Published:Updated:

`மது போதையால் தொடர்ந்து பிரச்னை!'- தாய், தம்பியால் கம்பம் இளைஞருக்கு நேர்ந்த கொடூரம்

கொலையான விக்னேஷ்வரன்
கொலையான விக்னேஷ்வரன்

கொலை சம்பந்தமாக, கொலையான நபரின் தாய் மற்றும் தம்பி ஆகியோரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

தேனி மாவட்டம் கம்பம் அருகே கை, கால்கள், தலை இல்லாத நிலையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று நேற்று முந்தினம் இரவு கண்டுபிடிக்கப்பட்டது. மிகவும் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு சாக்கில் கட்டி வீசப்பட்டிருந்த ஆந்த ஆண் சடலத்தை மீட்டு போலீஸார் விசாரணை நடத்திவந்தனர். இந்நிலையில், கொலை சம்பந்தமாக, கொலையான நபரின் தாய் மற்றும் தம்பி ஆகியோரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

`என் மனைவியிடம் போனில் தவறாகப் பேசியது யார்?’-நிதி நிறுவன ஊழியர்களை அரிவாளால் மிரட்டிய தேனி தொழிலாளி

சுற்றுலாத் தலங்களில் ஒன்றான சுருளி அருவிக்குச் செல்லும் வழியில், தொண்டைமான் துறை என்கிற இடத்தில், முல்லைப்பெரியாறு ஆற்றின் கரையில், சாக்கு ஒன்று கிடந்துள்ளது. இரவு நேரத்தில் இருசக்கர வாகனத்தில் இளைஞர் மற்றும் பெண் ஒருவர் அந்தச் சாக்குப்பையை ஆற்றின் கரையில் வீசியதை அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த சிலர் பார்த்துள்ளனர். இரவு நேரத்தில் சந்தேகததுக்கு இடமான முறையில் சாக்குப்பை வீசப்பட்டதால், கம்பம் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கின்றனர்.

சம்பவ இடத்துக்கு வந்த கம்பம் தெற்கு காவல்துறையினர், சாக்கை அவிழ்த்துப் பார்த்தனர். அவர்களுக்குப் பெரும் அதிர்ச்சி. கைகள், கால்கள், தலை இல்லாத ஆண் சடலம் அதில் இருந்தது. மிகவும் கொடூரமான முறையில் கொலை செய்து, உடல் உறுப்புகளைத் துண்டாக்கி, சாக்கில் கட்டி வீசியிருந்தனர். தகவல் அறிந்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சாய் சரண் தேஜஸ்வி, நேரடியாக சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு செய்தார். கம்பம் நகர் முழுவதிலும் உள்ள சிசிடிவி காட்சிகள் இரவோடு இரவாக ஆய்வு செய்யப்பட்டது. மேலும், தேனியில் இருந்து மோப்ப நாய் லக்கி வரவழைக்கப்பட்டது. சடலம் கிடந்த இடத்தில் இருந்து நாராயணதேவன்பட்டி செல்லும் சாலையில் உள்ள சின்னவாய்க்கால் வரை நாய் ஓடியது.

விக்னேஷ்வரனின் தாய் செல்வி
விக்னேஷ்வரனின் தாய் செல்வி

உடனடியாக, காவல் ஆய்வாளர்கள் சிலைமணி, முத்துமணி ஆகியோர் தலைமையில் இரு தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்நிலையில், இன்று காலை, சந்தேகத்தின் அடிப்படையில், கம்பம் நந்தகோபாலன் கோயில் தெற்கு வாசல் தெருவைச் சேர்ந்த ராஜா என்பவரின் மனைவி செல்வி (வயது 49) மற்றும் அவரின் மகன் விஜய் பாரத் (வயது 25) ஆகியோர் கம்பம் தெற்கு காவல்நிலையத்துக்கு அழைத்துவரப்பட்டு விசாரிக்கப்பட்டனர். விசாரணையில், கைகள், கால்கள், தலை துண்டாக்கப்பட்டு சடலமாக மீட்கப்பட்டது செல்வியின் மூத்த மகன் விக்னேஷ்வரன் (வயது 30) என்பது தெரியவருகிறது.

`தேனி நர்சிங் மாணவி தற்கொலை!' - சந்தேகம் எழுப்பும் உறவினர்கள்

விசாரணையின் தொடர்ச்சியாக, விக்னேஷ்வரன், மது போதைக்கு அடிமையாகி தெருவில் பிரச்னைகள் செய்துவந்ததாகவும், இதனால், ஆத்திரத்தில் தாய் செல்வியும் தம்பி விஜய் பாரத்தும் இணைந்து விக்னேஷ்வரனை கொலை செய்து உடலை துண்டு துண்டாக்கியதாகத் தெரிவித்துள்ளனர். அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில், வீரநாயக்கன்குளம் என்ற பகுதியில் உள்ள வயல் ஒன்றின் கிணற்றில் இருந்து விக்னேஷ்வரனின் தலை கண்டெடுக்கப்பட்டது. தலை முழுவதும் வெட்டுக்காயங்கள் இருந்தன. இவ்வளவு கொடூரமான முறையில், சொந்த மகனை கொலை செய்வாரா... மதுப்பழக்கம் என்ற ஒற்றை காரணத்துக்காகத் தம்பி, உடல்களைத் துண்டு துண்டுகளாக வெட்டி வீசியிருப்பாரா... என்பது சந்தேகத்தை எழுப்புவதாகவே உள்ளது. கைது செய்யப்பட்ட இருவரும் போலீஸாரின் தொடர் விசாரணையில் உள்ளனர்.

விக்னேஷ்வரனின் தம்பி விஜய் பாரத்
விக்னேஷ்வரனின் தம்பி விஜய் பாரத்
`சிறுமிக்கு நேர்ந்த துயரம்' - தேனி இளைஞருக்கு 30 ஆண்டு சிறைத் தண்டனை #TamilnaduCrimeDiary

இது தொடர்பாகப் பேசிய போலீஸார், ``விசாரணையின் முடிவில்தான், கொலைக்கான காரணம் முழுமையாகத் தெரியும். மேலும், கைகள் மற்றும் கால்களைத் தேடிவருகிறோம். அவை கிடைத்ததும். பிரேத பரிசோதனை செய்யப்படும். அதன் மூலமும் சில தகவல்கள் கிடைக்கும்” என்றனர். கம்பத்தில் இவ்வளவு கொடூரமான கொலை இதுவரை நடந்தது இல்லை என்கின்றனர் கம்பம் வாசிகள்.

அடுத்த கட்டுரைக்கு