Published:Updated:

புதுக்கோட்டை: சிறார் வதை; கொடூரக் கொலை! -குற்றவாளிக்கு மூன்று மரண தண்டனைகள் விதித்த மகிளா நீதிமன்றம்

குற்றவாளி ராஜா
குற்றவாளி ராஜா

கடந்த ஜூலையில் அரசு மருத்துவனைக்கு மருத்துவப் பரிசோதனைக்காக போலீஸார் அழைத்துச் சென்றபோது குற்றவாளி ராஜா தப்பித்து ஓடினார். போலீஸாரின் தீவிர தேடுதலுக்குப் பிறகு மாலையில் மீண்டும் கைதுசெய்யப்பட்டார். தற்போது ராஜாவுக்கு மரண தண்டனை கிடைத்திருக்கிறது.

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகேயுள்ள ஏம்பல் கிராமத்தைச் சேர்ந்த 7 வயது சிறுமி, கடந்த ஜூலை 30-ம் தேதி பக்கத்து வீட்டைச் சேர்ந்த சாமுவேல் (எ) ராஜாவால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, முகம் சிதைக்கப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது குறித்து ஏம்பல் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, குற்றத்தைச் செய்தது ராஜா என உறுதியானதுடன் போலீஸார் ராஜவைக் கைதுசெய்தனர்.

விசாரணை
விசாரணை

குற்றவாளிக்கு உடனடியாக தண்டனை வழங்க வேண்டும் என சமூக வலைதளங்களில் அரசியல் கட்சியினர் தொடங்கி பல்வேறு அமைப்பினரும் தங்களது கண்டனங்களை எழுப்பினர். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அந்தக் குடும்பத்துக்கு நிதி உதவி செய்ததோடு, குற்றவாளிக்கு உரிய தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு, புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது. கடந்த செப்டம்பர் 9-ம் தேதி வழக்கு கோப்புக்கு எடுக்கப்பட்டு மூன்று மாத காலத்துக்குள் அரசுத் தரப்பு விசாரணைகள் அனைத்தும் முடிக்கப்பட்டன. இந்தநிலையில்தான் 29.12.20 இந்த வழக்கின் இறுதித் தீர்ப்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தீர்ப்பளித்த மகிளா நீதிமன்ற நீதிபதி சத்யா, சிறுமியைக் கொடூரமாகக் கொலை செய்ததற்காகப் பிரிவு 302-ன் கீழ் மரண தண்டனையும், பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் திருத்தச் சட்டம் 2019-ன் கீழ் இரண்டு மரண தண்டனைகளும் என மொத்தம் மூன்று மரண தண்டனைகள் விதித்து அதிரடி தீர்ப்பளித்தார்.

நீதிமன்றம்
நீதிமன்றம்

அதோடு, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் ஆயுள்கால சிறைத் தண்டனையும், பிரிவு 323-ன் கீழ் ஏழு வருடக் கடுங்காவல் தண்டனையும், ரூ.5,000 அபராதமும் அதைக் கட்டத்தவறினால் இரண்டு மாதம் கடுங்காவல் சிறைத் தண்டனையும், பிரிவு 201-ன் கீழ் ஏழு வருடக் கடுங்காவல் தண்டனையும், ரூ.5,000 அபராதமும், கட்டத்தவறினால் இரண்டு மாதம் கடுங்காவல் தண்டனையும் எனக் குற்றவாளி ராஜாவுக்கு அடுத்தடுத்த தண்டனைகளை விதித்து அதிரடி தீர்ப்பை வெளியிட்டார். அதோடு, கொலை செய்யப்பட்ட சிறுமியின் தாயாருக்கு ரூ.5,00,000 இழப்பீடு வழங்கியும் உத்தரவிட்டார்.

தீர்ப்புக்கு முன்னதாக குற்றவாளியை நீதிபதி பேச அனுமதித்தபோது, குற்றவாளி ராஜா, ``அப்பா, அம்மாவை நான்தான் பார்த்துக்கொள்ள வேண்டும். என்னைவிட்டால் அவர்களுக்கு வேறு யாருமில்லை. எனக்குக் குறைவான தண்டனை கொடுங்கள்” என்று கூறிக் கெஞ்சினார். நீதிபதி சத்யா, ``குற்றம் செய்வதற்கு முன்பு ஏன் இதைப் பற்றி யோசிக்கவில்லை” என்று கூறிவிட்டு தனது தீர்ப்பை வாசித்தார். கடந்த ஜூன் மாதம் குற்றம் நடைபெற்ற நிலையில், ஆறு மாதங்களுக்குள் வழக்கு விசாரணை முடிந்து, தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இந்த அதிரடித் தீர்ப்பால், சிறுமியின் பெற்றோர், உறவினர்கள் ஆறுதல் அடைந்திருப்பதாகத் தெரிவித்தனர்.

காவல்துறையினர்
காவல்துறையினர்

சிறுமியின் உறவினர் விஜய், ``பிஞ்சுக் குழந்தையின் முகத்தைச் சிதைத்து கொடூரமாகக் கொலை செய்தான். அவனுக்கு மரண தண்டனை விதிக்கும் அந்த நாளுக்காகத்தான் ஏங்கிக்கொண்டிருந்தோம். எங்களுடைய பிள்ளை எங்களுக்கு இனி கிடைக்கப்போவதில்லை. அவனால், இனி எந்தப் பிள்ளைக்கும் பாதிப்பு நேராது. இந்தத் தீர்ப்பு மனசுக்கு ரொம்பவே சந்தோஷத்தை கொடுத்திருக்கு. சிறுமிகளை வன்கொடுமை செய்ய நினைக்கும் கயவர்களுக்கு இந்தத் தீர்ப்பு பாடமாக இருக்கும்" என்றார்.

கடந்த ஜூலையில் அரசு மருத்துவனைக்கு மருத்துவப் பரிசோதனைக்காக போலீஸார் அழைத்துச் சென்றபோது குற்றவாளி ராஜா தப்பித்து ஓடினார். போலீஸாரின் தீவிர தேடுதலுக்குப் பிறகு மாலையில் மீண்டும் கைதுசெய்யப்பட்டார். தற்போது ராஜாவுக்கு மரண தண்டனை கிடைத்திருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு