Published:Updated:

`என் மகன் வலியால் துடிச்சதைப் பார்க்க முடியல'- மகனைக் கருணைக் கொலை செய்த தந்தை!

உயிரிழந்த சிறுவனின் மரணத்தில் சந்தேகம் நிலவிவந்த நிலையில், அவர் கொலை செய்யப்பட்டிருப்பது விசாரணையில் தெரியவந்திருக்கிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சேலம் மாவட்டம், கொங்கணாபுரத்தை அடுத்த கச்சுப்பள்ளியைச் சேர்ந்தவர்கள் பெரியசாமி - சசிகலா தம்பதியர். இவர்களுக்கு செந்தமிழ் (16), வண்ணத்தமிழ் (14) என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவன் வண்ணத்தமிழ் பல ஆண்டுகளாக அதற்கு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், கடந்த ஓராண்டாக அவரின் உடல்நிலை மிகவும் மோசமடைந்திருக்கிறது. நோய் முற்றிப்போய் உடல்மெலிந்து படுத்த படுக்கையாகக் கிடந்துள்ளான்.

நேற்று முன்தினம் இரவு சிறுவன் வண்ணத்தமிழின் தந்தை பெரியசாமி, எடப்பாடி பகுதியைச் சேர்ந்த மருத்துவர் ஒருவரை வீட்டிற்கு அழைத்து வந்து மகனுக்கு ஊசி ஒன்றைச் செலுத்தியிருக்கிறார். ஊசி செலுத்திய சிறிது நேரத்திலேயே சிறுவன் வண்ணத்தமிழ் இறந்திருக்கிறார். திடீரென சிறுவன் உயிரிழந்தது குறித்து சந்தேகப்பட்ட அக்கம்பக்கத்தினர், போலீஸாருக்குத் தகவல் கொடுத்திருக்கிறார்கள்.

மாதிரி படம்
மாதிரி படம்
Vikatan

அதனையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் சிறுவனின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக பெற்றோரிடம் போலீஸார் விசாரணை நடத்த, ‘புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த எங்களது மகன் இயற்கையாகவே மரணம் அடைந்தான்’ எனத் தெரிவித்துள்ளனர். இருந்தபோதிலும் போலீஸார் வழக்குபதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் உயிரிழந்த சிறுவனின் தந்தை பெரியசாமி போலீஸாருடைய விசாரணையில், ``புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கடந்த ஓராண்டு காலமாக என்னுடைய மகன் கட்டிலில் படுத்த படுக்கையாகக் கிடந்தான். தினமும் என்னுடைய மகன் வலியால் துடித்ததை என்னால் பார்க்க முடியவில்லை. அதையடுத்து கொங்கணாபுரத்தில் லேப் உரிமையாளரான வெங்கடேஷ் என்பவரிடம் என் மகனைக் கருணைக் கொலை செய்துவிடுமாறு கேட்டேன். வெங்கடேஷ் அவருக்குத் தெரிந்த பிரபு என்பவரை அறிமுகப்படுத்தினார். அவரை வீட்டிற்கு அழைத்துவந்து நரம்பில் ஊசிபோட்டு வண்ணத்தமிழை கருணைக் கொலை செய்தோம்’ என ஒப்புக் கொண்டார். இதையடுத்து பெரியசாமி, வெங்கடேஷ், பிரபு ஆகிய 3 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு