Published:Updated:

நீலகிரி: கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத இளம்பெண்; அத்துமீறிய 60 வயது நபர்! போலீஸ் கைது!

பாலியல் தொல்லை
பாலியல் தொல்லை ( representational )

வட்டிக்குக் கொடுத்த பணத்தைத் திருப்பிக் கொடுக்க முடியாத இளம்பெண்ணிடம் அத்துமீறிய நபரைக் காவல்துறையினர் கைதுசெய்தனர்.

`பெண்களுக்கும் பெண் குழந்தைகளுக்கும் மிகவும் பாதுகாப்பான மாவட்டம்’ என்று சொல்லப்பட்டுவந்த நீலகிரி மாவட்டத்தில், தற்போது பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் எதிரான வன்கொடுமைகள் நாள்தோறும் நிகழ்த்தப்பட்டுவருகின்றன. அதேபோல் குழந்தைத் திருமணங்களும் அதிகரித்த வண்ணமே உள்ளன. ஊட்டியிலும் குன்னூரிலும் நேற்று ஒரே நாளில் இரண்டு போக்சோ வழக்குகள் பதிவாகியுள்ளன. நீலகிரி மாவட்டம், பந்தலூர் பகுதியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். 60 வயதான இவர், பந்தலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளிலுள்ள மக்களுக்கு வட்டிக்குக் கடன் கொடுத்து வசூலித்துவருகிறார். 23 வயதான இளம்பெண் ஒருவர் பாலகிருஷ்ணனிடம் வட்டிக்குக் கடன் வாங்கியிருக்கிறார்.

பாலியல் தொல்லை
பாலியல் தொல்லை
representational image

உரிய‌ நேரத்தில் வட்டித் தொகையைத் திருப்பிக் கொடுக்க முடியாத நிலை அவருக்கு ஏற்பட்டுள்ளது. அந்தக் காரணத்தால் பாலகிருஷ்ணன் தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக அந்தப் பெண் அளித்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு பாலகிருஷ்ணனைக் கைதுசெய்தனர்.

இது குறித்து தெரிவித்த காவல்துறையினர், ``மகளிர் காவல் ஆய்வாளர் சுசீலா தலைமையில் விசாரணை மேற்கொண்டதில், இளம்பெண்ணிடம் அந்த நபர் அத்துமீறியது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து பாலகிருஷ்ணன் மீது வழக்கு பதிவு செய்து கைதுசெய்தோம்" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு