வறட்சிக்குப் பெயர்போன சிவகங்கை மாவட்டத்தில், நீர்ப் பற்றாக்குறை காரணமாக வனத்துறையினரே யூகலிப்டஸ் மரங்களை நட்டு வறட்சியைத் தாங்கிப் பிடிக்கும் நிலையில்தான் உள்ளனர். மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளைத் தவிர, மற்ற பகுதிகள் கல்வியிலும் தொழில் வாய்ப்புகளிலும் முன்னேற்றம் அடையவில்லை. இந்தநிலையில் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் சிறுமிகளுக்குத் திருமண வயதை எட்டும் முன்பே கட்டாயத் திருமணம் செய்து வைப்பதாகப் புகார்கள் எழுந்துள்ளன.

குழந்தைத் திருமணப் புகார்கள் குறித்து தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பாக்கிய மேரி கூறுகையில், ``சிவகங்கை மாவட்டத்தில் பல இடங்களில் குழந்தைத் திருமணங்கள் இன்றும் நடைபெறுகின்றன. குறிப்பாக மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி, மதகுப்பட்டி, ஏரியூர் உள்ளிட்ட பல இடங்களில் மறைமுகமாக நடைபெறுகிறது. மாவட்ட நிர்வாகம், குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பு, என்.ஜி.ஓ. உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும் குழந்தை திருமணங்கள் பற்றி தெரியவந்து தடுத்தாலும், பல்வேறு குழந்தைத் திருமணங்கள் வெளியிலேயே தெரிவதில்லை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
குழந்தைத் திருமணம் நடப்பதை வெளியில் சொல்லாமல் காதும், காதும் வைத்து முடித்து விடுகின்றனர். அறிவாளித்தனமாக திருமணத்தை முடித்து வைத்துவிட்டதாகப் பெற்றோர் நினைத்தாலும் பாதிக்கப்படப் போவது பிள்ளைகள்தான். பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகள் இடைநிறுத்தம் செய்தால் அதன் காரணங்களை ஆய்வு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் கண்டிப்பாகக் குழந்தைத் திருமணங்களைத் தடுக்கலாம்.

அங்கன்வாடி சார்பாக வளர் இளம் பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக மாதம் இரண்டு முறை விழிப்புணர்வு செய்கிறோம். ஆனாலும், பெற்றோர்களுக்கு இந்த விழிப்புணர்வு போதுமானதாக இல்லை. குழந்தைத் திருமணத்தால் கருச்சிதைவு உள்ளிட்ட பல பிரச்னைகள் ஏற்பட்டு பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். இதைப் பெற்றோர்களுக்கு உணர்த்தினால் குழந்தைத் திருமணங்களைத் தடுக்கலாம்" என்றார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
மனநல ஆலோசகர் ராஜ செளந்திரபாண்டியனிடம் பேசினோம். ``எல்லோரும் படிக்கும்போது தனக்கு மட்டும் திருமணம் செய்துவிட்டார்களே என ஒரு குழந்தை ஏங்குவது, மனதளவில் பெரிய பாதிப்பை அவர்களுக்கு ஏற்படுத்துகிறது. இதனால், திருமண வாழ்க்கையையும் கையாள முடியாமல் திணறுகிறார்கள். பிள்ளைகளுக்குத் திருமண வயது பூர்த்தி அடைந்தாலும் அவர்கள் மனநிலை திருமணத்துக்குத் தயாராக உள்ளதா என்பதை பெற்றோர் சிந்திக்க வேண்டும். அவர்களை நல்வழிப்படுத்துகிறேன் எனக் குழந்தைத் திருமணம் செய்து வைத்தால், தோல்வியில் முடியவே அதிக வாய்ப்பு உள்ளது" என்றார்.
குழந்தைத் திருமணம் பற்றிய தகவலை யார் அளித்தாலும் உடனடியாக போலீஸார் நடவடிக்கை எடுத்து திருமணத்தை தடுத்து நிறுத்துகின்றனர். ஆனால், பெரும்பாலான குழந்தைத் திருமணங்கள் வீட்டில் நான்கு, ஐந்து உறவினர்களை மட்டும் வைத்துக்கொண்டு ரகசியமாக நடந்துவிடுவதால், போலீஸுக்குத் தகவல் வந்து சேருவதில்லை.
வறுமை என்கிற அளவுகோலையும் தாண்டி, சொந்தம் விட்டுப் போய்விடக் கூடாது, சொத்து கைமாறிவிடக் கூடாது என்று பலகாரணங்கள் குழந்தைத் திருமணத்துக்குள் ஒளிந்திருக்கின்றன. தை, மாசி, பங்குனி மாதங்களில் திருமணங்கள் அதிகமாக நடைபெறும் என்பதால், குழந்தைத் திருமணங்களும் அதிகமாக நடைபெறுகின்றன. ஸ்மார்ட்போன் உலகத்தில், இன்றும் குழந்தைத் திருமணங்கள் அரங்கேறுவது வெட்கட்கேடான விஷயம். அரசு உடனடியாகத் தலையிட்டு, கண்காணிப்பைத் தீவிரப்படுத்துவதுடன் குழந்தைத் திருமணங்களைத் தடுத்து நிறுத்த வேண்டும்.