Published:Updated:

நீலகிரி:`பெண் கொலை; கொரோனா என நாடகமாடிய போலீஸ் எஸ்.ஐ; விசாரணையில் வெளிவந்த உண்மை!'

பெண் கொலை
பெண் கொலை

ஊட்டியில் பெண்ணைக் கொலை செய்துவிட்டு, கொரோனாவால் உயிரிழந்தார் என நாடகமாடிய காவல்துறை க்யூ பிரிவு உதவி ஆய்வாளரை காவல்துறையினர் கைதுசெய்தனர்.

நீலகிரி மாவட்டம், ஊட்டியில் பி1 காவல் நிலையக் குடியிருப்பில் வசித்துவந்தவர் முஸ்தபா. 55 வயதான இவர், நீலகிரி மாவட்ட காவல்துறையில் க்யூ பிரிவு உதவி ஆய்வாளராகப் பணியாற்றிவந்தார். இவருக்கும், காந்தல் பகுதியைச் சேர்ந்த 51 வயதுடைய மாகி என்ற பெண்ணுக்கும் திருமணம் தாண்டிய உறவு இருந்ததாகத் தெரிகிறது. இந்தநிலையில், மாகிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு, சமீபத்தில் சிகிச்சை பெற்று மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ளார்.

எஸ்.ஐ முஸ்தபா
எஸ்.ஐ முஸ்தபா

நேற்று இரவு எஸ்.ஐ முஸ்தபா, ஊட்டி மத்திய பஸ் நிலையம் அருகிலுள்ள ஒரு தங்கும் விடுதிக்கு மாகியை அழைத்துச் சென்றுள்ளார். பிறகு, கொரோனாவால் மாகி உயிரிழந்துவிட்டதாக, மாகியின் உடலைத் துணியில் சுற்றி, காரில் எடுத்துச் சென்று, அவரது வீட்டில் ஒப்படைத்துள்ளார். உடலைப் பெற்ற உறவினர்கள், மாகியின் முகம் மற்றும் உடலில் காயங்கள் இருப்பதைக் கண்டு சந்தேகம் அடைந்தனர். உடனடியாக ஊட்டி ஜி1 காவல் நிலையத்துக்குப் புகார் அளித்துள்ளனர். இதைத் தொடர்ந்து, அங்கு வந்த காவல்துறையினர் மாகியின் உடலை மீட்டு உடற் கூறாய்வுக்காக அனுப்பிவைத்தனர்.

இந்த விவகாரம் குறித்துப் பேசிய காவலர் ஒருவர், ``இருவருக்கும் இடையே பல ஆண்டுகளாக திருமணம் தாண்டிய உறவு இருந்துவந்துள்ளது. நேற்று இரவு இருவரும் மது அருந்தியுள்ளதாகத் தெரிகிறது. அப்போது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், மாகியைக் கண் மூடித்தனமாக முஸ்தபா தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த மாகி உயிரிழந்துள்ளார்.

ஊட்டி போலீஸார்
ஊட்டி போலீஸார்

எஸ்.ஐ முஸ்தபாவை அழைத்துச் சென்று ஊட்டி ஜி1 காவல் நிலையத்தில் விசாரணை மேற்கொண்டோம். அப்போது, மாகியை குடிபோதையில் அடித்துக் கொன்றதை முஸ்தபா ஒப்புக்கொண்டார். அவர்மீது வழக்கு பதிவு செய்து, கைதுசெய்துள்ளோம். தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுவருகிறோம்’’ என்றார்.

அடுத்த கட்டுரைக்கு