Published:Updated:

அடிதடி முதல் அரிவாள் வெட்டு வரை: தேனியில் ஒரே மாதத்தில் திடுக் சம்பவங்கள்! #TamilnaduCrimeDiary

குற்றவாளி, அரிவாளால் தாக்கும் சிசிடிவி காட்சி
குற்றவாளி, அரிவாளால் தாக்கும் சிசிடிவி காட்சி

தேனியில் குற்றச்சம்பவங்கள் அதிகரித்துள்ளது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது

2020-ம் ஆண்டு தொடக்கமான ஜனவரி மாதத்தில், தேனியில் குற்றச்சம்பவங்கள் அதிகரித்துள்ளது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆண்டு தொடக்கமே, தேனியில் கொலையோடுதான் தொடங்கியது. பெரியகுளம் அருகே உள்ள மேல்மங்கலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர், அம்பலக்காரர் சாவடி அருகே நள்ளிரவு புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஜெயமங்கலம் காந்தி நகர் காலனியைச் சேர்ந்த ஐந்து இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் பெரியகுளம் நோக்கி சென்றுகொண்டிருந்தனர்.

போராட்டத்தில் அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க-வினர்.
போராட்டத்தில் அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க-வினர்.

அப்போது அம்பலக்காரர் சாவடி அருகே வந்தபோது, கேக் வெட்டி புத்தாண்டு கொண்டாடிய இளைஞர்களுக்கும், இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. இதில், கார்த்திக் (வயது 22) என்ற இளைஞர் அடித்துக் கொல்லப்பட்டார். இதனால், இரு கிராம மக்களுக்கும் மோதல் ஏற்படும் சூழல் உருவானது. காவல்துறை தலையிட்டு மக்களை சமாதானம் செய்தது.

கஞ்சா விற்பனை முன்விரோதத்தால் மோதல்! - ஒருவர் கொலை; 6 பேருக்கு அரிவாள் வெட்டு

ஜனவரி 7 : பெரியகுளம் எ.புதுக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜு (வயது 24), இவர், அதே கிராமத்தைச் சேர்ந்த சேகர் மகள், காயத்ரி (வயது 24) என்பவரைக் காதலித்து திருமணம் செய்துகொண்டுள்ளார். பெண் வீட்டாரின் சம்மதமில்லாமல் திருமணம் நடந்ததால், ராஜுவுக்கு அடிக்கடி கொலைமிரட்டல்கள் பெண் வீட்டாரிடமிருந்து வந்துள்ளது. இதனால், ராஜு மற்றும் காயத்ரி, கிராமத்திலிருந்து பெரியகுளம் ஸ்டேட் பாங்கு அருகே வாடகைக்கு வீடு எடுத்துத் தங்கியுள்ளனர். இந்த நிலையில், வீட்டின் அருகே உள்ள மளிகைக் கடைக்கு வந்த ராஜுவை, காயத்ரியின் தந்தை சேகர் மற்றும் அவரின் சகோதரர்கள் ராஜேஸ் மற்றும் பிரகாஷ் ஆகிய மூவர், அரிவாள் மற்றும் உருட்டுக்கட்டையால் கடுமையாகத் தாக்கினர். அக்கம் பக்கத்தினர் ராஜுவை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

கம்பம் குற்றவாளிகள்.
கம்பம் குற்றவாளிகள்.

ஜனவரி 22 : கேரள மாநிலம் குமுளி அருகே உள்ள அட்டப்பள்ளத்தைச் சேர்ந்த ஜோசப், தனது நண்பர்களுடன், கம்பம் நகருக்கு வந்துள்ளார். மணி இரவு 10-ஐ தாண்டியதால், மதுபாட்டில்கள் வாங்க முடியாமல், டாஸ்மாக் அருகே நின்றுள்ளார். அதைக்கண்ட, கம்பத்தைச் சேர்ந்த அகமது ரஃபிக் மற்றும் ராஜேந்திரன், ``எங்களுக்கு சரக்கு வாங்குற இடம் தெரியும். எங்களோடு வாங்க!” எனக் கூறி, கம்பம் மெட்டுச் சாலையில் உள்ள சிலுவைக் கோயில் அருகே அழைத்துச் சென்றுள்ளனர்.

பின்னர், தங்களது கூட்டாளிகளான அஜித்குமார், சுகந்த் பிரேம், நாசர் மற்றும் சையது முகமது ஆகியோரை அங்கு வரவழைத்து, அரிவாள் மற்றும் கத்தியைக் காட்டி, ஜோசப் மற்றும் அவரது நண்பர்கள் மூவரிடம் இருந்த 4,000 ரூபாய் பணம் மற்றும் செல்போன்களைப் பறித்துச் சென்றனர். சம்பவம் அறிந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட காவல்துறையினர், ஐந்து மணி நேரத்தில் குற்றவாளிகளைப் பிடித்தனர். இருந்தபோதும், இரவு நேரங்களில் வெளியே வருவதை கம்பம் மக்கள் தவிர்த்துவருகிறார்கள்.

`கறுப்புக்கொடி... காரை மறித்து போராட்டம்..!'- கம்பத்தில் பதறிய ரவீந்திரநாத் குமார்

ஜனவரி 23 : கம்பம் நகரில் நடந்த எம்.ஜி.ஆர் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள வந்த தேனி எம்.பி ரவீந்திரநாத்குமாரின் காரை, இஸ்லாமிய அமைப்பினர்கள் மறித்து தாக்க முற்பட்ட சம்பவம் தேனியில் பரபரப்பை ஏற்படுத்தியது. போலீஸார் உதவியோடு ரவீந்திரநாத்குமாரின் கார் பாதுகாப்பாக புறப்பட்டாலும், அதன் பின்னால் வந்த பா.ஜ.க தேனி மாவட்ட இளைஞரணி துணைத்தலைவர் ராஜபிரபுவின் கார் அடித்து நொறுக்கப்பட்டது. அதிர்ஷ்டவசமாக ராஜபிரபு உயிர்தப்பினார். இதையறிந்த அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க கட்சியினர், மாவட்டம் முழுவதும் அன்று இரவே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவத்தில் ஈடுபட்ட இஸ்லாமிய அமைப்பைச் சேர்ந்த 43 பேர் கைது செய்யப்பட்டனர். இதையறிந்த அந்த அமைப்பின் சிலர், கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய வேண்டும் என பெரியகுளத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏற்கெனவே அ.தி.மு.க-வினர் பெரியகுளத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், இரு தரப்பினருக்கும் இடையே மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டது. இதையறிந்த காவல்துறையினர், கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்தனர். பின்னர் பதற்றம் குறைந்தது. ஒரு எம்.பி வருகிறபோது, அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் சரியாகச் செய்யப்படாததால், ஒரே நாள் இரவில், தேனியில் மதக்கலவரம் உருவாகும் சூழல் ஏற்பட்டது. இதற்கு காவல்துறை காரணமாக அமைந்தது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.

ரவீந்திரநாத்குமாரின் காரை முற்றுகையிட்ட இஸ்லாமிய அமைப்பினர்.
ரவீந்திரநாத்குமாரின் காரை முற்றுகையிட்ட இஸ்லாமிய அமைப்பினர்.
`என் மனைவியிடம் போனில் தவறாகப் பேசியது யார்?’-நிதி நிறுவன ஊழியர்களை அரிவாளால் மிரட்டிய தேனி தொழிலாளி

ஜனவரி 25 : ஆண்டிபட்டி கூட்டுறவு பண்டக சாலையை மறித்து கரும்புக்கடை போட்டிருந்தார் நாகராஜ். இவரை கண்டித்த கூட்டுறவு பண்டக சாலை மேலாளர் கோட்டை சாமி, விற்பனையாளர் முருகன், பெரியசாமி ஆகியோரை நாகராஜ் அரிவாளால் ஓட ஒட விரட்டி வெட்டிய சம்பவம் ஆண்டிபட்டி நகரில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் படுகாயமடைந்த மூவரும் ஆண்டிபட்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். தப்பி ஓட முயன்ற நாகராஜை, பொதுமக்களே பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.

ஜனவரி 27 : பெரியகுளம் அருகே உள்ள கைலாசப்பட்டியில் இரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இடையே ஏற்பட்ட மோதலில், இரு தரப்பிலும் தலா ஒரு உயிர் பறிபோனது. இரு சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு இடையே அடிக்கடி சிறிய மோதல் இருந்து வந்ததை உளவுத்துறை எச்சரிக்கை செய்திருந்த நிலையில், அதை காவல்துறை அலட்சியமாகக் கையாண்டதே இச்சம்பவத்துக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.

சம்பவம் நடந்த அன்று காலை, பெரியகுளம் துணைக்கண்காணிப்பாளரை சந்தித்து ஒரு பிரிவினர் புகார் தெரிவித்துள்ளனர். அன்று மாலையே மோதல் ஏற்பட்டு, ஒருவர் அரிவாளால் வெட்டப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். எதிர் தரப்பில் வயதான ஒரு நபர் தாக்கப்பட்டதில் உயிரிழந்தார். தற்போது கைலாசபட்டியில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

தேனி மாவட்டத்தில் அடுத்தடுத்து நடக்கும் குற்றச்சம்பவங்களால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு