Published:Updated:

காலையில் காதல் திருமணம், மாலையில் மர்ம மரணம்! - புதுமாப்பிள்ளைக்கு நேர்ந்த சோகம்

மரணம்

காலையில் திருமணம் முடிந்த நிலையில், அன்று மாலையே மாப்பிள்ளை மர்ம மரணம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

காலையில் காதல் திருமணம், மாலையில் மர்ம மரணம்! - புதுமாப்பிள்ளைக்கு நேர்ந்த சோகம்

காலையில் திருமணம் முடிந்த நிலையில், அன்று மாலையே மாப்பிள்ளை மர்ம மரணம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
மரணம்

புதுச்சேரியை அடுத்திருக்கும் விழுப்புரம் மாவட்டம், பெரிய கோட்டக்குப்பத்தைச் சேர்ந்த கோமதியும், சென்னை தாம்பரத்தைச் சேர்ந்த சுரேஷ்குமார் என்பவரும் பெரம்பலூரிலுள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தனர். அப்போது இருவருக்கும் ஏற்பட்ட நட்பு, காதலாக மாறியது. கல்லூரி படிப்புக்கு பின்பு சுரேஷ்குமார் சென்னையில் உள்ள தனியார் நிதி நிறுவனத்திலும், கோமதி கோட்டக்குப்பம் நகராட்சியில் ஒப்பந்த ஊழியராகவும் பணியாற்றினர். அதையடுத்து தாங்கள் இருவரும் காதலிப்பதாகவும் திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகவும் தங்கள் பெற்றோரிடம் கூற, அவர்களும் சம்மதம் தெரிவித்திருக்கின்றனர்.

உயிரிழந்த புதுமாப்பிள்ளை சுரேஷ்குமார்
உயிரிழந்த புதுமாப்பிள்ளை சுரேஷ்குமார்

அதையடுத்து இருவருக்கும் திருமணம் நிச்சியிக்கப்பட்டு, புதுவை காலாப்பட்டு பாலமுருகன் கோயிலில் நேற்று முன் தினம் திருமணம் நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டது. அதற்காக சுரேஷ்குமார் தன் பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் கோட்டக்குப்பத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் தங்கியிருந்தார். இருவருக்கும் பாலமுருகன் கோயிலில் நேற்று முன் தினம் காலை திருமணம் நடந்து, அன்று மாலையில் கோட்டக்குப்பத்தில் திருமண வரவேற்பும் நடந்தது. அதில் இருதரப்பு உறவினர்களும், நண்பர்களும் கலந்துகொண்டனர்.

இரவு வரவேற்பு முடிந்த பின்னர், சிறிது நேரம் ஓய்வெடுப்பதற்காக தான் தங்கியிருந்த விடுதிக்குச் சென்றார் சுரேஷ்குமார். அப்போது அங்கு திடீரென சுரேஷ்குமார் மயங்கி விழுந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் உறவினர்கள், உடனே அவரை ஜிப்மர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். அதைக் கேட்டு சுரேஷ்குமாரின் பெற்றோரும், உறவினர்களும் கதறி அழுதனர். அதனைத் தொடர்ந்து சுரேஷ்குமாரின் தந்தை காளிதாஸ் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவுசெய்த கோட்டக்குப்பம் காவல் நிலைய போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இது குறித்து கோட்டக்குப்பம் இன்ஸ்பெக்டர் ராபின்சனிடம் பேசியபோது, “சுரேஷ்குமார் உயிரிழந்ததற்கான சரியான காரணம் இதுவரை தெரியவில்லை. இருவரும் ஒருவருக்கொருவர் காதலித்து, இருவீட்டார் சம்மதத்துடன்தான் திருமணம் செய்துகொண்டனர். இருவீட்டாரும் ஒற்றுமையுடன்தான் இருக்கின்றனர். உடை மாற்றும்போது மயங்கி விழுந்து இறந்திருக்கிறார். சுரேஷ்குமாரின் உடலுறுப்புகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டிருக்கின்றன. அதன் முடிவுகள் வந்தபின்னரே அவர் இறந்ததற்கான காரணமும் தெரியவரும்” என்றார்.