சேலம், மேட்டூர் கருமலைக்கூடல் பகுதியச் சேர்ந்தவர் ராஜேஷ். இவர் மீது கருமலைக்கூடல் காவல் நிலையத்தில் அடிதடி, கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்து வருகின்றது. கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு மாரியம்மன் கோயில் திருவிழாவுக்கு சென்றுவிட்டு திரும்பியவரை 5 பேர் கொண்ட மர்ம கும்பல் பின் தொடர்ந்து வந்து சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடியது. ரத்தவெள்ளத்தில் கிடந்த ராஜேஷை அப்பகுதி மக்கள் மீட்டு ஆம்புலன்சில் அனுப்பி வைத்தனர்.
ஆனால் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே ராஜேஷ் உயிரிழந்தார். இதுதொடர்பாக வழக்கு பதிந்த கருமலைக்கூடல் போலீஸார் விசாரணை செய்து வந்தனர். அப்போது கொலை நடந்த இடத்தில் இருந்த சி.சி.டி.வி கேமராக்களை ஆய்வு செய்தபோது அதே பகுதியைச் சேர்ந்த லல்லு பிரசாத், அபிமன்யூ, மதியழகன், சிபி, வெள்ளையன் ஆகியோர் ராஜேஷை கொலை செய்துவிட்டு தப்பியோடியது தெரியவந்தது.

அதன்மூலம் சம்பந்தப்பட்ட 5 பேரையும் அன்று மாலையே போலீஸார் சுற்றிவளைத்து பிடித்தனர். பின்னர் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டபோது, பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. ``கடந்த 2015 -ம் ஆண்டு கருமலைக்கூடல் பகுதியைச் சேர்ந்த எங்களது நண்பர் பழனிசாமியை கொலை செய்த வழக்கில் ராஜேஷும் சம்பந்தப்பட்டிருப்பதால்,, ராஜேஷை கொலை செய்ய ஒருமாத காலமாக திட்டம் தீட்டி வந்தோம், அதற்கு தகுந்தாற்போல் திருவிழா வந்ததால் ராஜேஷை கொலை செய்ய ஏதுவாக இருந்தது” எனக் கூறியுள்ளனர். அதன் அடிப்படையில் மேற்கண்ட 5 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
