Published:Updated:

`இந்த பச்சை உடம்பு எப்படித்தான் தாங்குச்சோ?’-தாயால் கொடூரமாகத் தாக்கப்பட்ட குழந்தையின் தந்தை கண்ணீர்

குழந்தையைத் தாக்கிய கொடூரத் தாய்
குழந்தையைத் தாக்கிய கொடூரத் தாய்

``ஒருநாள் மதியம் புள்ளையின் உதடெல்லாம் வீங்கிப்போய் ரத்தமா இருந்துச்சு. அப்பவும் `துணி துவைக்கிற இடத்துல வழுக்கி விழுந்துட்டான்’னு சொன்னா. அதுக்குப் பிறகு தொடர்ச்சியா புள்ளை உடம்புல ரத்தக் காயத்தை பார்க்க ஆரம்பிச்சேன்."

இரண்டு வயதுகூட நிரம்பாத அந்தப் பிஞ்சுக் குழந்தையின் அருகில் அமரும் அந்த இளம்பெண், தன் கைகளை மடக்கிக்கொண்டு அந்தக் குழந்தையின் வாயில் ஓங்கி ஓங்கிக் குத்துகிறார். உதடுகள் கிழிந்து ரத்தம் வழியும் நிலையில் உயிர் வலியால் அலறித் துடிக்கிறது அந்தக் குழந்தை. கைகளில் ஒட்டயிருக்கும் ரத்தத்தைத் துடைத்துக்கொள்ளும் அந்தப் பெண், குழந்தையின் பிஞ்சுக் கால்களை அதே பாணியில் கைகளால் குத்துகிறார். செருப்பால் கொடூரமாகத் தாக்குகிறார். தனக்கு என்ன நடக்கிறது என்று உணரக்கூட முடியாமல் உடல் முழுவதும் ரத்தக் காயங்களுடன் அலறுகிறது அந்தக் குழந்தை. சமூக வலைதளங்களில் கடந்த வாரம் வெளியான இந்த வீடியோ காட்சிகளை இதயம் உள்ளவர்களால் இரண்டு விநாடிகளுக்கு மேல் பார்க்க முடியாது. பார்த்தவர்களின் நெஞ்சங்களை நொறுங்கச் செய்த அந்தக் காட்சிகள் ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கிப்போட்டுவிட்டன.

கைதுசெய்யப்பட்ட குழந்தையின் தாய் ராணி, மணிகண்டன்.
கைதுசெய்யப்பட்ட குழந்தையின் தாய் ராணி, மணிகண்டன்.

`கல்நெஞ்சம்கொண்ட அந்தப் பெண்ணைக் கைதுசெய்ய வேண்டும்’ என்று இணையவாசிகள் கொந்தளித்ததைத் தொடர்ந்து தமிழக காவல்துறை அதிரடியாகக் களமிறங்கி மேற்கொண்ட விசாரணையில், அந்தப் பெண் விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்திருக்கும் மணலப்பாடியைச் சேர்ந்த வடிவழகனின் மனைவி ராணி (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது) என்பதும், பெற்ற குழந்தையைத்தான் அவர் அவ்வளவு கொடூரமாகத் தாக்கினார் என்பதும் தெரியவந்தது. வடிவழகன் கொடுத்த புகாரின் அடிப்படையில், ஆந்திராவில் தனது தாய் வீட்டிலிருந்த ராணியைக் கைதுசெய்தது செஞ்சி காவல்துறை. ``தவறுதலான அழைப்பு மூலம் ராணிக்கு அறிமுகமான பிரேம்குமார் என்பவர், அவரைக் காதலிப்பதாகக் கூறியிருக்கிறார். ஒருகட்டத்தில் `நீ ரொம்ப அழகா இருக்கே. உன்னை நான் கல்யாணம் பண்ணிக்கிறேன். நீ மட்டும் உன் புருஷன், புள்ளைங்ககூட சந்தோஷமா இருக்கே... உன் சின்னப் பையன் உன்னுடைய புருஷன் மாதிரியே இருக்கான். எனக்கு அவனைப் பிடிக்கலை' என்று பிரேம்குமார் கூறி வருத்தப்பட்டிருக்கிறார். அதனால் அவரை சந்தோஷப்படுத்துவதற்காக இரண்டாவது குழந்தையை அடித்து வீடியோ எடுத்து அவருக்கு அனுப்பியிருக்கிறார் ராணி’’ என்று கூறும் விசாரணை அதிகாரிகள், சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட வீடியோக்கள் அவரது செல்போனில் இருந்தன என்று கூறி அதிர்ச்சியில் உறையவைக்கிறார்கள். தற்போது அந்த பிரேம்குமார் கைதுசெய்யப்பட்டுவிட, அவரது உண்மையான பெயர் மணிகண்டன் என்பதும் தெரியவந்திருக்கிறது. இந்தநிலையில், குழந்தையின் தந்தை வடிவழகனைச் சந்திக்க அவரது இல்லத்துக்குச் சென்றோம்.

வலியால் அழுத குழந்தையிடம் `ஒண்ணுமில்லப்பா... சரியாப் போயிடும்’ என்று சொல்லி விளையாட விட்டுவிட்டு நம்மிடம் பேசத் தொடங்கினார். ``என் கல்யாணத்துக்கு வீட்டில் பெண் தேடிக்கிட்டு இருந்தாங்க. அப்போ ஆந்திராவுல ஒரு கோழிப் பண்ணையில வேலை பார்த்துக்கிட்டிருந்த என் மாமா, அதே இடத்துல குடும்பத்தோட வேலை பார்த்த ராணியை எங்க வீட்டில் சொல்லி எனக்குக் கல்யாணம் பண்ணிவெச்சாங்க. கல்யாணத்துக்கு அப்புறம் சென்னையில் மூணு வருஷம் இருந்தோம். எங்களுக்கு நாலு, ரெண்டு வயசுல ரெண்டு குழந்தைங்க. அப்போ நான் வாங்குன சம்பளத்துல பசங்களைப் படிக்கவெக்க முடியாதுங்கறதால ஒன்றரை வருஷத்துக்கு முன்னாடியே ஊருக்கு வந்து விவசாயத்தைப் பார்க்க ஆரம்பிச்சேன்.

வந்தவாசி: `குழந்தையை விற்றுவிட்டு வேறு பெண்ணுடன் திருமணம்!' - புகாரளித்த காதலியும் சிக்கியது எப்படி?
குழந்தையுடன் வடிவழகன்
குழந்தையுடன் வடிவழகன்

காலையில நிலத்துக்கு போனா மதியமும், மதியம் போனா சாயந்திரம்தான் வீட்டுக்கு வருவேன். அப்போ ஒருநாள் நான் சாயந்திரம் வந்தபோது சின்ன புள்ளையோட இரண்டு கால் முட்டிகளும் பயங்கரமா வீங்கிப்போயிருந்தது. காலையில போகும்போது சிரிச்சு விளையாடிக்கிட்டிருந்த புள்ளை துவண்டுபோய் கெடந்தான். என்ன ஆச்சுனு ராணிகிட்ட கேட்டபோது, `கீழ விழுந்துட்டான்’னு சொன்னா. ரெண்டாவது பையன் பத்து மாசத்துக்கு முன்னாடியே பிறந்ததால கொஞ்சம் தெம்பில்லாமத்தான் இருப்பான் என்பதால் நானும் அதை நம்பிட்டேன். புள்ளைய பாண்டிச்சேரி ஜிப்மர் ஹாஸ்பிட்டல்ல ஒரு வாரம்வெச்சிருந்து சரிபண்ணிக் கூட்டிட்டு வந்தேன். அதுக்கப்புறம் ஒருநாள் மதியம் புள்ளையின் உதடெல்லாம் வீங்கிப்போய் ரத்தமா இருந்துச்சு. அப்பவும், `துணி துவைக்கிற இடத்துல வழுக்கி விழுந்துட்டான்’னு சொன்னா. அதன் பிறகு தொடர்ச்சியா புள்ளை உடம்புல ரத்தக் காயத்தை பார்க்க ஆரம்பிச்சேன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நான் வீட்டில் இருக்கும்போதெல்லாம் புள்ளையோட காயங்களுக்கு மருந்து போட்டு, ஊஞ்சலில்வெச்சில் கொஞ்சிக் கொண்டிருப்பாள். அதனால் அவள்மீது எனக்கு சந்தேகமும் வரவில்லை. ஆனால் எப்போதும் போனும் கையுமாக இருப்பாள். `யாருகிட்டதான் பேசுற?’னு நான் கேட்டா, `என் அப்பா அம்மாகிட்ட பேசுறேன்’னு சொல்லுவா. ஒருகட்டத்துல அதிகமா பேச ஆரம்பிச்சதால போனைப் பிடுங்கிவெச்சுக்கிட்டேன். அதுக்கப்புறம் அக்கம் பக்கத்தில் இருந்தவங்ககிட்ட போன் வாங்கிப் பேசுறான்னு எனக்கு தெரிய வந்துச்சு. அதனால அவங்க வீட்டுக்குக் கூட்டிட்டுப் போய் நடந்ததைச் சொல்லி விட்டுட்டு வந்துட்டேன். அதுக்கப்புறம் ஒருநாள் வீட்டிலிருந்த அவளுடைய போனை எடுத்துப் பார்த்தேன். அப்போதான் வீடியோவையெல்லாம் பார்த்தேன். என் புள்ளை வலியில் துடிக்கறதைப் பார்த்ததும் என் தேகமெல்லாம் ஆடிப் போயிருச்சு.

குழந்தை மீது கொடூரத் தாக்குதல்; திருமணம் தாண்டிய உறவே காரணம்! - விசாரணையில் அதிர்ச்சித் தகவல்
வைரலான வீடியோ காட்சி
வைரலான வீடியோ காட்சி

இவ்வளவு நடந்ததுக்கு அப்புறம், அவ உறவே வேண்டாம்னு வக்கீலை அழைச்சுக்கிட்டு விவாகரத்து பத்திரத்துல கையெழுத்து வாங்கப் போனோம். ஆனா, கொஞ்சம்கூட கவலையே படாம தாலியைக் கழட்டி என் கையில கொடுத்துட்டா. இதெல்லாம் வெளியில சொன்னா நமக்குத்தான் அசிங்கம் அப்படின்னு நானும் அமைதியாக திரும்ப வந்துட்டேன். ஆனா, இந்த வீடியோ எப்படி பரவுச்சுன்னு எனக்குத் தெரியலை சார். நான் யாருக்கும் அனுப்பலை. கிட்டத்தட்ட ஆறு மாசமா எம்புள்ள இந்தச் சித்ரவதைகளை எப்படித்தான் தாங்கிட்டு இருந்தானோ...” என்று சொல்லும்போதே கதறி அழுகிறார். அவரே ஆசுவாசப்படுத்திக்கொண்டு, ``அவளுக்கு இந்த அரசாங்கமே சரியான தண்டனையைத் தரும்னு நம்புறேன். இந்தப் பிரச்னைல இருந்து என்னை விடுவிச்சுட்டா போதும். என் புள்ளைங்கள நான் பார்த்துப்பேன். புள்ளைக்கு உடம்பு முழுக்க ரணமா இருக்கு. உடம்புக்குள்ள என்னென்ன இருக்குதுன்னு தெரியலை. டாக்டருகிட்ட கூட்டிட்டுப் போகணும்” என்கிறார்.

குழந்தைகளின் உடலில் மட்டுமல்ல, உள்ளத்திலும் நெடுங்காலத்துக்கு ஆறாத ரணத்தை ஏற்படுத்திவிட்டார் ராணி.

அடுத்த கட்டுரைக்கு