Published:Updated:

தஞ்சாவூர்: `பொய் வழக்கு பதிந்தனர்' - நீதிபதி முன் தற்கொலைக்கு முயன்ற பாஜக நிர்வாகி!

தற்கொலைக்கு முயன்ற பாஜக நிர்வாகி சிவானந்தம்
தற்கொலைக்கு முயன்ற பாஜக நிர்வாகி சிவானந்தம்

நீதிபதி அழகேசன் சிவானந்தத்திடம் கேட்டபோது, ``ஐயா, என்மீது போலீஸ் பொய் வழக்கு போட்டுள்ளனர். இதனால் எனக்குக் கடும் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. நான் தற்கொலை செய்துகொள்கிறேன்" எனக் கூறி விஷத்தைத் தின்றுவிட்டு மயங்கி விழுந்திருக்கிறார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பட்டுக்கோட்டை அருகே பாஜக நிர்வாகியாக இருக்கும் வாலிபர் ஒருவரைக் கைதுசெய்த போலீஸ் அவர்மீது கஞ்சா விற்பனை செய்ததாக வழக்கு பதிவு செய்து நீதிபதி முன் ஆஜர்படுத்திய நிலையில் நீதிபதி முன் போலீஸ், தன் மீது பொய் வழக்கு போட்டுள்ளதாகக் கூறி விஷம் தின்று தற்கொலைக்கு அவர் முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிகிச்சையில் சிவானந்தம்
சிகிச்சையில் சிவானந்தம்

பட்டுக்கோட்டை அருகேயுள்ள மதுக்கூர், சிவக்கொல்லை பகுதியைச் சேர்ந்தவர் சிவானந்தம் (26). இவர் மதுக்கூர் முக்கூட்டு சாலையில் பெட்டிக்கடை நடத்திவருகிறார். பாஜக -வில் மதுக்கூர் ஒன்றியச் செயலாளராகவும் இருக்கிறார். இந்தநிலையில் கடந்த 7- ம் தேதி இரவு நண்பர்கள் பத்து பேருடன் சேர்ந்து இந்திரா நகரிலுள்ள தனது வீட்டில் சீட்டு விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த போலீஸார் அனைவரையும் கைதுசெய்து மதுக்கூர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

இதையடுத்து சிவானந்தம் மீது கஞ்சா விற்றதாக வழக்கு பதிவு செய்ததுடன், பட்டுக்கோட்டை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி அழகேசன் முன்பு ஆஜர்படுத்துவதற்காக அவரது வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். மேலும் கஞ்சா வழக்கு தொடர்பாக நீதிபதி அழகேசன், சிவானந்தத்திடம் கேட்டபோது, ``ஐயா, என் மீது போலீஸ் பொய் வழக்கு போட்டுள்ளனர். இதனால் எனக்குக் கடும் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. நான் தற்கொலை செய்துகொள்கிறேன்’’ எனக் கூறி விஷத்தை விழுங்கி மயங்கி விழுந்திருக்கிறார்.

இதையடுத்து உடனடியாக போலீஸார் அவரை பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல, மருத்துவர்கள் அவருக்கு முதலுதவி சிகிச்சை கொடுத்த பின்னர் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு சிவானந்தம் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்; அவருக்கு சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் பொய் வழக்கு போட்ட போலீஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது குடும்பத்தினர் கூறிவருகின்றனர். சிங்கப்பூரில் வேலை பார்க்கும் சிவானந்தத்தின் சகோதரர் ஒருவரும் இது தொடர்பாக தஞ்சாவூர் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவருக்கு புகார் அனுப்பியுள்ளார். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இது குறித்து சிவானந்தம் தரப்பில் பேசினோம். ``வீட்டில் இருந்தவரைப் பிடித்து அழைத்துச் சென்ற போலீஸ், சிரமேல்குடி புதுக்குளம் அருகே டூ வீலரில் வந்து கொண்டிருந்ததாகவும், சிவானந்தத்திடம் 1 கிலோ 100 கிராம் கஞ்சா இருந்ததால் கைதுசெய்து கஞ்சா வழக்கு பதிவு செய்ததாகவும் கூறியுள்ளனர்.வீட்டில் சீட்டு விளையாடிய மற்றவர்கள் மீது அது தொடர்பாக மட்டுமே வழக்கு பதிவு செய்துவிட்டு சிவானந்தத்தின் மீது மட்டும் கஞ்சா வழக்கு பதிவு செய்தது ஏன் எனத் தெரியவில்லை.

``பாஜக-வைக் கொச்சைப்படுத்தினால், அவர்களின் பிசினஸில் கைவைப்போம்" - உண்ணாவிரத மேடையில் அண்ணாமலை
மதுக்கூர் போலீஸ் ஸ்டேஷன்
மதுக்கூர் போலீஸ் ஸ்டேஷன்

அதேபோல் கைது செய்த பிறகு சிவானந்தம் கையில் விஷம் கிடைக்கும் அளவுக்கு போலீஸார் மெத்தனமாக இருந்திருக்கிறார்கள். 1கஞ்சாவை நான் பார்த்ததும் கிடையாது, விற்கவும் இல்லை. ஏன் என்மீது பொய் வழக்கு போடுறீங்க’ என்று போலீஸ் தரப்பில் சிவானந்தம் கேட்டதற்கு முறையான பதில் எதுவும் சொல்லவில்லை. கடந்த 5-ம் தேதி பாஜக சார்பில் மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் தஞ்சாவூரில் நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் அந்தக் கட்சி நிர்வாகி என்கிற முறையில் சிவானந்தம் கலந்துகொண்டார்.

அதற்கு அடுத்த நாள் போலீஸ் ஸ்டேஷனிலிருந்து போன் செய்து, `போராட்டத்திற்கு போனீங்களா... எத்தனை பேர் போனீங்க...’ என நட்பாகக் கேட்பதுபோல் விசாரித்திருக்கிறார்கள். இந்தநிலையில் அடுத்த நாள் இரவுதான் வீட்டில் சீட்டு விளையாடிக்கொண்டிருந்தவர்களை கைதுசெய்துள்ளனர். சீட்டு விளையாடியதை நியாயப்படுத்தவில்லை. ஏன் கஞ்சா வழக்கு போட்டார்கள் என்றுதான் கேட்கிறோம். இதனால் சிவானந்தம் மன உளைச்சல் ஏற்பட்டு விஷத்தைத் தின்று தற்கொலைக்கு முயன்றிருக்கிறான். போலீஸின் இந்தச் செயலால் எங்க வீட்டு மானமே போச்சு. இதற்கான நியாயம் எங்களுக்குக் கிடைக்க வேண்டும்’’ என்றனர்.

போலீஸ் தரப்பில் விசாரித்தோம். சிவானந்தம் மீது ஏற்கெனவே கள்ள லாட்டரி விற்பனை செய்தது உள்ளிட்ட சில வழக்குகள் உள்ளன. கஞ்சா எடுத்துச் சென்றபோது அவரைக் கைதுசெய்ததால் கஞ்சா வழக்கு போட்டதாகத் தெரிவிக்கின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு