நாமக்கல் மாவட்டம், வெண்ணந்தூர் அருகேயிருக்கும் மேற்குவலசு பகுதியிலுள்ள நாகராஜ் என்பவருடைய தோட்டத்தில், அழுகிய நிலையில் பெண் உடல் கிடப்பதாக வெண்ணந்தூர் காவல் நிலைய போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. அப்படி வந்த தகவலைத் தொடர்ந்து, வெண்ணந்தூர் காவல் நிலைய போலீஸார், சம்பவ இடத்துக்குச் சென்றனர். அங்கிருந்த மக்கள், `இந்தத் தோட்டத்துக்கு ரொம்ப நாளாக யாரும் போகவில்லை. இன்றைக்கு யதேச்சையாகச் சிலர் போனப்ப, பெண்ணின் அழுகிய பிணத்தைப் பார்த்துள்ளனர். அதைக் கேள்விப்பட்டுப் போன எங்களுக்கும், உடல் அப்படியே ஆடிப்போய்விட்டது" என்று தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து, அங்கிருந்த அந்தப் பெண்ணின் உடலைக் கைப்பற்றிய போலீஸார், உடற்கூறாய்வு பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில், பிணமாகக் கிடந்தவர், திருச்செங்கோடு பகுதியைச் சேர்ந்த செல்வி (வயது 45) என்பதும், இவர் கிருஷ்ணகிரியைச் சேர்ந்த தங்கவேல் என்பவரைத் திருமணம் செய்துகொண்டதும் தெரியவந்தது.
இவர்கள் இருவரும் ஆறு மாதங்கள் ஒன்றாக வாழ்ந்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்துவிட்டனராம். அதன் பிறகு, கணவரைப் பிரிந்துசென்ற செல்வி, வெண்ணந்தூர் அருகே மல்லூர் பகுதியிலுள்ள அவருடைய அண்ணன் பழனிசாமி நடத்திவரும் செங்கல் சூளையில் வேலை செய்துவந்ததும் தெரியவந்தது. செல்வி அடிக்கடி அண்ணனிடம் தகராறு செய்துகொண்டு உறவினர்கள் வீட்டுக்குச் சென்றதையும், இதுபோல் கடந்த 6-ம் தேதி சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை என்பதையும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில்தான், இத்தனை நாள்களுக்குப் பிறகு, மேற்குவலசு பகுதியில் செல்வி அழுகிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டுள்ளார். இது குறித்து, பழனிசாமி வெண்ணந்தூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில், வழக்கு பதிவு செய்த போலீஸார், செல்வியின் மரணம் தற்கொலையா அல்லது கொலையா என்று பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். பெண் ஒருவர் அழுகிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம், அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.