Election bannerElection banner
Published:Updated:

வேலூர்:`ரூ.6 லட்சம் பணத்துக்கு ஆசை!’ - தொழிலாளி கொலையில் சிக்கிய மைத்துனர்

கைதுசெய்யப்பட்ட குமார்
கைதுசெய்யப்பட்ட குமார்

வேலூரில், ரூ.6 லட்சம் பணத்துக்கு ஆசைப்பட்டு தொழிலாளியைக் கொடூரமாகக் கொலை செய்த தங்கையின் கணவனைப் போலீஸார் கைதுசெய்துள்ளனர்.

வேலூர், கஸ்பா ஃபையர்லைன் பகுதியைச் சேர்ந்தவர் ராஜன். இவருக்கு வயது 34. கூலித் தொழில் செய்துவந்த ராஜன், கடந்த வாரம் திடீரென மாயமானார். குடும்பத்தினர் அவரைத் தேடிவந்த நிலையில், கடந்த 10-ம் தேதி சித்தேரி ரயில்வே கேட்டுக்கு அருகேயுள்ள விவசாயக் கிணற்றிலிருந்து அழுகிய நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். சடலத்தின் கை கால்கள் கட்டப்பட்டிருந்ததால், கொலையெனத் தெரியவந்தது. அரியூர் போலீஸார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், வழக்கு பதிந்து விசாரணையைத் தீவிரப்படுத்தியபோது, ராஜன் கொலைக்கான திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.

கொலை செய்யப்பட்ட ராஜன்
கொலை செய்யப்பட்ட ராஜன்

ராஜனை அவரின் தங்கை கணவர் குமார் என்பவரே தீர்த்துகட்டியிருப்பது தெரியவந்தது. குமார் நேற்று மாலை கைதுசெய்யப்பட்டார். இந்தச் சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது, ‘``கொலை செய்யப்பட்ட ராஜனின் தாய் லட்சுமி துப்புரவுப் பணியாளராக வேலூர் மாநகராட்சியில் வேலை செய்துவந்தார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தாய் இறந்துவிட அவருக்கான பணப்பலன் 6 லட்சம் ரூபாய் வர வேண்டியிருந்தது. அந்தப் பணத்தை பெறுவதில் ராஜனுக்கும், அவரின் தங்கை உஷாவுக்கும் தகராறு ஏற்பட்டிருக்கிறது.

மாமியார் லட்சுமி பணியின்போது, மரணமடைந்திருப்பதால் அந்த வேலையை வாரிசு அடிப்படையில் தன் மனைவிக்குப் பெற்றுத்தர குமார் நினைத்திருக்கிறார். இதற்கும் ராஜன் இடையூறாக இருந்திருக்கிறார். இது தொடர்பான விரோதம் முற்றியநிலையில், ராஜனைக் கொலை செய்யத் திட்டமிட்டிருக்கிறார் தங்கையின் கணவர் குமார். திட்டமிட்டபடி, கடந்த 7-ம் தேதி ராஜனைப் பென்னாத்தூருக்கு அழைத்துச் சென்ற குமார் அங்கு மது வாங்கிக்கொண்டு சித்தேரி அருகே அமர்ந்து ஊற்றிக் கொடுத்திருக்கிறார்.

கைதுசெய்யப்பட்ட குமார்
கைதுசெய்யப்பட்ட குமார்

அளவுக்கு அதிகமாக மது குடித்த ராஜன், தடுமாற ஆரம்பித்தார். இதுதான் சரியான நேரம் என்று முடிவெடுத்த மைத்துனர் குமார், ராஜனின் கைகால்களைக் கயிற்றால் கட்டி தரதரவென இழுத்துச் சென்று அருகிலிருந்த கிணற்றுக்குள் வீசியதாகக் கூறப்படுகிறது. `தொல்லை ஒழிந்துவிட்டது’ என்று நிம்மதிப் பெருமூச்சுவிட்ட குமார், மாமியாரின் பணப்பலனும் கிடைத்துவிடும். வாரிசு அடிப்படையில் மனைவிக்கு வேலையையும் வாங்கிவிடலாம் என்று பதற்றமே இல்லாமல் சுற்றித் திரிந்தபோது, வசமாக சிக்கிக்கொண்டார் என்று விவரிக்கிறது காவல்துறை. ராஜா கொலையில் அவரின் தங்கைக்கும் தொடர்பிருக்கிறதா என்ற கோணத்திலும் போலீஸார் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு