Published:Updated:

கறுப்புப்பண ஒழிப்புச் சட்டத்தின் கீழ் நோட்டீஸ்! - ரிலையன்ஸ் நிறுவனம் மீது நடவடிக்கை?

கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது வருமான வரித்துறை. ஆனால் இதை யாருக்கும் தெரியாதவகையில் அனுப்பியுள்ளது.

mukesh ambani
mukesh ambani

பல நாடுகளில் இருக்கும் அமைப்புகளிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் 2015 -ஆண்டு கறுப்புப் பண ஒழிப்புச் சட்டத்தின் கீழ், முகேஷ் அம்பானியின் குடும்ப உறுப்பினர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது வருமான வரித்துறையின் மும்பைப் பிரிவு. கணக்கில் காட்டபடாத வெளிநாட்டு வருமானம் மற்றும் சொத்துகள் வைத்திருப்பதாக முகேஷ் அம்பானியின் மனைவி நீட்டா அம்பானி மற்றும் அவரது மூன்று பிள்ளைகளின் பெயரில் மார்ச் 28-ம் தேதியே நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

income tax department
income tax department

ஆனால் இது யாருக்கும் தெரியாத வகையில் ரகசியமாக அனுப்பப்பட்டுள்ளது. கணக்கில் காட்டப்படாத வெளிநாட்டு வருவாய் மற்றும் சொத்துகள் தொடர்பான புகாரில் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. கணக்கில் காட்டப்படாத வெளிநாட்டு வருவாய் மற்றும் சொத்துகளைக் கண்டறிந்து வரி வசூலிக்கும் கறுப்புப் பண தடுப்புச் சட்டம், 10 -வது பிரிவின் கீழ் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

2011-ம் ஆண்டில், ஜெனீவாவில் உள்ள ஹெச்.எஸ்.பி.சி (HSBC) வங்கியில் இந்தியாவைச் சேர்ந்த 700 பேர் மற்றும் பல நிறுவனங்கள் கணக்கு வைத்திருக்கும் விவரங்களை அரசு பெற்ற பிறகு வருமான வரித்துறை தன் விசாரணையைத் தொடங்கியுள்ளது. இந்த வங்கியில் 1,195 பேர் கணக்கு வைத்துள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் மற்றும் சுவிஸ் லீக்ஸ் புலனாய்வுப் பத்திரிகைகள் தகவலை வெளியிட்டுள்ளன. வரிவிலக்கு நாடுகளில் இயங்கும்,14 ஆப்ஷோர் கம்பெனிகளின் ( offshore companies) கணக்கான 601 மில்லியன் டாலருக்கும் ரிலையன்ஸ் குழுமத்துக்குமான தொடர்பை `இந்தியன் எக்ஸ்பிரஸ்’ செய்தி நிறுவனம் அம்பலப்படுத்தியுள்ளது.

mukesh ambani
mukesh ambani

பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகளை அடிப்படையாகக் கொண்ட கேபிட்டல் இன்வெஸ்ட்மென்ட் டிரஸ்ட் மூலமாக முகேஷ் அம்பானி குடும்பம் பயனடைந்துள்ளனர். இது குறித்த விவரங்களை அவர்கள் கணக்குக் காட்டவில்லை என்றும் வருமான வரித்துறை நோட்டீஸில் புகார் கூறப்பட்டிருந்ததாகவும் இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நோட்டீஸ் தொடர்பாக ரிலையன்ஸ் செய்தி தொடர்பாளரிடம் கேட்டபோது, ``இதுபோன்ற எந்த நோட்டீஸூம் அனுப்பப்படவில்லை” என்று மறுப்பு தெரிவித்துள்ளார்.