Published:Updated:

பாலியல் பண்டமல்ல பிஞ்சுகள்! - பெருகும் வக்கிரங்கள்... கதறும் சிறுமிகள்!

அதிகரிக்கும் குற்றச் சதவிகிதம்!

பிரீமியம் ஸ்டோரி
பெண்களும் குழந்தைகளும் பாதுகாப்பாக இல்லாத சமூகம் கேவலமானது; அசிங்கமானது; வக்கிரமானது. அப்படியானால், மிக மோசமான ஒரு சமூகத்தில்தான் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.ஏற்றுக்கொள்ளக் கசப்பாக இருந்தாலும் இதுவே உண்மை!

பிழைப்புக்கு வழியில்லாத ஊரடங்கு காலத் திலும் பாலியல் குற்றங்கள் தலைவிரித்தாடுகின்றன என்றால், இந்தக் கொடுமையை என்னவென்று சொல்வது? ஊரடங்கு தொடங்கிய கடந்த மார்ச் மாத இறுதியிலிருந்து ஏப்ரல் மாதம் முடிவதற்குள், அதாவது நாற்பதே நாள்களுக்குள்... ‘குழந்தைகள் மீதான வன்முறை தொடர்பாக’ இந்தியா முழுவதும் 92,000 புகார்கள் பதிவாகியிருக்கின்றன.

பிஞ்சுக் குழந்தைகள்... மாற்றுத்திறனாளிக் குழந்தைகள்... மனநலம் குன்றிய குழந்தைகள்... ஆதரவற்ற குழந்தைகள்... ஏழைக் குழந்தைகள்தாம் இதில் அதிகம் பாதிப்புக்குள்ளாகிறார்கள். பசியில் சோறு கேட்டு வாசலில் நின்ற குழந்தையை, 72 வயது கிழவன் வீட்டுக்குள் அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த கன்னியாகுமரி சம்பவம்போல தினமும் அரங்கேறும் கொடூரங்கள் நம் மனசாட்சியை அறுப்பவை. நம்மைச் சுற்றிலும் என்னதான் நடக்கிறது?

‘அப்பாதானே அழைக்கிறார்!’

தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு அருகேயுள்ள கண்ணந்தங்குடி மேலையூர் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் மலையாண்டி, இவரின் தம்பி பாண்டியன். இருவரும் திருமணமானவர்கள். குழந்தைகளுடன் அருகருகிலேயே தனித் தனி வீடுகளில் வசித்துவந்திருக்கிறார்கள். அண்ணனின் மூன்று வயது மகள்மீது தம்பி பாண்டியனுக்கு வக்கிரப் பார்வை இருந்திருக் கிறது. கடந்த சில தினங்களுக்கு முன்னர், தனது வீட்டின் முன்பகுதியில் அந்தப் பிஞ்சுக் குழந்தை விளையாடிக் கொண்டிருந்திருக்கிறாள். அந்நேரம், தனது மனைவி வீட்டில் இல்லாதது பாண்டியனுக்கு வசதியாகப் போய்விட்டது. பிஞ்சுக் குழந்தை யிடம் “சித்தப்பாவோட வா... தோப்புக்குப் போகலாம்” என்று பாண்டியன் அழைத்ததும், ‘அப்பாதானே அழைக்கிறார்’ என்று சந்தோஷமாகப் பின்னால் ஓடியிருக்கிறாள் அந்த அப்பாவிக் குழந்தை.

வீட்டின் பின்புறமுள்ள தோப்பில்வைத்து, அந்தக் குழந்தையைப் பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறான் அந்த அயோக்கியன். தனக்கு என்ன நடந்தது என்றுகூடச் சொல்லத் தெரியாத அந்தக் குழந்தை, சிறுநீர் கழிக்கும்போது வலி தாங்க முடியாமல் கதறியிருக்கிறாள். பதறித் துடித்த குழந்தையின் அம்மா, “என்னப்பா ஆச்சு... எதுவும் கடிச்சிருச்சா?” என்று கேட்க, “சித்தப்பா என்னைத் தோப்புக்கு அழைச்சிட்டுப்போய் என்னென்னமோ செஞ்சாரு. `யார்கிட்டயும் சொல்லக் கூடாது. சொன்னா, உன் அம்மாகிட்ட சண்டை போட்டு அடிப்பேன்’னு சொன்னாரும்மா” என்று சொல்லியிருக்கிறாள் சிறுமி. திகைத்துப்போன தாய், குழந்தையைச் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்ததுடன், ஒரத்தநாடு காவல் நிலையத்திலும் புகார் கொடுத்தார். இதையடுத்து, போக்சோ சட்டத்தின் கீழ் பாண்டியனைக் கைதுசெய்து சிறையில் அடைத்தது போலீஸ்.

“பிஸ்கட் தருகிறேன்... வீட்டுக்கு வா!”

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே இருக்கிறது தாதநாயக்கன்பட்டி கிராமம். கடந்த ஆகஸ்ட் 17-ம் தேதி, பன்னிரண்டு வயதான மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிச் சிறுமி, தனது வீட்டு வாசலில் அமர்ந்து விளையாடிக் கொண்டிருந்திருக்கிறாள். அதே பகுதியைச் சேர்ந்த காளிமுத்து என்பவன் குடித்துவிட்டு வந்திருக்கிறான். “பிஸ்கட் தருகிறேன்... என் வீட்டுக்கு வா” என்று சிறுமிக்கு ஆசைகாட்டி தன் வீட்டுக்கு அழைத்துச் சென்று, பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறான். அழுது கொண்டே வீட்டுக்கு வந்த சிறுமி, நடந்ததைப் பெற்றோரிடம் கூறியிருக்கிறாள். அதிர்ந்துபோன பெற்றோர், பழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க, காளிமுத்துவை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸார் கைதுசெய்தனர்.

“என் மகள்போலப் பார்த்துக்கொள்வேன்!”

தேனி மாவட்டம், வருசநாடு பகுதியைச் சேர்ந்தவன் பாலமுருகன். தன் மனைவியின் இறப்புக்குப் பிறகு, பத்தாண்டுகள் தனியாக இருந்தநிலையில் தன் வீட்டின் அருகே வசித்துவந்த மாற்றுத்திறனாளி விதவைப் பெண்ணை மறுமணம் செய்திருக்கிறான். அந்தப் பெண்ணுக்கு 14 வயதில் ஒரு மகள் இருக்கிறாள். “உன் குழந்தையான இவளை என் மகள்போலப் பார்த்துக்கொள்வேன்” என்று மனைவியிடம் சொன்னதோடு, ‘இவள் என் மகள்’ என்று பாசமாக இருப்பதுபோல ஊரிலுள்ள அனைவரிடமும் சொல்லிவந்திருக்கிறான். ஆனால் செப்டம்பர் 8-ம் தேதி, ‘வீட்டிலிருந்த அந்தக் குழந்தையை, அப்பாவாக இருக்க வேண்டிய தனது கணவனே பாலியல் தொந்தரவு செய்துவிட்டார்’ என்று குழந்தையின் தாய் வருசநாடு காவல்நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். விசாரணையில்தான் தெரிந்தது, திருமணம் நடந்தது முதலே மனைவி இல்லாதபோதெல்லாம் அந்தக் குழந்தைக்குப் பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறான் அந்தக் காமுகன் என்று. அவன்மீது போக்சோ சட்டம் பாய்ந்திருக்கிறது.

பாலியல் பண்டமல்ல பிஞ்சுகள்! - பெருகும் வக்கிரங்கள்... கதறும் சிறுமிகள்!

மனநலம் கெட்ட உறவுக்காரன்!

கரூர் மாவட்டம், மண்மங்கலம் ஆதிதிராவிடர் தெருவைச் சேர்ந்த திருஞானம் - காமாட்சி தம்பதியருக்கு 8 வயதில் மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு மகள் இருக்கிறாள். திருஞானம் உடல்நலக் குறைவால் சில வருடங்களுக்கு முன்னர் இறந்துவிட, ஆடு மேய்த்து வரும் வருமானத்தில் தன் மகளை கவனித்துவந்தார் காமாட்சி. அதே பகுதியைச் சேர்ந்த உறவுக்காரன், 55 வயது நிரம்பிய அர்ச்சுனன். சம்பவத்தன்று, மனநலம் பாதிக்கப்பட்ட தனது மகளை வீட்டில் விட்டுவிட்டு, ஆடுகளை மேய்க்கச் சென்றிருக்கிறார் காமாட்சி. வீட்டில் காமாட்சி இல்லாததைத் தெரிந்துகொண்ட அர்ச்சுனன், அந்த ஒன்றுமறியாச் சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறான். இதைக் கேள்விப்பட்ட காமாட்சி, கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க, போக்சோ சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டான் அந்தக் கொடூரன்.

அதிகரிக்கும் குற்றச் சதவிகிதம்!

‘மூன்றிலிருந்து பதினேழு வயதுக்குட்பட்ட சிறுமிகளின் மீதான பாலியல் குற்றங்களின் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகரித்திருக்கிறது. குறிப்பாக, கடந்த ஐந்து ஆண்டுகளில் 39 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது. இந்தியாவில், சிறுமிகள் அதிக அளவில் பாலியல் தொல்லைக்கு உள்ளாகும் முதல் ஐந்து மாநிலங்களில் தமிழகமும் ஒன்று’ என ரிப்போர்ட் கொடுத்திருக்கிறது மத்திய குற்ற ஆவணக் காப்பகம். மத்திய அரசு அளித்திருக்கும் புள்ளிவிவரப்படி, தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு நான்கு குழந்தைகள் பாலியல்ரீதியான துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். ஆனால், இந்தியாவிலேயே முதன்முறையாகப் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தை விசாரிக்க, தனியாகக் காவல்துறைப் பிரிவு ஏற்படுத்தப்பட்டது தமிழகத்தில்தான். அதே தமிழகத்தில்தான் இப்போது குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சீண்டல்களும், பாலியல் கொலைகளும் அதிகரித்திருக்கின்றன.

எகிறும் எண்ணிக்கை... அதிரும் அரசு!

“சாதாரணமாகவே அதிகரித்துவந்த குழந்தை களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், ஊரடங்கு காலத்தில் இன்னும் அதிகரித்திருக்கின்றன. குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்துப் புகாரளிக்க ‘1098’ என்ற சிறப்புத் தொலைபேசி எண் அரசால் உருவாக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. ஊரடங்கு அறிவிக்கப்பட்ட மார்ச் மாதத்திலிருந்து ஏப்ரல் மாத இறுதிக்குள் மட்டும் நாடு முழுவதும் 92,000 புகார்கள் இந்த எண்ணுக்கு வந்திருக்கின்றன” என்கிறார் இந்திய குழந்தைகள் உதவி மையத்தின் துணை இயக்குநர் ஹர்லின் வாலியா. அதாவது, ``ஒப்பீட்டளவில் வழக்கமாக இந்த எண்ணுக்கு வரும் அழைப்புகள் 50 சதவிகிதம் அதிகரித்திருக் கின்றன’’ என்கிறார். இந்த எண்ணிக்கையைக் கண்டு அதிர்ந்துபோயிருக்கிறது அரசு. தமிழகத்திலும் கிட்டத்தட்ட இதே நிலைதான். காவல்துறையில் பதிவான புகார்களைவிட, பதிவாகாத புகார்கள் ஏராளம். குறிப்பாக, குழந்தைகள் வீட்டிலேயே இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டதால் இந்தப் பாலியல் சீண்டல்கள் அதிகரித்துள்ளன. நகர்ப்புறப் பகுதிகளைவிட, கிராமப்புறங்களில் இது அதிகம்” என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

விளையாட்டிலிருந்து விபரீதத்துக்கு..!

பெண் குழந்தைகளின் மீதான இந்தப் பாலியல் குற்றங்களில் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம், குற்றங்களில் ஈடுபடுகிறவர்களில் 90 சதவிகிதம் பேர் நெருங்கிய உறவுக்காரர்கள், தெரிந்தவர்கள், குடும்ப நண்பர்கள்தான். இவர்களில், வயோதிகர்களின் எண்ணிக்கையும் கணிசமானது. தங்கள் குழந்தைகளுடன் உறவினர்கள் நெருங்கிப் பழகுவதை எந்தப் பெற்றோரும் பெரிதாகக் கண்காணிப்பதில்லை. இதையே தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்பவர்கள், குழந்தைகளுடன் விளையாடுவது போல பாலியல் சீண்டல்களை முதலில் ஆரம்பிக்கிறார்கள். விளையாட்டுப் போக்கில் செய்யப்படும் சீண்டல்களைக் குழந்தைகளும் முதலில் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. அதற்குப் பிறகு, கொஞ்சம் கொஞ்சமாகத் தங்கள் பிடிக்குள் குழந்தைகளைக் கொண்டுவர ஆரம்பிப்பார்கள்.பருவ வயதை எட்டும் குழந்தைகளுக்குப் பாலியல் உணர்வுகள் ஆரம்பகட்டத்தில் இருக்கும். அது போன்ற குழந்தைகளை எளிதாகத் தங்கள் வலைக்குள் வீழ்த்திவிடும் கொடுமையும் அதிகரித்துவருகிறது.

தாத்தா, பாட்டி, மாமா, அத்தை எனப் பலரின் கண்காணிப்பும் அரவணைப்பும் கிடைக்கும் கூட்டுக்குடும்ப வாழ்க்கை சிதைந்ததில், இன்று குழந்தைகள் தனித்துக் கிடக்கிறார்கள். சிறுமிகள், தங்களுக்கு ஏற்படும் சிக்கல்களை மனம்விட்டுச் சொல்ல வாய்ப்பற்ற சூழல்தான் பெரும்பாலான குடும்பங்களில் உள்ளது.

ஆன்லைன் ஆபத்துகள்!

கோயம்புத்தூரில் சமீபத்தில் நடந்த சம்பவம் இது. பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் கீழ் வீட்டில் வசிக்கிறான். அதே வீட்டின் மாடியில் குடியிருக்கும் குடும்பத்தில் ஏழாம் வகுப்பு படிக்கும் சிறுமி இருக்கிறாள். இரு குடும்பமும் நெருக்கமாகப் பழகிவந்ததால், அடிக்கடி கீழ் வீட்டுக்கு வந்து அந்தச் சிறுமி விளையாடுவது வழக்கம். ஊரடங்கால் ஆன்லைன் கல்வி ஆரம்பிக்க, பத்தாம் வகுப்புச் சிறுவனுக்கு மொபைல்போன் வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள். பாடங்களுக்கு இடையே பாலியல் படங்களையும் பார்க்க ஆரம்பித்திருக் கிறான் சிறுவன். விளையாட வந்த சிறுமியைப் படம் பார்க்க வற்புறுத்தியதோடு, படத்தில் ஓடிய காட்சிகளை சிறுமியைவைத்துச் செய்து பார்க்கவும் முயன்றிருக்கிறான். தனது நண்பர்கள் இருவரை வீட்டுக்கு அழைத்து, அவர்களையும் சிறுமியுடன் பாலியல் வல்லுறவுகொள்ள வைத்திருக்கிறான். கீழ் வீட்டுக்கு விளையாடச் சென்ற சிறுமி, நீண்டநேரம் கழித்து அழுதுகொண்டே வந்ததால் பெற்றோர் விசாரிக்க, நடந்ததைக் கூறிக் கதறியிருக்கிறாள் சிறுமி. போக்சோ சட்டத்தில் மூன்று சிறுவர் களையும் கைதுசெய்திருக்கிறது காவல்துறை. எங்கும், எதிலும் ஆன்லைன் என மாறிவிட்ட சூழலும், கட்டுப்பாடில்லா இணையமும்கூட குழுந்தைகளுக்கு எதிரான பாலியல் வக்கிரங்கள் பெருக முக்கியக் காரணங்கள்.

2020, மார்ச் 1 முதல் ஆகஸ்ட் 31 வரை பதிவான போக்சோ வழக்குகளின் எண்ணிக்கை! (மாவட்டவாரியாக)

2020, மார்ச் 1 முதல் ஆகஸ்ட் 31 வரை பதிவான போக்சோ 
வழக்குகளின் எண்ணிக்கை! (மாவட்டவாரியாக)
2020, மார்ச் 1 முதல் ஆகஸ்ட் 31 வரை பதிவான போக்சோ வழக்குகளின் எண்ணிக்கை! (மாவட்டவாரியாக)

தெரிந்தவர்களிடமும் ஜாக்கிரதை!

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து பிரசாரம் செய்துவரும் சமூக சேவகர் கல்யாணத் திடம் பேசினோம். “ஊரடங்கில் இந்தக் குற்றங்கள் அதிகரிக்கக் காரணம், பெற்றோர்கள் தங்களின் பொருளாதாரம் சார்ந்த மன அழுத்தத்தால் குழந்தைகளை கவனிக்காமல் விட்டது. மிருகங்களைப்போலக் குழந்தையைத் தொடர்ந்து கண்காணித்துவரும் நபர்களுக்கு இந்த நேரம் வசதியாகப் போய்விட்டது. தெரியாத நபர்களிட மிருந்து குழந்தைகளை எப்படிப் பாதுகாக்கிறோமோ, அதே அளவுக்குத் தெரிந்தவர்களிடமிருந்தும் நம் குழந்தைகளைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம். குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்கும் இடையேயான உறவு எளிமையாக, இனிமையாக இல்லாததால், பல குழந்தைகள் தங்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளைப் பற்றி பெற்றோரிடம் சொல்லவே அஞ்சுகிறார்கள். வக்கிரங்களில் ஈடுபடுபவர்களுக்கு இது வசதியாகிவிடுகிறது. பாதிக்கப்பட்டவர்கள் துணிச்சலாக வெளியே வந்து சொல்ல வேண்டும். அப்போதுதான் இது போன்ற குற்றங்கள் தொடராமல் தடுக்க முடியும்.

சமீபத்தில் பதிவான குற்றங்களைப் பார்க்கும்போது, குற்றம் பற்றிப் புரிந்துகொள்ள இயலாத வயதுக் குழந்தைகளே அதிக அளவில் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். இதில் மற்றொரு சிக்கல் என்னவென்றால், புகாருக்குப் பிறகு குழந்தைகளிடம் நடத்தப்படும் பரிசோதனையால் அவர்கள் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாகிவிடுகிறார்கள். இதனால், குழந்தைகளின் ஒத்துழைப்பின்றி வழக்கை நிரூபிக்க முடியாமல் போய் அது குற்றவாளிகளுக்குச் சாதமாகிவிடுகிறது. பாலியல் குற்றங்கள் பெண் குழந்தைகளுக்கு மட்டுமே நடக்கிறது என்று எடுத்துக்கொள்ள வேண்டாம். இந்தியாவில் 57 சதவிகித ஆண் குழந்தைகளும் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாகிறார்கள். இது போன்ற பாலியல் குற்றங்களில் ஈடுபடும் நபர்களுக்கு உடனடியாகக் கொடுக்கப்படும் தண்டனையே இந்தக் குற்றங்களுக்கு எதிரான அச்சத்தை ஏற்படுத்தும். ஏனென்றால், இப்படியான பாலியல் வன்கொடுமைகளைச் செய்தவர்களில் பலர், சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்தி, தண்டனைகளிலிருந்து தப்பித்து குற்றஉணர்ச்சியே இல்லாமல் திரிகிறார்கள்” என்றார்.

மனநோயாளிகளா இவர்கள்?

``குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு உளவியல்ரீதியான காரணங்களும் இருக்கின்றன’’ என்கிறார் மனோதத்துவ நிபுணர் மருத்துவர் அரவிந்த். “இது போன்ற மனநிலை கொண்டவர்களை ‘பீடோபைல்’ (Pedophile) என்று அழைப்போம். வளர்ந்த பெண்களிடம் இது போன்ற பாலியல் சீண்டல்களைச் செய்ய முடியாது என்பதால், குழந்தைகளிடம் தங்கள் இச்சையைத் தீர்க்க நினைப்பார்கள். முதன் முறையாக இது போன்ற சீண்டலை எதிர்கொள்ளும் குழந்தை, அதை ஒரு விளையாட்டாகவே எடுத்துக் கொள்ளும். ஆனால், அது குழந்தையின் மனநிலையில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிடும்.

குற்றத்தில் ஈடுபடும் ஒருவர், தான் குழந்தையாக இருந்தபோது இது போன்ற பாலியல் தொந்தரவுக்கு ஆளாகியிருக்கலாம் அல்லது வேறு நபர்கள் செய்வதைப் பார்த்து மனதில் அவர்களுக்கும் அந்த எண்ணம் உருவாகியிருக்கலாம். இது போன்ற நபர்களுக்கு மன அழுத்தம் அதிகமாக இருக்கும். தன்னைத் தானே அழித்துக்கொள்ளும் எண்ணம் இவர்களுக்கு அதிகமாக இருக்கும். இன்றைக்கு இந்தக் குற்றங்கள் அதிகரிக்க, போதைப் பழக்கமும் ஒரு காரணம். இது போன்ற நபர்களுக்கு உளவியல் சிகிச்சை அளிப்பதும் கடினம். உண்மையை ஒரு போதும் ஒப்புக்கொள்ளவே மாட்டார்கள். இது போன்ற மனநிலைகொண்டவர்களைக் கண்டு பிடிப்பதும் கடினம்” என்றார் மருத்துவர் அரவிந்த்.

காவல்துறை என்ன சொல்கிறது?

தமிழகத்தில், கொரோனா ஊரடங்கு காலத்தில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்திருப்பதை காவல்துறையும் ஏற்றுக் கொள்கிறது. “மார்ச் முதல் ஜூன் மாதம் வரை மட்டும் பெண் குழந்தைகளுக்கு எதிராகப் பதிவான போக்சோ வழக்குகளின் எண்ணிக்கை 775. இவற்றில் கணிசமானவை பாலியல் குற்ற வழக்குகள். குற்றங்களை வெளியே சொல்வதற்குப் பெற்றோர் தயங்குவதால், குற்றவாளிகள் சுதந்திரமாகத் திரிகிறார்கள். குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடும் நபர்களை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவுசெய்து உடனடியாகக் கைதுசெய்கிறோம், தாமதிப்பதே இல்லை. ஆனால், பலரும் நீதிமன்றத்தின் வழியே விடுதலையாகிவிடுகிறார்கள். அதற்குக் காரணம், பாதிக்கப்பட்ட குழந்தைகள் தரப்பில் வழக்குக்குப் போதிய ஒத்துழைப்பு கிடைப்பதில்லை. மருத்துவப் பரிசோதனைக்கே பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை முழுமையாக அனுமதிப்பதில்லை. நம் சட்டப்படி சாட்சியும் ஆவணங்களுமே குற்றங்களை நிரூபிக்க வழிசெய்யும். இந்த இரண்டுமே இந்த வழக்குகளில் பலவீனமாக இருப்பது குற்றவாளிகளுக்குச் சாதகமாகிவருகிறது.

இந்தப் பாலியல் குற்றங்களின் அதிகரிப்பு உண்மையிலேயே அதிர்ச்சியளிக்கிறது. கொரோனா காலம் முடிந்து, பள்ளிகள் திறக்கப்படும்போது தமிழகம் முழுமைக்குமாக பாலியல் விழிப்புணர்வுப் பிரசாரங்களை, பயிற்சிகளை நடத்தவிருக்கிறோம். இது போன்ற குற்றங்களின்போது பெற்றோர்கள் துணிந்து காவல்துறையை அணுக வேண்டும்” என்கிறது போலீஸ் தரப்பு.

வறுமையை, அறியாமையை, பயத்தை, பலவீனத்தைப் பயன்படுத்தி பிஞ்சுகளைப் பாலியல் பண்டமாகச் சிதைக்கும் நஞ்சு நெஞ்சர்கள் நம் அருகிலேயே இருக்கிறார்கள். `அன்பு’ என்ற பெயரில், விளையாட்டு என்ற பாவனையில் ஒரு பாலியல் குற்றம் நிகழ்ந்துவிடாமல் பார்த்துக்கொள்வது பெற்றோராகிய நம் பொறுப்பு. சிறு வயதில் ஏற்படும் மிகச்சிறிய பாலியல் பாதிப்பும் ஒரு குழந்தையின் மொத்த வாழ்க்கையையும் சிதைத்துவிடும்.

எச்சரிக்கையாய் இருப்போம்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதிகரிக்கும் தண்டனைக் காலம்!

செப்டம்பர் 16-ம் தேதி, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு குறித்து சட்டமன்றத்தில் முதலமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு குறிப்பிடத்தக்கது. தவறான குற்ற நோக்கத்துடன் பெண்களைப் பின்தொடர்தல், குற்றமிழைத்தல் ஆகியவற்றுக்கு வழங்கப்பட்டுவந்த ஐந்தாண்டு வரையிலான சிறைத் தண்டனையை அதிகபட்சமாக ஏழு ஆண்டுகளாக உயர்த்த பரிந்துரைத்திருக்கிறது அந்த அறிவிப்பு. அதேபோல, பாலியல் தொழிலுக்காக 18 வயதுக்குட்பட்ட நபர்களை விற்பனை செய்தல் மற்றும் விலைக்கு வாங்குதலுக்கு தற்போது வழங்கப்படும் அதிகபட்சமான பத்து ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனைக்கு பதிலாக, அதிகபட்சம் ஆயுள் தண்டனையும் வழங்குவதற்கு மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது.

போக்சோ என்ன சொல்கிறது!

பாலியல் பண்டமல்ல பிஞ்சுகள்! - பெருகும் வக்கிரங்கள்... கதறும் சிறுமிகள்!

POCSO - The Protection of Children from Sexual Offences Act, 2012

18 வயதுக்குக் குறைவான அனைத்துக் குழந்தைகளையும் பாலின வித்தியாசமின்றி பாலியல் துன்புறுத்தலிலிருந்து காப்பதற்காகக் கொண்டுவரப்பட்ட சட்டம் இது. இந்தச் சட்டம் 2012-ம் ஆண்டு முதல் செயல்பாட்டில் இருந்துவருகிறது. 46 பிரிவுகளில் இந்தச் சட்டம் பிரிக்கப்பட்டு ஒவ்வொன்றுக்குமான தண்டனை விவரங்களும் குறிப் பிடப்பட்டுள்ளன. குழந்தைகளின் பெற்றோர், கார்டியன், ஆசிரியர், காவல்துறை அதிகாரிகள் என குற்றமிழைப்பவர் களைப் பொறுத்து தனி தண்டனைகள் வகுக்கப்பட்டுள்ளன. பாலியல் சீண்டல், ஆபாசப் பேச்சு, மின்னஞ்சல் சீண்டல்கள், ஆபாச வசைமொழியில் திட்டுவது, அலைபேசி மூலம் பாலியல் படங்களை அனுப்புவது இப்படிப் பலவகையான குற்றங்களும் இந்தச் சட்டத்தின்படி தண்டனைக்குரியவை. குற்றம்புரிவது மட்டுமல்ல... குற்றத்தை மறைப்பதும் குற்றமே!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு