Published:Updated:

நாமக்கல்: பெட்ரோல் பங்க் மேலாளரிடம் ரூ.4,82,000 வழிப்பறி! - ஊழியரே திட்டமிட்டுச் செய்த சம்பவம்

திருச்செங்கோட்டிலுள்ள வங்கியில் பணத்தைச் செலுத்தச் சென்றுகொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிளில் அவரை இரண்டு பேர் பின்தொடர்ந்தனர். அவர்கள் திடீரென வேணுகோபால் சென்ற வாகனத்தை வழிமறித்தனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

திருச்செங்கோட்டில் இயங்கிவரும் ஒரு பெட்ரோல் பங்க் மேலாளரிடம், அந்த பங்கில் பணிபுரியும் ஊழியர் ஒருவரே, நண்பர்களோடு சேர்ந்து வழிப்பறி செய்திருக்கும் சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இது சம்பந்தமாக, பெட்ரோல் பங்க் ஊழியர் உட்பட நான்கு பேரை போலீஸார் கைதுசெய்துள்ளனர். மேலும், இது தொடர்பாக ஆறு பேரை வலைவீசித் தேடிவருகின்றனர்.

நாமக்கல்
நாமக்கல்
``நீ சிறுநீர் கழித்தால், எங்க ஊருக்கே தீட்டு'' - இளைஞரைத் தாக்கி சாதிய வன்கொடுமை செய்த கும்பல் கைது!

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகிலுள்ள சித்தாளந்தூர் அருகே கார்த்திக்கேயன் என்பவருக்குச் சொந்தமான பெட்ரோல் பங்க் ஒன்று இயங்கிவருகிறது. இதில் மேலாளராக வேணுகோபால் என்பவர் வேலை பார்த்துவருகிறார். இவர், கடந்த 11-ம் தேதி வழக்கம்போல் பெட்ரோல் பங்க்கில் வசூலான ரூ.4,82,000 பணத்தை தனது இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்றார். திருச்செங்கோட்டிலுள்ள வங்கியில் பணத்தைச் செலுத்தச் சென்றுகொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிளில் அவரை இரண்டு பேர் பின்தொடர்ந்தனர். அவர்கள் திடீரென வேணுகோபால் சென்ற வாகனத்தை வழிமறித்தனர்.

பின்னர், அவரை மிரட்டி, தாக்கி அவர் வைத்திருந்த ரூ.4,82,000 பணத்தைப் பறித்துச் சென்றனர். இது குறித்து, அவர் திருச்செங்கோடு ஊரக போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், ஊரக காவல் நிலைய போலீஸார், இந்த வழிப்பறிச் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்துவந்தனர். இந்தநிலையில், நேற்று காலை போலீஸார் பாலமடை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று பேரை நிறுத்தி விசாரித்தனர். அவர்கள் மூவரும் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தனர். இதையடுத்து, அவர்கள்மீது சந்தேகமடைந்த போலீஸார், அவர்கள் மூன்று பேரையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று, அவரிகளிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

திருச்செங்கோடு
திருச்செங்கோடு

போலீஸாரின் கிடுக்கிப்பிடி விசாரணையின் முடிவில், அவர்கள் ராமாபுரத்தைச் சேர்ந்த விக்கி என்கிற விக்னேஸ்வரன், பிரபாகரன், தினேஷ்பாபு என்பது தெரியவந்தது. அதோடு, பெட்ரோல் பங்க் மேலாளர் வேணுகோபாலிடம் வழிப்பறியில் ஈடுபட்டதும் அவர்கள்தான் என்பது தெரிந்தது. இந்த வழிப்பறிக்கு கார்த்திகேயனின் மற்றொரு பெட்ரோல் பங்க்கில் கடந்த ஆறு மாதங்களாக வேலை பார்த்துவரும், கொல்லப்பட்டி ஹவுஸிங் போர்டு பகுதியைச் சேர்ந்த ஜீவானந்தம் (25) என்பவர்தான் காரணம் என்பது தெரியவந்தது. மேலும், இந்த வழிப்பறிச் சம்பவத்தில் ஆறு பேருக்கு தொடர்பு இருப்பதும் தெரியவந்தது.

Vikatan

இதையடுத்து, போலீஸார் ஜீவானந்தத்தைப் பிடித்து விசாரித்தனர். அப்போது, அவர் வழிப்பறிக்குத் திட்டம் தீட்டிக் கொடுத்ததை ஒப்புக்கொண்டார். பின்னர், ஜீவானந்தம், விக்னேஸ்வரன், பிரபாகரன், தினேஷ்பாபு நால்வரையும் கைதுசெய்ததோடு, அவர்களிடமிருந்து ரூ.1,10,000, மோட்டார் சைக்கிள் உள்ளிட்டவற்றைப் பறிமுதல் செய்தனர். கைதான நான்கு பேரையும் போலீஸார் திருச்செங்கோடு கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். மேலும், இந்த வழிப்பறியில் தொடர்புடைய ஆறு பேரைத் தீவிரமாக தேடி வருகின்றனர். பெட்ரோல் பங்க் மேலாளரிடம் பணத்தை இளைஞர்கள் வழிப்பறி செய்துள்ள சம்பவம், அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு