Published:Updated:

ஆம்பூர்: `என் மகனால் யாருக்குமே நிம்மதியில்லை; அதனால்தான் கொன்றுவிட்டேன்!’ -அதிர்ச்சி கொடுத்த தாய்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
கொலை செய்யப்பட்ட சிவக்குமார்
கொலை செய்யப்பட்ட சிவக்குமார்

``என் மகனால் யாருக்குமே நிம்மதியில்லை. மருமகளும், பேரக்குழந்தைகளும் தினம் தினம் சித்ரவதை அனுபவிக்கிறார்கள். அதனால்தான் மகனைக் கொன்றுவிட்டேன்’’ என்று திகைப்பூட்டுகிறார் தாய் ஒருவர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரை அடுத்துள்ள பெரியாங்குப்பம் ரசாக்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார். வயது 36. கூலி வேலை செய்துவந்த சிவக்குமாருக்குத் திருமணமாகி கௌரி என்ற மனைவி, இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இவர்களுடன் ஒரே வீட்டில், சிவக்குமாரின் தாய் ராஜேஸ்வரியும் தங்கியிருந்தார். இந்தநிலையில், சரிவர வேலைக்குச் செல்லாமல், மது குடித்துவிட்டு ஊருக்குள் ரௌடியிசம் செய்த சிவக்குமார் மணல் கடத்தல் போன்ற சமூக விரோதச் செயல்களிலும் ஈடுபட்டுவந்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக, அருகிலுள்ள காவல் நிலையங்களில் சிவக்குமார் மீது வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. காவல்துறையினரால் அடிக்கடி கைதுசெய்யப்பட்டு சிறையிலடைக்கப்படும் சிவக்குமாரை ஜாமீனில் வெளியே எடுக்க அவரின் தாயும் மனைவியும் படாதபாடு பட்டிருக்கிறார்கள்.

கொலை செய்யப்பட்ட சிவக்குமார்
கொலை செய்யப்பட்ட சிவக்குமார்

குடும்பச் சூழ்நிலையைப் பற்றி கவலைப்படாமல் இருந்த சிவக்குமார் மது குடிக்கப் பணம் கேட்டு தினமும் தாய், மனைவியை அடித்து துன்புறுத்திவந்திருக்கிறார். அடி தாங்க முடியாமல் அக்கம் பக்கத்தில் கடன் வாங்கி அவர்கள் பணம் கொடுத்துள்ளனர். அந்தப் பணத்தில் மது குடித்துவிட்டு தலைக்கேறிய போதையுடன் வீட்டுக்கு வரும் சிவக்குமார் தாய், மனைவி என்றும் பார்க்காமல் கண்மூடித்தனமாகத் தொடர்ந்து அடித்து, உதைத்ததாகவும் சொல்கிறார்கள். சிவக்குமாரின் சித்ரவதையைத் தாங்கிக்கொள்ள முடியாமல், ஏற்கெனவே பலமுறை அவரின் மனைவி கௌரி மூன்று குழந்தைகளையும் கூட்டிக்கொண்டு நாச்சார்குப்பத்திலுள்ள தனது தாய் வீட்டுக்குச் சென்றிருக்கிறார். அந்தச் சமயமெல்லாம், ஊர்ப் பெரியவர்கள் அறிவுரை கூறி சேர்த்துவைத்துள்ளனர்.

இந்தநிலையில், சமீபத்தில் மது போதையில் வீட்டிலுள்ள பொருள்களை அடித்து நொறுக்கிய சிவக்குமார் தனது தாய், மனைவியை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து கொலை செய்ய முயன்றதாகவும் கூறப்படுகிறது. தனது உயிரைக் காப்பாற்றிக்கொள்வதற்காக குழந்தைகளுடன் மீண்டும் வீட்டைவிட்டு வெளியேறிய மனைவி கௌரி, அருகிலுள்ள தனது அண்ணன் வீட்டுக்குச் சென்று தங்கியிருந்தார். அரவணைக்க வேறு சொந்தம் இல்லாததால், மகனிடம் அடி வாங்கிக்கொண்டு வீட்டிலேயே இருந்திருக்கிறார் தாய் ராஜேஸ்வரி. இந்தநிலையில், நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் மதுபோதையில் வீட்டுத் திண்ணையில் புரண்டு படுத்திருந்த சிவக்குமார், நேற்று காலையில் பார்த்தபோது, தலையில் பலத்த காயங்களுடன் மர்மமான முறையில் இறந்துகிடந்தார்.

தாய் ராஜேஸ்வரி
தாய் ராஜேஸ்வரி

ஏற்கெனவே இருந்த முன்விரோத தகராறில் சிவக்குமார் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என ஊர்க்காரர்கள் பேசிக்கொண்டனர். தகவலறிந்து வந்த ஆம்பூர் தாலுகா போலீஸாரும் சடலத்தைப் பார்வையிட்டனர். வீட்டருகே கிடந்த பெரிய பாறாங்கல் மீது மாட்டுச் சாணக் கரைசல் ஊற்றப்பட்டிருந்தது. அந்தக் கல்லின் ஒரு பகுதியில் ரத்தக்கறையும் படிந்திருந்ததைப் பார்த்தனர். சந்தேகத்தின்பேரில், சிவக்குமாரின் தாய் ராஜேஸ்வரியை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அப்போது, தலையில் பாறாங்கல்லைப் போட்டு மகனைக் கொலைச் செய்ததை அவர் ஒப்புக்கொண்டார். ராஜேஸ்வரி அளித்த வாக்குமூலத்தில், ``என் மகனால் யாருக்குமே நிம்மதியில்லை. மருமகளும் பேரக்குழந்தைகளும் தினம் தினம் சித்ரவதை அனுபவிக்கிறார்கள். அவன் ஒரு மிருகம். விட்டால் எங்களைக் கொன்றிருப்பான். அதனால்தான் கொன்றுவிட்டேன்’’ என்று கூறியதாகச் சொல்கிறது, காவல்துறை.

இதையடுத்து, ராஜேஸ்வரியைக் கைதுசெய்த போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்திவருகிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு