Published:Updated:

`கள்ளத்துப்பாக்கியா.. லைட்டரா..?'- செங்கல்பட்டு தனியார் பல்கலைக்கழக மாணவர்கள் மோதலில் நடந்தது என்ன?

துப்பாக்கி கத்தியுடன் எஸ்.ஆர்.எம் மாணவர்கள் மோதல்
துப்பாக்கி கத்தியுடன் எஸ்.ஆர்.எம் மாணவர்கள் மோதல்

ஒரு பிரிவில் உள்ள மாணவர்கள் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் மற்றொரு பிரிவினரைத் தாக்கினர். பதிலுக்கு அவர்களும் தாக்கத் தொடங்கினார்கள். அப்போது ஒரு மாணவன் கையில் துப்பாக்கியை வைத்துத் துரத்தும் வீடியோ தற்போது வைரலாகப் பரவிவருகிறது.

துப்பாக்கி மற்றும் கத்தியுடன் தனியார் பல்கலைக்கழக மாணவர்கள் மோதிக்கொண்ட வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. மாணவர்களிடம் எப்படி துப்பாக்கி வந்தது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம்
எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம்

செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூரில் உள்ளது எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம். பல்வேறு நாடுகள் மற்றும் மாநிலங்களிலிருந்தும் மாணவர்கள் இங்கு படிக்கிறார்கள். வெளிமாநில மாணவர்கள் கல்லூரி அல்லது தனியாக வீடு எடுத்து தங்குகிறார்கள். அப்பகுதியில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களின் புழக்கம் அதிகமாக இருப்பதால், சட்டவிரோதக் கும்பலுடன் சில மாணவர்கள் இணக்கமாக இருக்கிறார்கள் என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகிறார்கள். இவர்கள் என்ன செய்கிறார்கள் என்ற விவரங்கள் கூட பெரும்பாலான பெற்றோர்களுக்குத் தெரிவதில்லை. அடிக்கடி கல்லூரியில் மோதல்கள் நடப்பதும் வாடிக்கை. ஆனால், கத்திகளுடன் நேற்று மாணவர்கள் மோதிக்கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பல்கலைக்கழக நுழைவுப் பகுதியில் உள்ள கேன்டீனில் நேற்று மதியம் எம்.பி.ஏ பயிலும் இருதரப்பு மாணவர்களிடையே மோதல் வெடித்தது. அப்போது ஒரு பிரிவில் உள்ள மாணவர்கள் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் மற்றொரு பிரிவினரைத் தாக்கினர். பதிலுக்கு அவர்களும் தாக்கத் தொடங்கினார்கள்.

துப்பாக்கியுடன் மாணவர்
துப்பாக்கியுடன் மாணவர்

அப்போது ஒரு மாணவன் கையில் துப்பாக்கியை வைத்துத் துரத்தும் வீடியோ தற்போது வைரலாகப் பரவிவருகிறது. கடந்த நவம்பரில் வேங்கடமங்களம் பகுதியில் முகேஷ் என்ற பாலிடெக்னிக் மாணவர் சக நண்பரால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த அதிர்ச்சி விலகுவதற்குள் டிசம்பர் மாதம் திருப்போரூர் அருகே நெல்லிக்குப்பம் பகுதியில் நகைக்கடை ஒன்றில் கொள்ளையடிப்பதற்காக கொள்ளையர்கள் துப்பாக்கியுடன் புகுந்த சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பானது.

`கஞ்சா விற்றார்களா தஞ்சை கல்லூரி மாணவர்கள்?- வைரல் போட்டோவும்... போலீஸாரின் பதிலும்...!

இந்த நிலையில் கல்லூரி நிர்வாகத் தரப்பில் பேசினோம். ``மாணவர்களிடையே சண்டை நடந்தது குறித்து தகவல் வந்திருக்கிறது. இந்தச் சம்பவம் குறித்து விசாரித்து வருகிறோம். முழுமையாக விசாரித்த பிறகுதான் என்ன நடந்தது எனச் சொல்லமுடியும்“ என்கிறார்கள்.

செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி. கண்ணனிடம் பேசினோம். ``மாணவர் துப்பாக்கி வைத்திருப்பதாக வெளியான வீடியோவைத் தொடர்ந்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். அந்த மாணவர் கையில் வைத்திருப்பது துப்பாக்கி இல்லை, சிகரெட் பற்ற வைக்கும் லைட்டர் என்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கத்தியுடன் இருக்கும் மாணவர்கள் யார் என்பதையும் கண்டுபிடித்து விசாரணை நடத்தி வருகிறோம்“ என்கிறார்.

பின் செல்ல