இருந்தது. இதனைத் தெரிந்துகொண்ட வங்கி மேலாளர் அந்த வங்கி கணக்கில் மொபைல் நம்பரை மாற்றினார். பின்னர் வைசாலியின் பணத்தை ஜீவன் வங்கி கணக்கிற்கு மாற்றினார். ஜீவன் வங்கி கணக்கில் ஏற்கனவே இருந்த 21.5 லட்சம் ரூபாயை வங்கி மேலாளர் அபகரித்துக்கொண்டதோடு, வைசாலியின் பணத்தையும் ஜீவன் வங்கி கணக்கிற்கு மாற்றி அங்கிருந்து தனது வங்கி கணக்கு மற்றும் தனது மனைவியின் வங்கி கணக்கிற்கு பணத்தை மாற்றியது விசாரணையில் தெரியவந்தது. வங்கி நிர்வாகம் இந்த மோசடி குறித்து போரிவலி போலீஸில் புகார் செய்தது. போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இருவரது பணம் ரூ. 75 லட்சத்தை அபகரித்துக்கொண்டது தொடர்பாக விசாரணை நடைபெறுவதை தெரிந்து கொண்ட வங்கி மேலாளர் தான் அபகரித்த பணத்தை அதன் உரிமையாளர்களிடமே கொடுத்துவிட்டார். ஆனாலும் அவர் பண அபகரிப்பில் ஈடுபட்டது குறித்து தொடர்ந்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். கூடுதல் ஆதாரங்களைத் திரட்டிய பிறகு வங்கி மேலாளர் கைது செய்யப்படுவார் என்று இன்ஸ்பெக்டர் சுதிர் காலேகர் தெரிவித்தார். இதற்கிடையே டிவி நடிகர் கரண் மெஹ்ரா தனது மனைவியின் வங்கி கணக்கில் இருந்து சட்டவிரோதமாக ரூ.1 கோடியை எடுத்திருப்பதாக அவரது மனைவி போலீஸில் புகார் செய்துள்ளார். கரண் தனது மனைவி நிஷாவை அடித்ததாக எழுந்த புகாரின் பேரின் பேரில் மே 31-ஆம் தேதி கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார். கரண் மற்றும் அவரது உறவினர்கள் இரண்டு பேர் மீது நிஷாவின் வங்கிக்கணக்கில் இருந்து பணத்தை எடுத்ததாக போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தனது கணவனுக்கு எதிராக நிஷா இரண்டாவது முறையாக போலீஸில் புகார் செய்துள்ளார். இருவரும் 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு ஒரு மகனும் இருக்கிறான்.

அடுத்த கட்டுரைக்கு