நாமக்கல் மாவட்டம், மரூர்பட்டியைச் சேர்ந்தவர் முத்துராஜா (28). இவர், அங்குள்ள தனியார் கோழித்தீவன ஆலையில் கணக்காளராகப் பணியாற்றிவருகிறார். இந்த நிலையில், முத்துராஜா நாமக்கல் - சேலம் சாலையிலுள்ள தனியார் வங்கி ஒன்றில் தனது கணக்கிலிருந்து ரூ.2 லட்சம் பணத்தைச் சொந்தத் தேவைக்காக எடுத்திருக்கிறார். பின்னர், அந்தப் பணத்தை தனது இரு சக்கர வாகனத்தின் முன்பகுதியிலுள்ள கவரில் வைத்துக்கொண்டு, சொந்த ஊருக்குச் சென்றுகொண்டிருந்தார். இந்த நிலையில், நாமக்கல் அருகேயுள்ள முதலைப்பட்டி பகுதியில் முத்துராஜா சென்றபோது அவரைப் பின்தொடர்ந்து இரு சக்கர வாகனம் ஒன்றில் வந்த இரண்டு மர்ம நபர்கள், 'வண்டியை நிறுத்துங்க. உங்க வண்டியில் இருந்த பை தவறி கீழே விழுந்துடுச்சு. அதை எடுங்க' எனக் கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த முத்துராஜா, தனது வாகனத்தை நிறுத்திவிட்டு, பின்னால் சென்று பார்த்ததாகச் சொல்லப்படுகிறது.

ஆனால், அங்கு எந்தப் பையும் இல்லாததைக் கண்டு குழம்பிய முத்துராஜா, திரும்ப தனது வாகனத்தை நோக்கி வந்திருக்கிறார். ஆனால், அதற்குள் அந்த இரண்டு மர்ம நபர்களும் அங்கிருந்து எஸ்கேப்பாகியுள்ளனர். இந்த நிலையில், தனது வாகனத்தில் கவரை செக் செய்த அவர், அதிர்ந்துபோனார். அங்கே பையில் வைத்திருந்த ரூ.2 லட்சம் காணாமல்போயிருந்தது. தன்னைக் குழப்பிவிட்டு, அந்த இரண்டு மர்ம நபர்களும் முத்துராஜா வாகன கவரில் வைத்திருந்த ரூ.2 லட்சத்தைத் திருடிவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த முத்துராஜா, இந்தச் சம்பவம் குறித்து நாமக்கல் நல்லிபாளையம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அந்த புகாரின்பேரில், போலீஸார் கண்காணிப்பு கேமரா பதிவுகளைப் பார்வையிட்டு, விசாரணை நடத்திவருகின்றனர். மேலும், ரூ.2 லட்சத்தைத் திருடிச் சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.