விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தை அடுத்திருக்கிறது கிளியனூர். இங்கு, புதுவை - திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு சோதனைச்சாவடி அமைந்திருக்கிறது. புதுச்சேரியிலிருந்து கடத்தப்படும் மதுபானங்கள், சாராயம் போன்றவற்றைத் தடுப்பதற்காக 24 மணி நேரமும் காவல்துறையினர் அங்கு சுழற்சிமுறையில் பணியில் ஈடுபட்டுவருகின்றனர். மேலும், போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகள் மீதும், மின்னணு சாதனத்தின் மூலம் அபராதம் விதித்துவருகின்றனர். இந்த நிலையில், நேற்று இரவு 12 மணி அளவில் கிளியனூர் காவல் நிலையத்தைச் சேர்ந்த திருஞானம், கார்த்தி ஆகிய போலீஸார் அங்கு பணியில் ஈடுபட்டு, வாகனங்களைச் சோதனை செய்திருக்கின்றனர்.

அப்போது புதுவையிலிருந்து திண்டிவனம் நோக்கி வந்த இரு சக்கர வாகனம் ஒன்றை நிறுத்த முயன்றனர். அந்த வாகனத்தில் வந்த இரண்டு பேரும் தலைக்கவசம் அணிந்திருந்திருக்கின்றனர். போலீஸார், வாகனத்தை வழிமறிப்பதை அறிந்த அவர்கள், தங்களது இரு சக்கர வாகனத்தின் வேகத்தைக் குறைப்பதுபோல நடித்து, போலீஸாரின் கையில் வைத்திருந்த அபராதம் விதிக்கும் மின்னணு சாதனத்தைப் பறித்துக்கொண்டு ஜெட் வேகத்தில் பறந்திருக்கின்றனர். இதனால் செய்வதறியாமல் தவித்த போலீஸார், தங்களுடைய உயரதிகாரிகளுக்குத் தகவல் அளித்திருக்கின்றனர்.
இதனால் காவல்துறையினர் உஷார்படுத்தப்பட்டபோதும், மர்ம நபர்கள் சிக்காமல் தப்பிவிட்டனர். இது குறித்த தகவலின்பேரில், சம்பவ இடத்துக்குச் சென்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா விசாரணை மேற்கொண்டார். மேலும், தலைக்கவசம் அணிந்திருந்த இருவர் போலீஸாரிடமிருந்து அபராதம் விதிக்கும் சாதனத்தைப் பறித்துச் செல்லும் காட்சிகள் சுங்கச்சாவடியில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி-யில் பதிவாகியிருக்கின்றனவாம்.

அந்த சிசிடிவி காட்சிகளைக்கொண்டு போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். இந்த நிலையில், இன்றைய தினம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் திண்டிவனம் காவல் உட்கோட்டத்தில் சம்பந்தப்பட்ட காவலர்களிடம் விசாரணை மேற்கொண்டுவருகிறாராம். இரண்டு மர்ம நபர்கள், பணியில் இருந்த போலீஸாரிடமே கைவரிசை காட்டிய சம்பவம் விழுப்புரம் மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.