Published:Updated:

தற்கொலை விவகாரம்: போஸ்டரால் பரபரப்பு... பாஜக பிரமுகர் மீது சார் பதிவாளர் புகார்! - பின்னணி என்ன?!

தற்கொலை தொடர்பாக ஒட்டப்பட்ட போஸ்டர்
News
தற்கொலை தொடர்பாக ஒட்டப்பட்ட போஸ்டர் ( ம.அரவிந்த் )

கரந்தை பத்திரப்பதிவு அலுவலகத்தின் சார்பதிவாளரான ராணி தற்கொலை விவகாரம் தொடர்பான போஸ்டர் ஒட்டப்பட்டதுக்கு பிஜேபி கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளரான முரளி தான் காரணம் என அவர் மீது போலீஸில் புகார் அளித்ததாக சொல்லப்படுகிறது.

தஞ்சாவூரில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த ஒருவர் கடந்த வாரம் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர்களின் தற்கொலைக்கு சார்பதிவாளர் காரணமா? என தஞ்சாவூர் முழுவதும் ஒட்டப்பட்ட போஸ்டர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், பா.ஜ.க மாவட்டச் செயலாளர் தான் போஸ்டருக்கு காரணம் என்றும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட சார் பதிவாளர் போலீஸில் புகார் அளித்ததை தொடர்ந்து, அந்த பா.ஜ.க பிரமுகரை போலீஸ் கைது செய்ய இருப்பதாக வெளியான தகவல் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

பா.ஜ.க பிரமுகரான முரளி
பா.ஜ.க பிரமுகரான முரளி

தஞ்சாவூர் அருகிலிருக்கும் மேலவெளி மனோ நகரைச் சேர்ந்தவர் ராஜா(38). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவர் கடன் பிரச்னையிலிருந்து வந்ததாகவும், அதனால் கடும் மன உளைச்சலில் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில், கடந்த வாரம் ராஜாவும் அவர் மனைவியும் சேர்ந்து அவர்களின் மகனை கொன்றுவிட்டு, தற்கொலை செய்துகொண்டனர். கடன் பிரச்னையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் இறந்த சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இதையடுத்து கள்ளப்பெரம்பூர் போலீஸார் தற்கொலை விவகாரம் தொடர்பாக வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில், `ராஜா தற்கொலை செய்து கொண்டதற்கு காரணம், கரந்தை சார் பதிவாளரா? என்றும், காவல்துறையும், அரசு பத்திரப்பதிவு துறையும் இது போல நடக்காமல் தடுக்குமா?!' - இங்கனம் மேலவெளி ஊராட்சி பொதுமக்கள் எனக்குறிப்பிடப்பட்டு, தஞ்சாவூர் நகரம் முழுவதும் ஒட்டப்பட்ட போஸ்ட்டர்கள் சலசலப்பை ஏற்படுத்தின.

தற்கொலை செய்து கொண்ட குடும்பம்
தற்கொலை செய்து கொண்ட குடும்பம்

இது குறித்து விவரம் அறிந்த சிலரிடம் பேசினோம். ``ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த ராஜா லே-அவுட் அமைத்து பிளாட் விற்பனை செய்து வந்தார். கொரோனா பரவல் காரணமாக தொழில் முடங்கியதால் பணப் பிரச்னை ஏற்பட்டிருக்கிறது. இதனால் பலரிடம் கடன் வாங்கியிருந்தார். இந்த நிலையில், பத்திரப்பதிவு துறையின் கீழ் இயங்கும் தஞ்சாவூர் கரந்தை பத்திரப்பதிவு அலுவலகத்தில் சார் பதிவாளராக இருக்கும் ராணி, ராஜாவிடம், ராஜா லே-அவுட் அமைத்து விற்பனை செய்த பிளாட்டுகளில் அரசு மதிப்பை குறைத்து காண்பித்து விற்பனை செய்ததாகவும், அதனால் அரசுக்கு இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அத்துடன் அரசுக்கு ரூ.21 லட்சம் செலுத்த வேண்டும் என்றும் ராஜாவிடம் எழுதி வாங்கி கொண்டதாக சொல்லப்படுகிறது. மேலும், குறிப்பிட்ட பணத்தை செலுத்தினால் மட்டுமே உங்களால் லே-அவுட் போடப்பட்ட பிளாட்டுகள் பத்திரம் செய்யப்படும் என கூறியிருக்கிறாராம். இந்த பெரும் சிக்கலிலிருந்து மீள முடியாது என்பதால் மன அழுத்தம் அதிகமானதை தொடர்ந்து ராஜா தன் குடும்பத்தினருடன் தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில், சில தினங்களுக்குப் பிறகு ராஜா குடும்பத்தின் தற்கொலைக்கு கரந்தை சார்பதிவாளர் காரணமா என போஸ்டர் ஒட்டப்பட்டது. பின்னர் கரந்தை பத்திரப்பதிவு அலுவலகத்தின் சார் பதிவாளரான ராணி போஸ்டர் ஒட்டப்பட்டதுக்கு பா.ஜ.க கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளரான முரளி தான் காரணம் என அவர் மீது போலீஸில் புகார் அளித்ததாக சொல்லப்படுகிறது.

இதனை தொடர்ந்து போலீஸும் முரளி மீது நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து முரளியை கைது செய்ய முனைப்புக் காட்டி வருகின்றனர். அதனால், முரளி தற்போது தலைமைறைவாக இருக்கிறார். ராஜா குடும்பத்தினரின் இறுதிச் சடங்குகளை முரளி முன் நின்று செய்தார். பிளாட்டுகளுக்கு அட்வான்ஸ் கொடுத்தவர்கள் பலருக்கு ராஜா பணம் தர வேண்டியிருந்தது. ராஜா பணம் கொடுக்க வேண்டியவர்கள் பலரும் பிரச்னையின் தீர்விற்காக முரளியை அணுகியதாகத் தெரிகிறது. ஏற்கெனவே கடன் பிரச்னை தொடர்பான விவகாரம் முரளியிடம் சென்றிருந்ததால் இந்த விவகாரம் தொடர்பாக முரளி பேசி வந்தார்.

அதே போல ராணியிடமும் பத்திரப்பதிவை நிறுத்தாமல் செய்து கொடுங்கள் என்று போனில் பேசியிருக்கிறார். பின்னர் ராணி, முரளி தன்னை மிரட்டியதாக போலீஸில் புகார் அளித்தார். அதன் பின்னணியில் தி.மு.க-வைச் சேர்ந்த சில முக்கிய புள்ளிகள் இருப்பதாக முரளி தரப்பில் சொல்லப்படுகிறது. தி.மு.க-வில் ஒன்றியச் செயலாளராக இருந்த முரளி, கட்சியில் ஈடுபாட்டுடன் செயல்பட்டதால் குறுகிய காலத்தில் வளர்ச்சியடைந்தார். அதை விரும்பாத அந்த புள்ளிகள் நெருக்கடி கொடுத்ததன் காரணமாக தி.மு.க-விலிருந்து விலகி பா.ஜ.க-வுக்குச் சென்றார்.

சார்பதிவாளரை குறிப்பிட்டு ஒட்டப்பட்ட போஸ்டர்
சார்பதிவாளரை குறிப்பிட்டு ஒட்டப்பட்ட போஸ்டர்

தற்போது பா.ஜ.க-வில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் தஞ்சை மாநகராட்சியில் 19-வது வார்டில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட கட்சியில் விருப்ப மனு தாக்கல் செய்திருக்கிறார். முரளியின் வளர்ச்சியை விரும்பாத தஞ்சை தி.மு.க-வில் பொறுப்பில் இருக்கும் சிலரின் தூண்டுதலின் பேரிலேயே, புகார் கொடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது.

இதையறிந்த பா.ஜ.க மாநில துணைத் தலைவரான கருப்பு. முருகானந்தம் தலைமையில் நிர்வாகிகள் பலரும் முரளி வீட்டு முன்பு குவிந்தனர். முரளியை கைது செய்வதற்காக போலீஸாரும் குவிக்கப்பட்டனர். ஆனால் முரளி எங்கிருக்கிறார் என தெரியவில்லை. தி.மு.க அரசு, பா.ஜ.க நிர்வாகிகள் மீது பொய் வழக்கு போடுவதாகவும், அதை கண்டித்து கருப்பு முருகானந்தம் தலைமையில் வரும் செவ்வாய்கிழமை தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாகவும் முடிவு செய்யப்பட்டது.

ஒரு வேளை பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டால் ஆர்ப்பாட்டம் தள்ளிப்போகலாம் எனவும் கூறப்படுகிறது" என்றனர். இது குறித்து சார் பதிவாளர் ராணியிடம் கேட்டபோது, ``போஸ்டர் ஒட்டியது தொடர்பாக போலீஸில் புகார் அளித்திருக்கிறேன் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது" என முடித்துக் கொண்டார்.

முரளி தரப்பிலோ, பிரச்னையை சுமுகமாக தீர்க்க சென்ற முரளி மீது தி.மு.க நிர்வாகிகள் சிலரின் தூண்டுதலால், வழக்கு பதிவு செய்திருக்கும் போலீஸ் பாரபட்சத்துடன் செயல்படுவதாகவும் சட்டரீதியாக இதனை எதிர்கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தி.மு.க தரப்பில் பேசிய போது, ``தற்கொலை தொடர்பான விவகாரத்தில் முரளியின் ஆதரவாளரான கபூர் தான் போஸ்டர் அடித்து ஒட்டியிருக்கிறார் என்பது விசாரணையில் தெரிய வந்ததையடுத்து, கபூர் கைது செய்யப்பட்டிருக்கிறார். அதற்கு தூண்டுதலாக இருந்த முரளி மீது நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதற்கும் தி.மு.க-வினருக்கும் என்ன சம்பந்தம்... காழ்ப்புணர்ச்சியின் காரணமாக முரளி அது போன்று பேசி வருகிறார்" என்றார்.