Published:Updated:

மலை உச்சியில் `கேம்ப்', விடிய விடிய ஆட்டம்... `போதை'கானலாக மாறிய கொடைக்கானல்! #TamilnaduCrimeDiary

கொடைக்கானல்  #TamilnaduCrimeDiary
கொடைக்கானல் #TamilnaduCrimeDiary

தனியார் `கேம்ப்' என்கிற பெயரில் கொடைக்கானலில் அதிகரித்துவரும் வரமுறையற்ற `கேம்ப்'களால் போதைப் பொருள் நடமாட்டம் கொடைக்கானலில் அதிகரித்துள்ளது. #TamilnaduCrimeDiary

கொடைக்கான‌ல் சுற்றுலாத் தளம் என்ற நிலைமாறி, தற்போது போதை விருந்துகளின் சொர்க்கபுரியாக மாறியிருக்கிறது. விதிமுறை மீறிக் கட்டப்பட்ட கட்டடங்களை சீல் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டதால் பல்வேறு தங்கும் விடுதிகள் பூட்டிக் கிடக்கின்றன. இந்தநிலையில், நகர்ப் பகுதிக்கு வெளியே மேல்மலைப் பகுதிகளில் உள்ள தனியார் நிலங்களில் `கேம்பயர் கேம்ப்' என்ற பெயரில் போதை வியாபாரம் கொடிகட்டிப் பறக்கிறது.

கேம்ப்
கேம்ப்

இந்த `'கேம்ப்' நடத்துபவர்கள், வனத்துறை, காவல்துறை என யாரிடமும் அனுமதி வாங்குவதில்லை. மலைகளிலுள்ள தனியார் நிலத்தில் டென்ட் போடுகிறார்கள். அதில் தங்கிக்கொள்ளலாம். முறையான கழிப்பிட வசதிகூட இருக்காது. 'கேம்ப்' நடத்துபவர்களே உணவு கொடுத்து விடுவார்கள். இரவு தங்கும்போது, குளிருக்கு இதமாக நெருப்பு மூட்டி விடுவார்கள். தங்கி இருப்பவர்கள் கஞ்சா, போதை ஸ்டாம்ப் எனப் பயன்படுத்தி போதையில் ஆடிப்பாடிக் கொண்டாட்டமாக இருக்கலாம். போதை வஸ்து இல்லாமல், தங்குவதற்கு மட்டும் ஒருநபருக்கு 2 ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரை வசூல் செய்கிறார்கள்.

கொடைக்கானல் போதை காளானுக்குப் பெயர் போன இடம். ஆனால், அது ஆண்டு முழுவதும் கிடைக்காது. தற்போது அதையெல்லாம் தாண்டி ராஜ போதைக்கு இளைஞர்களை அழைத்துச் செல்கிறார்கள் இங்குள்ள சில போதைப் பொருள் வியாபாரிகள். முகநூல், வாட்ஸ் அப் மூலமாக இவர்களது வியாபாரம் கொடிகட்டிப் பறக்கிறது. சமூக வலைதளங்கள் மூலமாக `கேம்ப்' நடத்தும் இடம், தேதி அறிவிக்கப்பட்டு, இளைஞர்களை இழுக்கிறார்கள்.

கேம்ப்
கேம்ப்

கடந்த பிப்ரவரி 6-ம் தேதி இரவு, குண்டுப்ப‌ட்டி ப‌குதியில் உள்ள‌ த‌னியார் தோட்ட‌த்தில் போதை விருந்துக்காக 250-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கூடினார்கள். வெவ்வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்களான இவர்கள், இணையம் மூலமாக இணைந்தவர்கள். இக்கூட்டத்தில் ஐ.டி. நிறுவன ஊழியர்கள், கல்லூரி மாணவர்கள்தான் அதிகம். விருந்துத் தகவலை மோப்பம் பிடித்த மதுரை சிறப்பு போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீஸார், அந்த இடத்தைச் சுற்றி வளைத்து, அக்கும்பலிடமிருந்து போதைப் பொருள்களைக் கைப்பற்றினர். பல்வேறு விதமான இந்த போதை வஸ்துகளைப் பார்த்து போலீஸாரே மிரண்டுவிட்டார்கள்.

`கைநீட்டி அடித்திருக்கக் கூடாது!' -தாயுடன் மன்னிப்பு கேட்கச் சென்ற சென்னை இளைஞருக்கு நேர்ந்த துயரம்

தென்மண்டல ஐ.ஜி.சண்முகராஜேஷ்வரன் உத்தரவின் பேரில் 3 டி.எஸ்.பிக்கள், 4 இன்ஸ்பெக்டர்கள், 100 போலீஸார் இந்தச் சோதனையில் ஈடுபட்டனர். நில‌த்தின் உரிமையாள‌ர் குண்டுப்பட்டியைச் சேர்ந்த க‌ற்ப‌க‌ம‌ணி ம‌ற்றும் விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்த‌ திண்டுக்கல் ஹரிஸ்குமார், த‌ருண்குமார் ஆகியோரை கைது செய்து விசார‌ணை மேற்கொண்டுள்ளனர். பிடிபட்ட 260 நபர்களை, இனி வரும் காலங்களில் இது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என எச்சரிக்கை செய்து போலீஸ் விடுவித்துள்ளது.

சம்பவ இடத்தில் போலீஸார்
சம்பவ இடத்தில் போலீஸார்

கொடைக்கானல் போதைக் காளான்களுக்கு என்றுமே ஒரு மவுசு உண்டு. கொடைக்கானல் ஏரியைச் சுற்றியுள்ள துரித உணவகங்களில், காளான் ஆம்பலெட், காளான் தோசை என்கிற பெயரில் விற்கப்படும் இந்த போதைக் காளான் உணவுகளை சாப்பிடுவதற்கே, வார இறுதி நாள்களில் இளசுகள் கொடைக்கானலுக்குப் படையெடுப்பார்கள். காவல்துறை விழிப்புடன் நடவடிக்கை எடுத்ததால், தற்போது போதைக் காளான் பொதுவெளியில் விற்கப்படுவது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. காளான் சீசன் தொடங்கிய பின்னர் தான், இதில் நடைபெறும் முறைகேடுகள் வெளிச்சத்துக்கு வரும்.

காளான் போதைக்கு மயங்கிய இளைஞர்கள் தற்போது கேம்ப் போதைக் கலாசாரத்துக்குத் தாவியுள்ளனர். தனியார் நிலங்களில், போலீஸார் அனுமதியின்றி 'டென்ட்' அமைப்பதை முறைப்படுத்த வேண்டும். அதுவரை இது போன்ற நடவடிக்கைகளைத் தடுக்க முடியாது எனக் கொடைக்கானல் நகரவாசிகள் புலம்புகிறார்கள். செவி மடுக்குமா அரசு?

அடுத்த கட்டுரைக்கு