சிவகாசி அருகேயுள்ள விஸ்வநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் வைரமுத்து. இவரின் மகன் முத்துக்குமார். அந்தப் பகுதியிலுள்ள தனியார் தொழிற்சாலையில் கூலித் தொழிலாளியாக பணிபுரிந்துவந்தார். இந்த நிலையில் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு தன் மகனைக் காணவில்லை, அவனை யாராவது கடத்திச் சென்றிருப்பார்கள் எனச் சந்தேகப்படுவதாக சிவகாசி நகர் காவல் நிலையத்தில் வைரமுத்து புகார் அளித்தார்.

இந்தப் புகாரின் மீது போலீஸார் வழக்கு பதிவுசெய்து முத்துக்குமாரைத் தேடிவந்தனர். இந்த நிலையில் சிவகாசி அருகேயுள்ள தெற்கு ஆனைக்கூட்டம் காட்டுப்பகுதியில் வாலிபர் ஒருவர் வெட்டுக்காயங்களுடன் இறந்துகிடப்பதாகக் காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் விரைந்து சென்ற போலீஸார், சடலமாகக் கிடந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இது தொடர்பாக போலீஸார் நடத்திய விசாரணையில், காட்டுப்பகுதியில் வெட்டுக்காயங்களுடன் இறந்துகிடந்த நபர் காணாமல்போன முத்துக்குமார்தான் என்பது தெரியவந்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
தொடர்ந்து, இந்தக் கொலை தொடர்பாக சிவகாசி நகர் காவல் போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், விஸ்வநத்தம் பகுதியைச் சேர்ந்த பாண்டித்துரை, மாரீஸ்வரன், பெரியசாமி, அலார்ட் ஆறுமுகம், சரவணக்குமார் ஆகிய அநிது பேரைக் கைதுசெய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் 4,000 ரூபாய் பணம் கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட முன்பகை காரணமாக முத்துக்குமாரை வெட்டிக் கொலைசெய்ததாக வாக்குமூலம் அளித்ததாக காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.