Published:Updated:

உத்தரகாண்ட்: திருமண ஊர்வலத்தின்போது பட்டியலினத்தவரை குதிரையிலிருந்து இறக்கிய மாற்றுச் சமூகத்தினர்?!

திருமணம்

மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த சிலர், மணமகன் பட்டியலினத்தவர் என்பதால் அவரைக் குதிரையிலிருந்து கீழே இறங்கச் சொல்லி கட்டாயப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

உத்தரகாண்ட்: திருமண ஊர்வலத்தின்போது பட்டியலினத்தவரை குதிரையிலிருந்து இறக்கிய மாற்றுச் சமூகத்தினர்?!

மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த சிலர், மணமகன் பட்டியலினத்தவர் என்பதால் அவரைக் குதிரையிலிருந்து கீழே இறங்கச் சொல்லி கட்டாயப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

Published:Updated:
திருமணம்

உத்தரகாண்ட் மாநிலம், அல்மோரா மாவட்டத்திலுள்ள கிராமம் ஒன்றில் கடந்த திங்கள்கிழமை தர்ஷன் லால் என்பவரின் மகனுக்குத் திருமணம் நடைபெற்றது. தர்ஷன் லால் பட்டியலினத்தவர் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், திருமணத்தின்போது மணமகன் குதிரையில் அமர்த்தப்பட்டு ஊர்வலமாக ஊருக்கு அழைத்து வரப்பட்டிருக்கிறார். அப்போது, மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த சிலர், மணமகன் பட்டியலினத்தவர் என்பதால் அவரைக் குதிரையிலிருந்து கீழே இறங்கச் சொல்லி கட்டாயப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

அதற்கு மணமகன் வீட்டார் மறுப்பு தெரிவிக்கவே, ``குதிரையிலிருந்து கீழே இறங்கவில்லையென்றால், மணமகனைக் கொன்றுவிடுவோம்" என்று மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, மணமகனின் தந்தை இது தொடர்பாக போலீஸில் புகாரளித்தார். அதில் அவர் ``என் மகன் விக்ரம் குமாரின் திருமண ஊர்வலத்தின்போது, திடீரென கிராம மக்கள் சிலர் ஊர்வலத்தை இடைமறித்தனர். ஏன் என்று கேட்டபோது, நீங்கள் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள், குதிரையில் வரக் கூடாது, உன் மகனை கீழே இறக்கு என்று வற்புறுத்தினர். மேலும், குதிரையிலிருந்து இறங்காவிட்டால் என் மகனைக் கொன்றுவிடுவோம் என்று மிரட்டினார்கள்" எனப் புகாரில் குறிப்பிட்டிருந்தார்.

போலீஸ்
போலீஸ்
சித்திரிப்புப் படம்

பின்னர் தர்ஷன் லால் அளித்த புகாரின் அடிப்படையில், விசாரணை மேற்கொண்ட மாவட்ட மாஜிஸ்ட்ரேட் வந்தனா சிங், ``இது தொடர்பாக விசாரணை நடத்த துணை-பிரிவு மாஜிஸ்ட்ரேட்டுக்கு உத்தரவிட்டுள்ளேன். புகாரில் கூறியிருப்பது உண்மையெனக் கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" எனக் கூறினார். இந்த நிலையில், விசாரணை நடத்தியதில், ஐந்து பெண்கள் உட்பட ஆறு பேர் மீது கிரிமினல் மிரட்டல் மற்றும் பட்டியலினத்தவர் வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளதாக மாவட்ட துணை-பிரிவு மாஜிஸ்ட்ரேட்டு தகவல் தெரிவித்திருக்கிறார்.

ஆனால் இந்தச் சம்பவம் தொடர்பாகப் பேசிய அந்த கிராமத்தின் தலைவர் விஜய் தியானி, ``எங்கள் ஊரிலுள்ள பூமியா தேவ்தா கோயிலுக்கு அருகிலுள்ள குறிப்பிட்ட பகுதியில், சாதி வேறுபாடின்றி யாருமே குதிரைமேல் செல்லக் கூடாது என்பது எங்களுடைய பாரம்பர்ய வழக்கம். அதைத்தான் அவர்களிடம் கூறினோம். ஆனால் அவர்கள் அதை ஏற்க மறுத்துவிட்டனர்" என மறுப்பு தெரிவித்திருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism