Published:Updated:

சீர்காழி: வீடு புகுந்த வடமாநில கொள்ளையர்கள்; தாய், மகன் படுகொலை! -இருவர் கைது; ஒருவர் என்கவுன்ட்டர்?

கொலை
கொலை ( Representational Image )

மர்மக் கும்பல் வீட்டிலிருந்த 16 கிலோ தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். வீட்டிலிருந்த சிசிடிவி கேமரா காட்சிகள் பதிவாகும் ஹார்டுடிஸ்க், சிடி ஆகியவற்றையும் கொள்ளையடித்துக்கொண்டு தன்ராஜ் சௌத்ரியின் காரில் தப்பிச் சென்றுள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி ரயில்வே ரோடு பகுதியைச் சேர்ந்தவர் 50 வயதான தன்ராஜ் செளத்ரி. இவர் சீர்காழியை அடுத்துள்ள தர்மகுளம் பகுதியில் நகைக்கடை மற்றும் நகை அடகுக்கடை நடத்திவருகிறார். தன்ராஜ், தன் மனைவி ஆஷா, மகன் அகில், மருமகள் நிகில் ஆகியோருடன் வசித்துவந்திருக்கிறார்.

கொலை
கொலை

இந்தநிலையில், இன்று காலை 6 மணியளவில், தன்ராஜ் சௌத்ரியின் வீட்டுக் கதவை சில மர்ம நபர்கள் தட்டியிருக்கிறார்கள். அவர்கள் இந்தியில் பேசியதைக் கேட்ட தன்ராஜ் கதவைத் திறந்திருக்கிறார். உடனடியாக, தன்ராஜைத் தாக்கிய ஐந்து பேர்கொண்ட மர்மக் கும்பல் வீட்டுக்குள் புகுந்து ஆஷா, அவர் மகன் அகில் ஆகியோரை அரிவாளால் வெட்டியிருக்கிறது. அதைத் தடுக்க வந்த மருமகள் நிகிலையும் மர்ம கும்பல் தாக்கியிருக்கிறது. இதில் படுகாயமடைந்த ஆஷாவும், அவருடைய மகன் அகிலும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

அதையடுத்து, மர்மக் கும்பல் வீட்டிலிருந்த 16 கிலோ தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றது. வீட்டிலிருந்த சிசிடிவி கேமரா காட்சிகள் பதிவாகும் ஹார்டுடிஸ்க், சிடி ஆகியவற்றையும் கொள்ளை அடித்துக்கொண்டு தன்ராஜ் சௌத்ரியின் காரில் தப்பிச் சென்றது.

கொலை
கொலை

இந்தச் சம்பவம் குறித்துத் தகவலறிந்த சீர்காழி போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். படுகாயமடைந்த தன்ராஜ் செளத்ரி, அவருடைய மருமகள் நிகில் இருவரும் சிகிச்சைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். மேலும், மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

காலை 6 மணிக்கு வீட்டுக்குள் புகுந்து, அரிவாளால் வெட்டி நகை கொள்ளையடிக்கப்பட்டு உரிமையாளரின் காரிலேயே தப்பித்துச் சென்ற இந்தக் கொடூரச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

நான்கு மணி நேரத்தில் குற்றவாளிகள் கைது!

சீர்காழியில் இரட்டைக் கொலை செய்து 16 கிலோ நகையோடு தப்பிச் சென்ற கொள்ளையர்களை நான்கு மணி நேரத்தில் அதிரடியாக காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.

சீர்காழி அருகே எருக்கூர் என்ற இடத்தில் பதுங்கியிருந்த வட இந்தியக் கொள்ளையர்கள் கைதுசெய்யப்பட்ட நிலையில், கொள்ளையடிக்கப்பட்ட 16 கிலோ நகைகளும் மீட்கப்பட்டுள்ளன.

கொள்ளை
கொள்ளை

கைதுசெய்யப்பட்ட கொள்ளையர்கள் மூன்று பேரில், இரண்டு பேரை காவல் நிலையத்தில்வைத்து விசாரித்து வருவதாகவும், அதில் ஒரு நபரை கொள்ளையடிக்கப்பட்ட நகைகளைப் பதுக்கி வைத்திருந்த இடத்திலிருந்து கைப்பற்ற அழைத்துச் சென்றபோது, அந்த நபர் தப்பிக்க முயன்றதால் காவல்துறை அதிகாரிகள் துப்பாக்கியால் சுட்டு, என்கவுன்ட்டர் செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அடுத்த கட்டுரைக்கு