Published:Updated:

ஒரே பெண்ணிடம் பழகிய இரு நண்பர்கள்; பெண்ணின் கணவரிடம் காட்டிக்கொடுத்ததால் கொலை; என்ன நடந்தது?

தேவதானப்பட்டி போலீஸார் முகமது ஹாமீம் காணாமல்போனதாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவந்தனர்.

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள கெங்குவார்பட்டியைச் சேர்ந்தவர் ஜவஹர் சாதிக். இவருடைய மகன் முகமது ஹாமீம் (26). இறைச்சிக்கடையில் வேலை பார்த்துவந்த இவர், செப்டம்பர் 27-ம் தேதி வீட்டைவிட்டுத் தனது பைக்கில் கிளம்பியவர், அதன் பிறகு வீடு திரும்பவில்லை. இது குறித்து ஜவஹர் சாதிக் அளித்த புகாரின் பேரில், தேவதானப்பட்டி போலீஸார் முகமது ஹாமீம் காணாமல்போனதாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவந்தனர். இதற்கிடையே காமக்காபட்டி அருகே பழனிசாமி என்பவருக்குச் சொந்தமான தோட்டத்தில் உள்ள கிணற்றில் அழுகிய நிலையில் அடையாளம் தெரியாத சடலம் கிடந்தது குறித்து போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் காணாமல்போன முகமது ஹாமீமாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில், அவரின் குடும்பத்தினரை அழைத்து விசாரித்தனர்.

கொலை
கொலை
குஜராத்: திருமணம் தாண்டிய உறவு... எச்சரித்த கணவனை கொலை செய்த மனைவி, ஆண் நண்பருடன் கைது!

அப்போது முகமது ஹாமீம் வீட்டைவிட்டு வெளியே சென்றபோது அணிந்திருந்த உடையை வைத்து அவர்தான் என்பதை உறுதிசெய்தனர். இருப்பினும் மருத்துவப் பரிசோதனையில் உறுதிபடுத்த வேண்டும் என்பதற்காக தேனி அரசு மருத்துவமனைக்கு கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட சடலம் அனுப்பிவைக்கப்பட்டது. அங்கு பிரேத பரிதோசனை செய்த மருத்துவர்கள், மார்பிலும் வயிற்றிலும் கத்தியால் குத்தப்பட்டு இறந்திருக்கிறார் எனத் தெரிவித்தனர். இதையடுத்து காணாமல்போனதாக பதிவு செய்யப்பட்ட வழக்கை கொலை வழக்காக மாற்றினர் காவல்துறையினர். தேவதானப்பட்டி இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படையினர் விசாரணையைத் தீவிரப்படுத்தினர். விசாரணையில், முகமது ஹாமீமுக்கு கெங்குவார்பட்டியைச் சேர்ந்த திருமணமான பெண் ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவு இருந்திருக்கிறது. முகமது ஹாமீமுக்கு ரபீக் ராஜா நெருங்கிய நண்பர். ரபீக் ராஜாவும் அந்தப் பெண்ணுடன் பழகத் தொடங்கியிருக்கிறார். இதனால் முகமது ஹாமீமுடன் அந்தப் பெண் பழகுவதை நிறுத்திக்கொண்டார். இதையடுத்து ரபீக் ராஜாவுக்கும் அந்தப் பெண்ணுக்குமான உறவு குறித்து முகமது ஹாமீம், அந்தப் பெண்ணின் கணவருக்கு தெரியப்படுத்தியிருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த கணவர் மனைவியையும், ரபீக் ராஜாவையும் கண்டித்திருக்கிறார். தன்னுடன் நெருங்கிப் பழகிக்கொண்டே காட்டிக்கொடுத்துவிட்டதாக முகமது ஹாமீம் மீது ரபீக் ராஜா கோபத்தில் இருந்திருக்கிறார். இதையடுத்து அவரைத் தனியாக அழைத்து வந்து கொலை செய்ய நண்பர் ஆசிக் உடன் சேர்ந்து திட்டமிட்டிருக்கிறார். அதன்படி, செப்டம்பர் 27-ம் தேதி முகமது ஹாமீமைத் தனியாக வரவழைத்துக் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளனர். இதையடுத்து தடயங்களை அழிக்க கருப்பசாமி (25), பின்னிப்பாண்டி (26), பாண்டீஸ்வரன் (29), ஷேக் பரீத் (24) ஆகியோரை வரவழைத்திருக்கிறார். அவர்கள் அனைவரும் சேர்ந்து சடலத்தைப் பாழடைந்த கிணற்றில் வீசியது தெரியவந்தது. இதையடுத்து ரபீக் ராஜா, ஆசிக், கருப்பசாமி, பின்னிப்பாண்டி, பாண்டீஸ்வரன், ஷேக் பரீத் ஆகிய ஆறுபேரை போலீஸார் கைதுசெய்தனர். மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய தங்கப்பாண்டியை போலீஸார் தேடிவருகின்றனர்.

இதுகுறித்து போலீஸாரிடம் விசாரித்தபோது, ``அழுகிய நிலையில் கிணற்றில் கிடந்த சடலத்தை மீட்டதே பெரும் சவாலாக அமைந்துவிட்டது. அந்தச் சடலம் முகமது ஹாமீமுடையதுதானா என்பதில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. அப்போது உயிரிழந்தவரின் தங்கை, பிக் பாஸ் எழுத்து அச்சிடப்படிருந்த பனியனை வைத்து அந்தச் சடலம் தனது அண்ணனுடயதுதான் எனக் கூறினார். இதையடுத்து தேனி அரசு மருத்துவனையில் வைத்து இறந்தவரின் சுண்டுவிரல் வளைந்திருப்பதை வைத்து அவரது தந்தை முகமது ஹாமீமின் சடலம்தான் என உறுதிப்படுத்தினார். இதையடுத்து வழக்கமாக இறந்தவருடன் பழகும் அவருடைய நண்பர்கள் ஊரில் இல்லை என்பதை அறிந்தோம். அவர்களின் விவரங்களைச் சேகரித்து முதலில் ரபீக் ராஜா, ஆசிக் ஆகியோரைப் பிடித்தோம். அவர்களிடம் விசாரித்தபோது, ஆட்டு இறைச்சி வெட்டும் வேலை செய்துவந்த ரபீக் ராஜா, தனது ஆடு உரிக்கும் கத்தியால் நண்பனைக் குத்திக் கொன்றதாகக் குற்றத்தை ஒப்புக்கொண்டார்" என்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு