புதுச்சேரி, திருபுவனையை அடுத்த சன்னியாசிகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜன். இவரின் மனைவி மயில் என்பவர் இறந்துவிட்டதால், இரண்டாவதாக வேறொரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார். இந்தத் தம்பதியின் மகள் கலிதீர்த்தாள்குப்பத்தில் இருக்கும் காமராஜர் அரசு கலைக்கல்லூரியில் பி.காம்., படித்துவந்தார். நாகராஜின் முதல் மனைவி மயிலின் தம்பி மகன் முகேஷ் என்பவர் அந்த மாணவியை ஒருதலைப் பட்சமாக காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், மாணவி நேற்று செவ்வாய்க்கிழமை மாலை கல்லூரி முடிந்ததும், வழக்கம்போல தனியார் பேருந்து மூலம் வீட்டுக்கு திரும்பியிருக்கிறார்.

பேருந்திலிருந்து அவர் சன்னியாசிகுப்பத்தில் இறங்கியதும் அங்கு நின்றிருந்த முகேஷ், அவரிடம் பேசுவதற்கு முயற்சி செய்திருக்கிறார். ஆனால் அவரிடம் பேசுவதை தவிர்த்த மாணவி வீட்டை நோக்கி நடந்திருக்கிறார். அதில் ஆத்திரமடைந்த முகேஷ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரை சரமாரியாக வெட்டியிருக்கிறார். அதில் கழுத்து, தலை உள்ளிட்ட இடங்களில் பலமான வெட்டுக்காயங்கள் ஏற்பட, ரத்தவெள்ளத்தில் அங்கேயே சரிந்து விழுந்திருக்கிறார் மாணவி. அவர் இனி உயிர் பிழைக்கமாட்டார் என்பதை உறுதிப்படுத்திக்கொண்ட முகேஷ், நிதானமாக அங்கிருந்து தப்பியோடியிருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இந்தச் சம்பவத்தை பார்த்துக்கொண்டிருந்த அந்தப் பகுதி மக்கள், கீர்த்தனாவின் தம்பிக்கு செல்போன் மூலம் தகவல் கொடுத்திருக்கின்றனர். அதையடுத்து அங்கு விரைந்துவந்த அவர், உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த கீர்த்தனாவை இருசக்கர வாகனத்தில் தூக்கிச் சென்று அருகிலிருந்த தனியார் மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார். அங்கு கீர்த்தனாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தகவலறிந்து மருத்துவமனைக்கு வந்த கீர்த்தனாவின் பெற்றோர் அவர் சடலத்தைப் பார்த்து கதறியழுதனர். அதையடுத்து கீர்த்தனாவின் உடலை உடற்கூறாய்வு சோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிய திருபுவனை போலீஸார், கொலை வழக்கு பதிவுசெய்து தப்பியோடிய முகோஷை தேடி வருகின்றனர்.
மாணவியை கொலைசெய்த ரௌடி முகேஷ்மீது வெடிகுண்டு வீச்சு, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை அதிகாரிகளிடம் பேசியபோது, ``ரௌடி முகேஷ்மீது நிறைய வழக்குகள் இருக்கின்றன. முகேஷ், தங்கள் மகளை ஒருதலைப் பட்சமாக காதலித்து தொல்லைக் கொடுத்து வந்ததாக மாணவியின் உறவினர்கள் கூறுகிறார்கள். கொலைசெய்வதற்கு முன்பும், `எனக்கு கிடைக்காத நீ யாருக்கும் கிடைக்கக் கூடாது!” என்று முகேஷ் கூறியதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகிறார்கள். ஆனால் தற்போது தலைமறைவாக இருக்கும் கொலைக் குற்றவாளி முகேஷ் கைதுசெய்யப்பட்டால்தான் முழு உண்மையையும் கூற முடியும்” என்றனர்.