Published:Updated:

ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி கோயில்களில் சிறப்பு தரிசனம்; பழநியில் பிளம்பர் கைது!

திருச்செந்தூர், மீனாட்சி அம்மன் கோயிலில் ஐ.ஏ.எஸ் எனக் கூறி சிறப்பு தரிசனம் முடித்துவிட்டு, பழநி முருகனை தரிசிப்பதற்கு வந்தபோது தேவஸ்தான தங்கும் விடுதியில் இலவசமாக அறை கேட்ட எலெக்ட்ரீஷியனை போலீஸார் கைதுசெய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம், மாயவரத்தைச் சேர்ந்தவர் குமார் (47). இவர் பழநி மலை அடிவாரத்திலுள்ள தேவஸ்தான தங்கும் விடுதிக்குச் சென்று தன்னை ஐ.ஏ.எஸ் அதிகாரி என்று அறிமுகப்படுத்திக்கொண்டார். மேலும் அவருடன் வந்திருந்த 10 பேர் தங்குவதற்கு இலவசமாக அறை வழங்குமாறும் கேட்டிருக்கிறார்.

வழக்கமாக ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பழநிக்கு வந்தால் உள்ளூர் வருவாய்த்துறை அதிகாரிகள் மூலம் தேவஸ்தான தங்கும் விடுதிக்கு முன்கூட்டியே தகவல் கொடுக்கப்படுவது வழக்கம். அவ்வாறு வருவாய்த்துறை அதிகாரிகளிடமிருந்து எவ்வித தகவலும் வராததால், விடுதி மேலாளர் அடையாள அட்டையைக் கேட்டும், பழநியிலுள்ள வருவாய்த்துறை அதிகாரி ஒருவரை பரிந்துரை செய்யவும் கேட்டிருக்கிறார். அப்போது மேலாளரிடம் குமார் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்திருக்கிறார். இதனால் சந்தேகமடைந்த விடுதி மேலாளரும் கோயில் ஊழியர்களும் பழநி அடிவாரம் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர்.

இதையறிந்த குமார் அங்கிருந்து தப்பி ஓடியபோது கோயில் ஊழியர்கள் அவரைத் துரத்திச் சென்று பிடித்தனர். இதையடுத்து அங்கு வந்த பழநி அடிவாரம் போலீஸாரிடம் குமார் ஒப்படைக்கப்பட்டார்.

``கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருக்கின்றனவா!"- நாமக்கலில் கைதான போலி அதிகாரி
போலி ஐ.ஏ.எஸ்
போலி ஐ.ஏ.எஸ்

போலீஸார் நடத்திய விசாரணையில், மயிலாடுதுறையில் வசித்துவரும் குமார். பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு ஐடிஐ-யில் படித்திருக்கிறார். இதையடுத்து பிளம்பர் மற்றும் எலெக்ட்ரீஷியனாக வேலை பார்த்துவந்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு சீர்காழி பேருந்து நிலையத்துக்குள் காரில் சென்றிருக்கிறார். அப்போது அங்கிருந்தவர் காரை வெளியேற்றச் சொன்னபோது தன்னை ஆர்டிஓ எனக் கூறியிருக்கிறார். அரசு அதிகாரி எனக் கூறியதால் அவருக்கு மரியாதை கிடைத்திருக்கிறது. அதைத் தொடர்ந்து பல்வேறு இடங்களில் இன்ஸ்பெக்டர், தாசில்தார், ஐ.பி.எஸ்., ஐ.ஏ.எஸ் எனப் பலரிடம் கூறி சிறு சிறு சலுகைகளை அனுபவித்துவந்தார்.

இந்த நிலையில் ஒருவரிடமிருந்து வாங்கிய பழைய ஸ்கார்பியோ கார் பழுதானதால், கும்பகோணத்தைச் சேர்ந்த மெக்கானிக்கிடம் தன்னை ஐ.ஏ.எஸ் என அறிமுகப்படுத்தியிருக்கிறார். அந்த மெக்கானிக்கும் காரை இலவசமாக வேலை பார்த்துக் கொடுத்தார். அப்போது கோயில்களுக்குச் செல்ல வேண்டும் எனக் கூறவே நானே இலவசமாக அழைத்துச் செல்கிறேன் எனக் கூறியிருக்கிறார்.

கார்
கார்

காரில் சைரன், தமிழக இலச்சினை, தேசியக்கொடியைப் பொருத்தி, அவருக்கு ஐ.ஏ.எஸ் அடையாள அட்டையைத் தயாரித்துவிட்டு மெக்கானிக் குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து குழந்தைகள், மூன்று பெண்கள் உட்பட 10 பேரை காரில் அழைத்துக் கொண்டு திருச்செந்தூர் சென்றிருக்கிறார். அங்கு தன்னை ஐ.ஏ.எஸ் என்று கூறி இலவசமாக தரிதனம் செய்திருக்கிறார். இதேபோல மதுரை மீனாட்சி அம்மன் கோயிலிலும் இலவச தரிசனத்தை முடித்துக்கொண்டு பழநிக்கு அவர் வந்தது தெரியவந்தது. இதையடுத்து குமாரைக் காவல்துறையினர் கைதுசெய்து சிறையில் அடைத்திருக்கிள்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு