Published:Updated:

புதுக்கோட்டை: மகன்களுக்கு தீ வைத்து, தீக்குளித்த தாய்! - கணவனின் செயலால் விபரீத முடிவு

மகன்களுக்கு தீ  வைத்து தற்கொலை செய்த தாய்
மகன்களுக்கு தீ வைத்து தற்கொலை செய்த தாய்

அலறல் சத்தம் கேட்ட உறவினர்கள் உள்ளே சென்று பார்த்தபோது, ராதாவும் அபிருத்தும் முழுவதுமாக எரிந்து கிடந்திருக்கிறார்கள். தீக்காயங்களுடன் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த அபிஷேக்கை சிகிச்சைக்கு அனுப்பினர்.

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே வல்லம்பக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் முத்து (45). இவர் மனைவி ராதா (38). இந்தத் தம்பதியருக்கு அபிஷேக் (13), அபிருத் (11) என்ற இரண்டு மகன்கள். முத்துவுக்குக் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் ரெத்தினக்கோட்டையைச் சேர்ந்த இளம் பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. அந்தப் பழக்கம், நாளடைவில் திருமணம் தாண்டிய உறவாக மாறியிருக்கிறது. இருவரும் அடிக்கடி சந்தித்து, தனிமையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் இது பற்றி அறிந்த முத்துவின் மனைவி ராதா, முத்துவைக் கண்டித்திருக்கிறார். இதில் கணவன், மனைவிக்கு இடையே கடுமையான சண்டை ஏற்பட்டிருக்கிறது. இதற்கிடையே முத்து, அந்தப் பெண்ணைக் கூட்டிக்கொண்டு ஊரைவிட்டுச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.

தீ
தீ

இது தொடர்பான புகாரும் அறந்தாங்கி காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்தத் தகவல் முத்துவின் மனைவி ராதாவுக்கு தெரியவர, கடுமையான மன உளைச்சலில் இருந்திருக்கிறார். அக்கம் பக்கத்தினரும் இது பற்றித் தொடர்ந்து விசாரிக்கத் தொடங்க மன உளைச்சலில் இருந்த ராதா, தன் பிள்ளைகளுடன் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்திருக்கிறார். இதற்காக, பெட்ரோல் வாங்கிக்கொண்டு வீட்டுக்குப் போன ராதா, சாப்பிட்டுவிட்டு இரண்டு மகன்களுக்கும் தூக்க மாத்திரைகளைக் கொடுத்து தூங்க வைத்திருக்கிறார். பிறகு படுக்கையறையை உள்பக்கமாகத் தாழ்ப்பாள் போட்டுவிட்டு, தன் மீதும் இரண்டு மகன்கள் மீதும் பெட்ரோலை ஊற்றி, தீ வைத்திருக்கிறார்.

பெட்ரோல் என்பதால் தீ மளமளவென்று எரிந்திருக்கிறது. தீ உடம்பில் பற்றி எரிந்ததால் மூன்று பேரும் அலறித் துடித்திருக்கிறார்கள். அலறல் சத்தம் கேட்ட உறவினர்களான சத்தியமூர்த்தி, ஆனந்த் இருவரும் பூட்டியிருந்த கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்திருக்கிறார்கள். உள்ளே ராதாவும் அபிருத்தும் முழுவதுமாக எரிந்து கிடந்தனர். 90 சதவிகித தீக்காயங்களுடன் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த அபிஷேக்கை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

ராதா, அபிருத், அபிஷேக்
ராதா, அபிருத், அபிஷேக்

இதில், தாய் மற்றும் மகன்களைக் காப்பாற்ற முயன்ற உறவினர்களுக்கும் தீக்காயம் ஏற்பட்டு, இருவரும் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இறந்த ராதா, அபிருத் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன. இது தொடர்பாக நாகுடி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்துவருகின்றனர். குடும்பத்தைச் சரியாக வழிநடத்த வேண்டிய குடும்பத் தலைவரின் தவறான நடத்தையால், ஒரு குடும்பமே சிதைந்துபோயிருக்கிறது. கணவரின் தவறான நடத்தையால் தாய், மகன் இறந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு