நாமக்கல் மாவட்டம், மோகனூர் அருகேயுள்ள நொச்சிப்பட்டியில் தனியார் கோழிப்பண்ணை ஒன்று செயல்பட்டுவருகிறது. இங்கு, வட மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமானவர்கள் கூலித்தொழிலாளர்களாக வேலை செய்துவருகின்றனர். அதேபோல, சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் வேலை செய்துவருகிறார். இவரிடம், சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த அவருடைய நண்பரான 17 வயது சிறுவன் தனக்கும் கோழிப்பண்ணையில் வேலை வாங்கித் தருமாறு கேட்டிருக்கிறார். அதற்கு அந்த அந்த நபர் அனுமதி தரவே, அந்தச் சிறுவன் தனது காதலி போதி மாண்டவி (16) என்பவருடன் மோகனூர் அருகேயுள்ள நொச்சிப்பட்டிக்கு வந்துள்ளார். இதையடுத்து சிறுவன், காதலி போதி மாண்டவி ஆகியோரை கோழிப்பண்ணை உரிமையாளரிடம் சிறுவனின் நண்பர் அழைத்துச் சென்றுள்ளார். ஆனால், அந்தக் கோழிப்பண்ணை உரிமையாளர், 'குழந்தைத் தொழிலாளர்களை வேலைக்குச் சேர்க்க முடியாது. சட்டப் பிரச்னை ஏற்படும். அவர்களை உடனே இங்கிருந்து அழைத்துச் செல்' என்று கோபமாகத் தெரிவித்துள்ளார். இதனால், மோகனூர் பகுதியில் தங்கியிருக்கும் தங்கள் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவரோடு, அந்தச் சிறுவனும் சிறுமியும் தங்கியிருந்துள்ளனர்.

இந்நிலையில், சிறுவன் செல்போனில் வேறு ஒரு பெண்ணுடன் பேசக்கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இதைப் பார்த்த போதி மாண்டவி, 'யாருடன் பேசிக்கொண்டிருக்கிறாய்... நான் இருக்கும்போது, வேறு எந்தப் பெண்ணோடு பேசிக்கொண்டிருக்கிறாய்?' என்று சந்தேகத்துடன் கேட்டதாகத் தெரிகிறது. அப்போது, அவர்களுக்கு இடையே வாய்த் தகராறு ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த அந்தச் சிறுவன், தன்னைச் சந்தேகப்பட்டு பேசிய காதலியின் துப்பட்டாவால் போதி மாண்டவியின் கழுத்தை இறுக்கியதாகச் சொல்லப்படுகிறது. இதனால், அந்தச் சிறுமி துடிதுடித்து இறந்துள்ளார். இதை அறிந்ததும் சிறுவன் அங்கிருந்து தப்பி ஓடியிருக்கிறான். இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மோகனூர் காவல் நிலைய போலீஸார், போதி மாண்டவியின் உடலை மீட்டு, உடற்கூராய்வு செய்வதற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இது குறித்து, வழக்கு பதிவுசெய்த மோகனூர் காவல் நிலைய போலீஸார் தப்பியோடிய சிறுவனைக் கைதுசெய்தனர். தொடர்ந்து, அந்தச் சிறுவனிடம் போலீஸார் தொடர் விசாரணை நடத்திவருகின்றனர்.
