Published:Updated:

மருத்துவமனையிலிருந்து தப்பிய கைதி; நான்கு போலீஸார் சஸ்பெண்ட்!

கைதுசெய்யப்பட்ட பாலமுருகன்
கைதுசெய்யப்பட்ட பாலமுருகன்

தூத்துக்குடியில் 23 குற்ற வழக்குகளில் தொடர்புடையை கைதி பாலமுருகன், அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது தப்பியோடி தலைமறைவான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி, நாரைக்கிணறு, கழுகுமலை, புளியம்பட்டி சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த இரு மாதங்களாகத் தொடர் நகைக் கொள்ளை சம்பவங்கள் நடந்துவந்தன. இந்தச் சம்பவங்கள் குறித்து சம்பந்தப்பட்ட காவல் நிலைய போலீஸார், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவந்தனர். இந்தச் சம்பவங்களில் ஈடுபட்ட கொள்ளையனைக் கண்டுபிடிக்க, புளியம்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் தர்மர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. கொள்ளைச் சம்பவங்கள் நடந்த வீடுகள், அந்தப் பகுதியிலுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வுசெய்ததுடன் கிடைத்த தடயங்களைவைத்தும் போலீஸார் விசாரணை நடத்தினர்.

`100 நாள்களில் அதிசயம்' என விளம்பரம்; ரூ.1.5 கோடி மோசடி! -  ரியல் எஸ்டேட் அதிபர் கைது
தப்பியோடிய விசாரணைக் கைதி பாலமுருகன்
தப்பியோடிய விசாரணைக் கைதி பாலமுருகன்

இதில் கிடைத்த கைரேகைகளை இதற்கு முன்பு கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட கொள்ளையர்களின் கைரேகையுடன் ஒப்பிட்டுப் பார்த்தபோது அது, தென்காசி மாவட்டம், கடையத்தைச் சேர்ந்த பாலமுருகனின் கைரேகை எனத் தெரியவந்தது. இதையடுத்து பாலமுருகனை போலீஸார் கைதுசெய்தனர்.

அவர் கொள்ளையடித்துப் பதுக்கிவைத்திருந்த 22 சவரன் தங்க நகைகளையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். பாலமுருகனின் சொந்த ஊரான கடையம் அருகிலுள்ள கல்யாணிபுரத்தில், கடந்த 11.08.2019-ல் எலுமிச்சைத் தோட்டத்துடன்கூடிய வீட்டில் தனியாக வசித்துவந்த சண்முகவேல் - செந்தாமரை என்ற வயதான தம்பதியரிடம் நகைகளைக் கொள்ளையடிக்கும் நோக்கத்துடன் கொலை முயற்சியும் நடந்தது. அதில், செந்தாமரை அணிந்திருந்த நாலே முக்கால் சவரன் தங்கச் சங்கிலி கொள்ளைபோனது. அந்த வீட்டிலிருந்த சிசிடிவி கேமராவில் அரிவாளைக் காட்டி மிரட்டியது, சண்முகவேலின் கழுத்தை நெரித்தது, கொள்ளையனை செந்தாமரை பிளாஸ்டிக் சேரால் தூக்கி அடித்து விரட்டியது உள்ளிட்டவை தெளிவாகப் பதிவாகியிருந்தன.

ஜெயக்குமார் - மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
ஜெயக்குமார் - மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

இந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வைரலாகின. அந்த வழக்கில் கைதான இருவரில் முதல் குற்றவாளி இந்த பாலமுருகன்தான். இவர்மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட 23 வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த 16-ம் தேதி கைதுசெய்யப்பட்ட பாலமுருகன், பேரூரணியிலுள்ள தூத்துக்குடி மாவட்டச் சிறையில் விசாரணைக் கைதியாக அடைக்கப்பட்டார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கடந்த 23-ம் தேதி முதல் தலைவலி உள்ளிட்ட பிரச்னைகளுக்காக சிறை அதிகாரிகள் அனுமதியுடன் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். இங்குள்ள 3-வது தளத்திலுள்ள ஆண்கள் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்குப் பாதுகாப்பாக தூத்துக்குடி ஆயுதப்படையைச் சேர்ந்த தலைமைக் காவலர் உதயகுமார், காவலர்கள் பகவதிதெய்வம், விக்னேஷ், மணிகண்டன் ஆகியோர் ஈடுபட்டிருந்தனர். இன்று அதிகாலையில் பாலமுருகன் மருத்துவமனையிலிருந்து தப்பியோடி தலைமறைவானார்.

பறிமுதல் செய்யப்பட்ட நகைகளைப் பார்வையிடும் எஸ்.பி.ஜெயக்குமார்
பறிமுதல் செய்யப்பட்ட நகைகளைப் பார்வையிடும் எஸ்.பி.ஜெயக்குமார்

இது குறித்த புகாரின் பேரில் தென்பாகம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். சிகிச்சையிலிருந்த விசாரணைக் கைதியின் பாதுகாப்பு பணியின்போது கவனக்குறைவாகவும், அஜாக்கிரதையாகவும் இருந்ததாக தலைமைக் காவலர் உள்ளிட்ட நான்கு போலீஸாரை மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டிருக்கிறார். போலீஸ் காவலில் சிகிச்சையில் இருந்த கைதி தப்பியோடிய சம்பவம் போலீஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு