Published:Updated:

காட்பாடி டு பேரணாம்பட்டு குடோன்..! - கார்களில் கடத்தப்பட்ட செம்மரக்கட்டைகள் பறிமுதல்

பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக்கட்டைகள்
News
பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக்கட்டைகள்

பேரணாம்பட்டு அருகே செம்மரக்கட்டைகளைக் கடத்தி, பதுக்க முயன்ற இரண்டு பேரை போலீஸார் கைதுசெய்தனர்.

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அருகேயுள்ள அழிஞ்சிக்குப்பம் கிராமத்தில், மேல்பட்டி எஸ்.ஐ ஆறுமுகம் உள்ளிட்ட போலீஸார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, குடியாத்தம்-ஆம்பூர் சாலையில் வேகமாக வந்த ஆந்திர பதிவெண் கொண்ட இரண்டு சொகுசு கார்களைத் தடுத்து நிறுத்தினர். ஒரு காரிலிருந்த டிரைவர் இறங்கி தப்பி ஓடினார். இதனால், உஷாரான போலீஸார் இரண்டு கார்களையும் சுற்றிவளைத்து சோதனை செய்தபோது, அவற்றில் செம்மரக்கட்டைகள் கடத்திவரப்பட்டிருப்பதைக் கண்டுபிடித்தனர். இரண்டு கார்களிலும் எட்டு செம்மரக்கட்டைகள் இருந்தன. இது தொடர்பாக, மற்றொரு காரை ஓட்டிவந்த நபரைப் பிடித்து விசாரணை நடத்தினர்.

கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட கார்கள்
கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட கார்கள்

அவர், வேலூர் அருகேயுள்ள அமிர்தி நஞ்சுகொண்டாபுரத்தைச் சேர்ந்த 30 வயதாகும் சுரேஷ் பாபு என்பதும், காட்பாடியில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த செம்மரக்கட்டைகளை பேரணாம்பட்டு எம்.வி.குப்பம் கிராமத்திலுள்ள அவரின் மாமா பழனி என்பவரின் குடோனுக்கு கார்களில் கடத்திச் செல்வதும், காரிலிருந்து தப்பி ஓடிய நபர் ராகுல் என்பதும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, எம்.வி.குப்பம் கிராமத்திலுள்ள பழனியின் குடோனுக்குச் சென்ற போலீஸார், அங்கு பதுக்கிவைக்கப்பட்டிருந்த 10 செம்மரக் கட்டைகளையும் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட மொத்த செம்மரக் கட்டைகளின் மதிப்பு 12 லட்சம் ரூபாய் என போலீஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக, சுரேஷ் பாபு, அவரின் மாமா பழனி ஆகிய இரண்டு பேரையும் கைதுசெய்து, தப்பி ஓடிய நபரையும் தேடி வருகிறார்கள். கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட இரண்டு சொகுசு கார்களையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz