Published:Updated:

திருச்சி: கொடிகட்டிப் பறக்கும் விற்பனை... `கஞ்சா’ விற்பதில் தகராறு! - இளைஞர் கொலையால் அதிர்ச்சி

கொலை செய்யப்பட்ட அருண்
கொலை செய்யப்பட்ட அருண்

``24 வயது நிரம்பிய இளைஞர் கையில் எப்படி கஞ்சா வந்தது. அதுவும் கஞ்சா விற்பனை செய்வதில் இரு தரப்பினருக்குள் நடந்த மோதலில் வெட்டிக் கொல்கிறார்களென்றால் திருச்சியில் சட்டம் ஒழுங்கு எப்படியிருக்கிறது என்று நீங்களே நினைத்துப்பாருங்கள்.”

கஞ்சா விற்பனை செய்த வாலிபரை ஏழு பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டி கொலை செய்த சம்பவம் திருச்சியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. "மாநகர் முழுவதும் கஞ்சா விற்பனை அமோகமாக நடப்பதற்கு முக்கியக் காரணமே திருச்சி போலீஸார்தான்" என்று ஆதங்கப்படுகிறார்கள் சமூக ஆர்வலர்கள். என்ன நடக்கிறது? விசாரித்தோம்.

திருச்சி
திருச்சி

திருச்சி நர்சரி கார்டன் பின்புறத்திலுள்ள பள்ளத்தில் வாலிபர் ஒருவர் வெட்டுக் காயங்களுடன் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்திருந்ததை, அந்த வழியாகச் சென்ற பொதுமக்கள் பார்த்துள்ளனர். உடனடியாக ஏர்போர்ட் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். போலீஸார் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்து, அந்த வாலிபரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை கொடுத்தும் பலனளிக்காமல் உயிரிழந்தார்.

இந்தக் கொலை சம்பந்தமாக தர்மசீலன், ஜாகீர் உசேன், பிரேம், முபாரக், வீரக்குமார், நந்தகுமார் ஆகிய ஏழு பேரை போலீஸார் கைதுசெய்துள்ளனர். மேலும் கொலைக்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரித்துவருகின்றனர்.

வழக்கை விசாரித்துவரும் காவலர்களிடம் பேசினோம். ”அருண் என்கிற பையனுக்கு வயசு 24 தான் ஆகுது. இந்தப் பையன் கொரோனா ஊரடங்கு நேரத்தில் சரக்கு மற்றும் கஞ்சா விற்பனை போன்ற பல்வேறு சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டிருக்கிறார். மேலும் கஞ்சா வாங்கி விற்பதில் அந்தப் பகுதியைச் சேர்ந்த பிரேம், ஜாகீர் உசேன் டீமோடு அருணுக்கும் ஏற்கெனவே பலமுறை முன்விரோதம் இருந்திருக்கிறது.

கொலை செய்யப்பட்ட அருண்
கொலை செய்யப்பட்ட அருண்

இந்தநிலையில், நேற்று மாலை இரு தரப்புக்கும் நடந்த சண்டையின்போது அருணின் தலைப் பகுதியில் மூன்று இடங்களில் வெட்டியிருக்கிறார்கள். தப்பித்துவிடாமல் இருக்க முதலில் காலில் வெட்டியிருக்கிறார்கள். பின்னர், கை மற்றும் வயிற்றுப் பகுதியில் சரமாரியாக வெட்டியிருக்கிறார்கள். இந்தக் கொலைச் சம்பவத்தில் ஏழு பேரைப் பிடித்திருக்கிறோம். அவர்கள் எதற்காகக் கொலை செய்தார்கள் என்று விசாரிக்கவிருக்கிறோம். முழுமையாக விசாரித்துவிட்டுப் பேசுகிறோம்" என்று முடித்துக்கொண்டனர்.

இது குறித்து சமூக ஆர்வலர் ரவிச்சந்திரனிடம் பேசினோம். ```அமைதியான நகரம்’ என்று பெயரெடுத்திருந்த திருச்சி மாநகர், சமீபகாலமாகவே கஞ்சா மற்றும் குட்காவின் கூடாரமாகத் திகழ்ந்துகொண்டிருக்கிறது. மாவட்டத்தில் பல பகுதிகளில் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப்பொருள்கள் தாராளமாகக் கிடைத்துக்கொண்டிருக்கின்றன. பள்ளி மாணவர்கள் பலர் இந்த போதைப்பொருள்களுக்கு அடிமையாகிவருகின்றனர். இந்த போதைப்பொருள்களால் மாநகர் உள்ளிட்ட பகுதிகளில் ரெளடிகளின் அட்டகாசம் அதிகரித்துவருகிறது.

திருச்சி போலீஸார்
திருச்சி போலீஸார்

24 வயது நிரம்பிய இளைஞர் கையில் எப்படி கஞ்சா வந்தது. அதுவும் கஞ்சா விற்பனை செய்வதில் இரு தரப்பினருக்குள் நடந்த மோதலில் வெட்டிக் கொல்கிறார்களென்றால், திருச்சியில் சட்டம் ஒழுங்கு எப்படியிருக்கிறது என்று நீங்களே நினைத்துப்பாருங்கள். திருச்சியில் கஞ்சா விற்பனை செய்வது யார்... எங்கிருந்து பொருள் வருகிறது, யார் யார் கைமாற்றி விற்பனை செய்கிறார்கள் என்கிற முழுத் தகவலும் இங்குள்ள போலீஸாருக்கு நன்கு தெரியும். ஆனால் அவர்கள் நடவடிக்கை எடுப்பதில்லை.

காரணம் சம்பந்தப்பட்ட போலீஸாரை முறையாக கவனிப்பதால்தான் கஞ்சா விவகாரத்தில் கண்மூடிக்கொண்டிருக்கிறார்கள். கஞ்சா விவகாரத்தில் போலீஸ் கடுமையான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே கொலைகள் நடப்பதைத் தடுக்க முடியும். இளைஞர்களும் தவறான பாதைக்குச் செல்ல மாட்டார்கள். இல்லையேல் இவர்களின் எதிர்காலம் கேள்விக்குறிதான்" என்று காட்டமாகப் பேசினார்.

அடுத்த கட்டுரைக்கு