`33 வயது நபருக்கு 13 வயது சிறுமி!’ - ஷாக் கொடுத்த வேலூர் திருமண ஏற்பாடு

வேலூரில், 33 வயது நபருடன் 13 வயது சிறுமிக்கு நடக்கவிருந்த திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியிருக்கிறார்கள்.
வேலூர், கொசப்பேட்டையைச் சேர்ந்த சுப்பு என்பவரின் 33 வயது மகன் சதீஷ். இவர், அதே பகுதியில் ஹோட்டல் நடத்திவருகிறார். சதீஷுக்கும், அவரது தெருவில் வசிக்கும் 13 வயதுடைய சிறுமிக்கும் திருமணம் செய்துவைக்க இருவீட்டாரும் கலந்துபேசியிருக்கிறார்கள். வரும் 26-ம்தேதி, திருமணத்தை நடத்துவதற்கான ஏற்பாடுகளையும் மும்முரமாக செய்துவந்திருக்கிறார்கள். அந்தச் சிறுமிக்கு தந்தை கிடையாது. தாய் உடல்நிலை பாதிக்கப்பட்டிருக்கிறார். 16 வயது மற்றும் 19 வயதில் இரண்டு அண்ணன்கள் மட்டுமே வேலைக்குச் சென்று குடும்பச் சுமையை சமாளித்துவருகிறார்கள். குடும்பத்தின் வறுமைநிலை காரணமாகவே, 33 வயதுடைய சதீஷுக்குத் திருமணம் செய்துவைக்க சிறுமியை அவரது தாய் மிரட்டி கட்டாயப்படுத்தியிருக்கிறார்.

இந்தநிலையில், சிறுமிக்கு பிறப்புச் சான்றிதழ் இல்லாத காரணத்தால், ஆதார் கார்டு பெற முடியாத சூழல் ஏற்பட்டது. இதற்காக, ராணிப்பேட்டை மாவட்டம், பாணாவரத்திலுள்ள மருத்துவர் ஒருவரைச் சந்தித்து பிறப்புச் சான்றிழுக்கான பரிந்துரைக் கடிதத்தை போலியாகப் பெற்றிருக்கிறார்கள். மருத்துவர் கொடுத்த பரிந்துரைக் கடிதத்தில், சிறுமியின் வயது 19 என்று பொய்யாக குறிப்பிடச் செய்து அதைவைத்து பிறப்புச் சான்றிதழையும் பெற்றிருக்கிறார்கள். பின்னர், ஆதார் கார்டையும் வாங்கியிருக்கிறார்கள். ஆதாரில் 19 வயது என்று குறிப்பிடப்பட்டிருந்ததால், திருமண வயதைச் சிறுமி எட்டிவிட்டதைப்போலக் காட்டிக்கொண்டனர்.
இது குறித்து, நேற்று இரவு வேலூர் மாவட்ட சமூக நலத்துறையின் பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவைமைய நிர்வாகி பிரியங்காவுக்கு போன் மூலமாக ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, பிரியங்கா தலைமையிலான பணியாளர்கள், அந்தச் சிறுமியின் வீட்டுக்கு இன்று காலை விரைந்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அந்தச் சிறுமி 8-ம் வகுப்பு முடித்துவிட்டு நடப்புக் கல்வியாண்டில் 9-ம் வகுப்புசக்குச் செல்லவிருந்தது தெரியவந்தது. அவர் படிக்கும் பள்ளிக்குச் சென்று மாற்றுச் சான்றிதழை வாங்கிப் பார்த்தபோது, 13 வயது என்பது உறுதிசெய்யப்பட்டது.

இதையடுத்து, சிறுமியை மீட்டு அரியூரிலுள்ள காப்பகத்தில் தங்க வைப்பதற்கான ஏற்பாடுகளை பெண்களுக்கான சேவைமைய பணியாளர்கள் செய்துவருகிறார்கள். மேலும், இது தொடர்பாக சிறுமியின் தாய், அவரைத் திருமணம் செய்து கொள்ளவிருந்த சதீஷ், அவருடைய பெற்றோர் மற்றும் பிறப்புச் சான்றிதழ் பெற போலியான பரிந்துரைக் கடிதம் கொடுத்த மருத்துவர் ஆகியோர்மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வேலூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்திலும் ஒருங்கிணைந்த சேவைமைய நிர்வாகி பிரியங்கா புகார் கொடுத்திருக்கிறார். புகார் மனுவின் அடிப்படையில், போலீஸாரும் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.