திருவாரூர் அருகே பிரசித்திபெற்ற கோயில் ஒன்றில் விநாயகர் சிலை திருடப்பட்ட வழக்கில், சிலை திருட்டில் ஈடுப்பட்ட முக்கியக் குற்றவாளி தலைமறைவாக இருந்து போலீஸாருக்கு தண்ணி காட்டிவந்த நிலையில், ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு அந்தக் குற்றவாளியைக் கைதுசெய்தனர்.

திருவாரூர் மாவட்டம், எரவாஞ்சேரி அருகேயுள்ள பூங்குடிமூலை கிராமத்தில், பிரசித்திபெற்ற வரசித்தி விநாயகர் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஒன்றரை அடி உயரம்கொண்ட உலோக விநாயகர் சிலை இருந்தது. விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட விழா நாள்களில் உற்சவரான உலோக விநாயகர் சிலைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு உற்சவம் நடைபெறுவது வழக்கம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இந்நிலையில் கடந்த 2016-ம் ஆண்டு சிறப்புமிக்க அந்த விநாயகர் சிலை திருட்டுப்போனது. இது தொடர்பாக எரவாஞ்சேரி காவல் நிலையத்தில் வழக்கு பதிவுசெய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டுவந்தது. இதைத் தொடர்ந்து விநாயகர் சிலை திருட்டுச் சம்பவத்தில் ஈடுப்பட்ட குற்றவாளிகள் எனச் சிலர் கைதுசெய்யப்பட்டனர். முக்கியக் குற்றவாளியாகக் கருதப்பட்ட திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகேயுள்ள சிறுபுலியூர் கிராமத்தைச் சேர்ந்த இளைஞரான அகிலன் (எ) தங்கவேல் என்பவர் மட்டும் தலைமறைவாக இருந்து போலீஸாருக்குத் தண்ணி காட்டிவந்தார்.

அகிலனை போலீஸார் பல வகையில் தேடியும் அவர் சிக்கவில்லை. இந்நிலையில் இந்த வழக்கு சிலை கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு மாற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து சிலை திருட்டு வழக்குகளில் தலைமறைவாக உள்ள குற்றவாளிகளைக் கைதுசெய்ய சிலை திருட்டு தடுப்புப் பிரிவு காவல்துறை இயக்குநர் ஜெயந்த்முரளி, காவல்துறை தலைவர் தினகரன் ஆகியோர் உத்தரவிட்டனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
அதன்படி கும்பகோணம் சரக கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் தலைமையில் தலைமறைவாக உள்ள குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் அகிலன் குறித்து நடத்திய தீவிர விசாரணையில் அவர் பேரளம் அருகிலுள்ள கொல்லுமாங்குடியில் பதுங்கியிருப்பதைக் கண்டுபிடித்தனர். இதையடுத்து அங்கு சென்ற காவல் ஆய்வாளர் இந்திரா தலைமையிலான தனிப்படையினர், விநாயகர் சிலை திருட்டில் ஆறு ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த குற்றவாளியான அகிலனைக் கைதுசெய்தனர்.
அப்போது, ``போலீஸார் என்னைப் பிடித்து விடாத அளவுக்கு எச்சரிக்கையுடன் இருந்தேன். ஆனால் எப்படியோ என்னைக் கைதுசெய்துவிட்டனர்” எனப் பேசியிருக்கிறார். கைதுசெய்யப்பட்ட அகிலனுக்கு திருவாரூர் மாவட்டத்தின் மேலும் ஒரு சிலை திருட்டு வழக்கில் தொடர்பிருப்பதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து கும்பகோணம் கூடுதல் தலைமைக் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் அகிலனை ஆஜர்படுத்தி, பின்னர் சிறையில் அடைத்தனர்.