Published:Updated:

``அடிமைகள்போல் வேலை... பாலியல் தொல்லை..." - அலறும் ஊர்க்காவல் படையினர்

ஊர்க்காவல் படையினர்
ஊர்க்காவல் படையினர்

எங்களுக்கு ஒரு நாள் சம்பளம் 560 ரூபாய். ஆனால், 300 ரூபாய் மட்டுமே கொடுத்து வேலை வாங்குகின்றனர். கீழ் நிலையில் உள்ளவர்கள் அதிகாரிகளை எதிர்த்துக் கேள்வி எதுவும் கேட்க முடியாததால்...

''எங்களை அவர்களின் அடிமைகள்போல் நினைக்கும் உயரதிகாரிகள், அவர்களின் சொந்த வேலைகளுக்குத்தான் அதிகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர். பெண்களுக்குப் பாலியல் தொந்தரவு கொடுக்கின்றனர். இது தொடர்பாக நாங்கள் எங்கு புகார் கொடுத்தாலும் நடவடிக்கை எடுக்க மறுக்கின்றனர்'' என்று கண்ணீர் வடிக்கின்றனர் `ஹோம் கார்ட்ஸ்' எனப்படும் ஊர்க்காவல் படையினர்.

`ஊர்க்காவல் படை' என்னும் அமைப்பு தமிழகக் காவல்துறையில் ஆட்கள் பற்றாக்குறை காரணமாக உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பில் தமிழகம் முழுவதும் சுமார் 15,000 பேர் பணிபுரிகின்றனர். சென்னையில் மட்டும் 400 பெண்கள் உட்பட 3,000 பேருக்கு மேல் பணிபுரிகின்றனர்.

ஒரு காவல்நிலையத்துக்கு சுமார் 20 பேர் என்கிற அளவில் இருக்கும் இந்த ஊர்க்காவல் படையில் ஹோம்கார்டு, அசிஸ்டன்ட் செக்‌ஷன் லீடர், செக்‌ஷன் லீடர், கம்பெனி கமாண்டர், டிவிஷனல் கமாண்டர், ஏரியா கமாண்டர், அசிஸ்டன்ட் கமாண்டர் ஜெனரல் உள்ளிட்ட பல பதவிகள் இருக்கின்றன. இவற்றில் குறிப்பிட்ட சில பதவிகள் தேர்வுகள் மூலமாகவும், சில பதவிகள் நியமனத்தின் மூலமாகவும் பூர்த்தி செய்யப்படுகின்றன.

''அசிஸ்டன்ட் ஏரியா கமாண்டர், ஏரியா கமாண்டர் போன்ற உயர் பதவிகளில் தங்களுக்கு வேண்டப்பட்டவர்களை வைத்துள்ளார் அசிஸ்டன்ட் கமாண்டர் ஜெனரல் மஞ்சித் சிங் நய்யார். இவர்தான் ஒட்டுமொத்த சென்னைக்கும் தலைமை என்பதால், தனி ராஜ்யமே நடத்திவருகிறார். இவர்தான் பிரச்னைகளுக்கு ஆணி வேர்'' என்று அதிரடிப் புகார் கிளப்புகின்றனர்.

அம்பத்தூர் கம்பெனி கமாண்டராக இருந்த பாலாஜி சுபாஷ் இது குறித்து நம்மிடம் பேசினார். ''சென்னை வடக்கு மண்டல ஏரியா கமாண்டரான பன்சாலி, வட்டிக்குப் பணம் கொடுப்பதைத் தொழிலாகச் செய்துவருகிறார். பிரச்னையில்லாமல் வட்டி வசூலிக்க அவர் ஊர்க்காவல்படை வீரர்களைப் பயன்படுத்திக் கொள்கிறார்.

``அடிமைகள்போல் வேலை... பாலியல் தொல்லை..." - அலறும் ஊர்க்காவல் படையினர்

கட்டுமான தொழில் செய்துவரும் சென்னை தெற்கு மண்டல கமாண்டர் சுகுமார், அந்தத் தொழில் சார்ந்த வேலை களுக்கு ஹோம்கார்ட்ஸைப் பயன்படுத்தி வருகிறார். பள்ளிக்கூடம் நடத்தி வரும் கிழக்கு மண்டல ஏரியா கமாண்டர் விட்டோபிளாக்கா அந்தப் பள்ளிக்கு செக்யூரிட்டிகளாக ஊர்க்காவல் படையினரைப் பயன்படுத்திக் கொள்கிறார்.

இதுமட்டுமல்ல, சுகுமாரன், விட்டோ பிளாக்கா மற்றும் மேற்கு மண்டல கமாண்டர் சந்திரசேகர் ஆகிய மூன்று கமாண்டர்கள் சேர்ந்து `எஸ்.சி.வி' எனும் பெயரில் ஒரு ஹோட்டல் நடத்திவருகிறார்கள். ஹோட்டலுக்கு காய்கறி வாங்குவதற்குக் கூட ஊர்க்காவல் படையினரைத்தான் பயன்படுத்தி வருகிறார்கள்...

எங்களுக்கு ஒரு நாள் சம்பளம் 560 ரூபாய். ஆனால், 300 ரூபாய் மட்டுமே கொடுத்து வேலை வாங்குகின்றனர். கீழ் நிலையில் உள்ளவர்கள் அதிகாரிகளை எதிர்த்துக் கேள்வி எதுவும் கேட்க முடியாததால், அவர்கள் சொல்வதைச் செய்துவருகிறார்கள். எதிர்த்துக் கேள்வி கேட்டால் மெமோ கொடுத்து மன உளைச்சலுக்கு ஆளாக்குகிறார்கள். ஏதோ கார்ப்பரேட் கம்பெனிபோல் நடத்தி வருகிறார்கள். எங்களைக் காவல்துறையின் நேரடிக் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தால் போதும், நாங்கள் பிழைத்துக்கொள்வோம்'' என்கிறார் ஆதங்கத்துடன்.

பெண்களுக்குக் கொடுக்கப்படும் பாலியல் தொல்லைகள் குறித்து நம்மிடம் பேசிய ஹோம்கார்டு மலர்விழி, ''நான் பதினெட்டு வருடங்களாக ஊர்க்காவல் படையில் இருக்கிறேன். கம்பெனி கமாண்டர் பொறுப்புகளில் இருப்பவர்கள் பெண்களுக்குப் பாலியல் தொல்லை கொடுப்பது தொடர்கதையாக உள்ளது. இரவு நேரத்தில் தேவையில்லாமல் போன் செய்வார்கள், மெசேஜ் அனுப்புவார்கள். இது குறித்து எங்கள் ஏரியா கமாண்டராக இருக்கும் சஞ்சய் பன்சாலியிடம் புகார் செய்தாலும் அவர் கண்டுகொள்வதில்லை.

அப்படியே பாலியல் தொல்லை குறித்த புகாரை விசாரித்தாலும், எங்கள் அலுவலகத்தில் வைத்து விசாரிக்காமல், தனியார் கல்யாண மண்டபத்தில் சுற்றிலும் ஆண்களை வைத்துக்கொண்டு விசாரிப்பார்கள். அவர்களுக்கு இணங்கிப் போகாத பெண்களுக்கு டியூட்டி கொடுக்காமல் இழுத்தடிப்பார்கள். ஆன்லைனில் புகார் செய்தாலும் எந்தப் பலனுமில்லை. நாங்கள் என்ன செய்வதென்றே தெரியவில்லை'' என்றார் பரிதாபமாக.

- இது சுருக்கமான வடிவம்தான். ஊர்க்காவல் படையினர் சந்திக்கும் அவலங்களையும், அதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது கிடைத்த ரியாக்‌ஷன்களையும் விரிவாக ஜூனியர் விகடன் இதழில் வாசிக்க க்ளிக் செய்க... https://bit.ly/39Uvq4w > அடிமைகள்போல் நடத்தப்படும் ஆண்கள்... பாலியல் தொந்தரவுக்கு உள்ளாக்கப்படும் பெண்கள்... - கண்ணீர் வடிக்கும் ஊர்க்காவல் படையினர் https://bit.ly/39Uvq4w

சிறப்புச் சலுகை

விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ரூ.149 மதிப்புள்ள ஒரு மாத Vikatan Digital Pack-ஐ முற்றிலும் இலவசமாகப் பெறலாம். ஆனந்த விகடன் தொடங்கி பசுமை விகடன் வரை அனைத்து இதழ்களையும் 30 நாள்களுக்கு கட்டணமின்றி வாசிப்பதுடன், 15 ஆண்டுகால பொக்கிங்களிலும் வலம் வரலாம். விகடன் ஆப் டவுன்லோடு செய்து, இந்தச் சலுகையைப் பெற https://bit.ly/2VRp3JV

அடுத்த கட்டுரைக்கு