Published:Updated:

திருவாரூர்: ``என் மகளின் சாவில் சந்தேகம் உள்ளது"- தந்தை புகார் ; ஆர்.டி.ஓ விசாரணை தீவிரம்!

இளம்பெண் தற்கொலை
இளம்பெண் தற்கொலை

அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக நேரில் சென்று பார்த்தபோது அவர்களின் மகள் தூக்கில் பிணமாகத் தொங்கியிருக்கிறார்.

திருவாரூரைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், திருமணமான ஏழு மாதத்தில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தன் மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக, அந்த இளம்பெண்ணின் தந்தை புகார் அளித்தார். அதைத் தொடர்ந்து வரதட்சணைக் கொடுமைதான் இதற்குக் காரணமா என்ற கோணத்தில் திருவாரூர் ஆர்.டி.ஓ விசாரணை மேற்கொண்டிருக்கிறார்.

அனிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது)
அனிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது)

திருவாரூர், அழகிரி காலனி பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜன். இவருடைய மகள் அனிதாவுக்கும் (பெயர் மாற்றப்பட்டுள்ளது), திருவாரூர் அருகேயுள்ள தியானபுரம் சாப்பாவூர் பகுதியைச் சேர்ந்த டிரம்ஸ் கலைஞரான பிரபாகரனுக்கும் ஏழு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்தநிலையில் கணவன, மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக, அடிக்கடி தகராறு நிகழ்ந்துள்ளது. இதனால் அனிதா கணவரைப் பிரிந்து திருவாரூர் அழகிரி காலனியிலுள்ள தனது பெற்றோர் வீட்டில் வசித்துவந்திருக்கிறார். இருவரையும் சமாதானப்படுத்திச் சேர்த்துவைக்க, இரு வீட்டாரும் பலமுறை முயன்றதாகச் சொல்லப்படுகிறது.

இந்தநிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரபாகரனின் சகோதரர் உயிரிழந்தார். அந்த துக்க நிகழ்வுக்காக, பிரபாகரனின் வீட்டுக்கு அனிதாவும் அவருடைய குடும்பத்தினரும் வந்திருக்கிறார்கள். அப்போது இருவீட்டாரும் சமாதானம் செய்து பிரபாகரனையும் அனிதாவையும் சேர்த்துவைத்திருக்கிறார்கள். இருவரும் மீண்டும் ஒன்றாக வாழ்ந்துவந்த நிலையில், அனிதா திடீரென தனது வீட்டில் தூக்குப்போட்டுத் தற்கொலை செய்துகொண்டதாக அவருடைய கணவர் பிரபாகரன் அனிதாவின் பெற்றோருக்குத் தகவல் அளித்திருக்கிறார். இதனால் அதிர்ச்சியடைந்த அனிதாவின் பெற்றோர் உடனடியாக நேரில் சென்று பார்த்தபோது அனிதா தூக்கில் பிணமாகத் தொங்கியிருக்கிறார். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த திருவாரூர் தாலுகா காவல் நிலைய போலீஸார், அனிதாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இது தொடர்பாக, அனிதாவின் தந்தை நாகராஜன் திருவாரூர் தாலுகா போலீஸில் புகார் அளித்தார். புகாரில், 'வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதால் தனது மகள் உயிரிழந்தார் என்றும், தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாகவும்' தெரிவித்திருந்தார். இதன் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறார்கள். அனிதாவுக்குத் திருமணம் நடந்து ஏழு மாதங்களே ஆவதால் வரதட்சணைக் கொடுமையால் அவர் இறந்தாரா என்பது குறித்து திருவாரூர் ஆர்.டி.ஓ விசாரணை நடத்திவருகிறார்.

அடுத்த கட்டுரைக்கு