Published:Updated:

சிவகங்கை: 175 சவரன் நகை கொள்ளை வழக்கு! - 11 மாதங்களுக்குப் பிறகு சிக்கிய கொள்ளையர்கள்

கொள்ளை
கொள்ளை

இந்த வழக்கில் எந்தத் துப்பும் கிடைக்காமல் இருந்தது. பல்வேறுகட்ட விசாரணை நடத்தியும் பயன் இல்லை. இந்நிலையில் தொடர் முயற்சியால் குற்றவாளிகளைக் கண்டறிய முடிந்தது.

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையை அடுத்த ரஸ்தா காதி நகரைச் சேர்ந்தவர் ஜெயராஜ். இவர் குன்றக்குடி தபால் நிலையத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் தன் மனைவியுடன் கடந்த ஆண்டு செப்டம்பர் 26-ம் தேதி ராமநாதபுரத்திலுள்ள தன் மூத்த மகன் நெப்போலியன் வீட்டுக்கு, பேத்தி பிறந்த நாள் விழாவுக்குச் சென்றுவிட்டு சுமார் 10 நாள்கள் கழித்து வீட்டுக்குத் திரும்பியிருக்கிறார்.

கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளி
கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளி

ஒரு வாரத்துக்கு மேலாக வீடு பூட்டிக்கிடந்ததைத் தெரிந்துகொண்ட கொள்ளையர்கள், திட்டம்தீட்டி ஆள் நடமாட்டம் இல்லாத நேரத்தில் வீட்டில் நகை உள்ளிட்ட பொருள்களைக் கொள்ளையடித்தனர்.

வீட்டுக்குத் திரும்பிய ஜெயராஜுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. வீட்டின் முன்பக்கக் கதவு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு மனமுடைந்த ஜெயராஜ், காவல் நிலையத்தில் புகாரளித்தார். புகாரை ஏற்றுக்கொண்ட சோமநாதபுரம் போலீஸ் நேரடியாக வீட்டுக்குள் சென்று பார்வையிட்டபோது, மூன்று அறைகளில் இருந்த 175 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அதையடுத்து, கொள்ளைச் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களைத் தீவிரமாகத் தேடிவந்தனர்.

பாண்டித்துரை
பாண்டித்துரை

இந்தச் சம்பவம் தொடர்பாக கடந்த ஒரு வருட காலமாக குற்றவாளிகளைத் தேடியபோதும் கிடைக்காத நிலையில், தற்போது பாண்டித்துரை, கண்ணன் ஆகிய இருவரும் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்திருக்கிறது. இவர்கள் இருவரும் கைது செய்யப்பட, அவர்களிடமிருந்து 26 சவரன் தங்க நகைகள் மீட்கப்பட்டன. மேலும், மற்ற நகைகளை மீட்க பிடிபட்டவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர் போலீஸார்.

இது குறித்து காவல்துறையினர் பேசுகையில், ``இந்தக் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக வழக்கில் எந்தத் துப்பும் கிடைக்காமல் இருந்தது. பல்வேறுகட்ட விசாரணை நடத்தியும் பயனில்லை. இந்த நிலையில் தொடர் முயற்சியால் குற்றவாளிகளைக் கண்டறிய முடிந்தது. அவர்களிடமிருந்த நகைகளை தற்சமயம் மீட்டிருக்கிறோம். விரைவில் அவர்களிடமிருந்து அனைத்து நகைகளையும் மீட்டுவிடுவோம்’’ என்று தெரிவித்தனர்.

அடுத்த கட்டுரைக்கு