Published:Updated:

3 நாட்டிக்கல் மைல் தூர சேஸ்; கடலில் வீசப்பட்டது தங்கக் கட்டிகளா?! - ஆழ்கடல் தேடுதலில் கடற்படை

நடுக்கடலில் வீசப்பட்ட பொருளைத் தேடும் கடற்படை
News
நடுக்கடலில் வீசப்பட்ட பொருளைத் தேடும் கடற்படை

நடுக்கடலில் நாட்டுப்படகிலிருந்து வீசப்பட்ட மர்மப் பொருளை ஆழ்கடல் நீச்சல் வீரர்கள் மூலம் இந்திய கடற்படையினர் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.

இலங்கையிலிருந்து ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் கடற்கரை வழியாக தங்கம் கடத்திவரப்படுவதாகத் தேசிய புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்திருக்கிறது. இதையடுத்து, இந்திய கடற்படையினருடன் இணைந்து தேசிய வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளும் அதிக திறன்கொண்ட இன்ஜின்கள் பொருத்தப்பட்ட கப்பல்கள் மூலம் தமிழகக் கடலோர எல்லை, சர்வதேச கடல் எல்லைப் பகுதியில் நேற்றிரவு முதல் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், இன்று அதிகாலை அதிக திறன்கொண்ட இன்ஜின் பொருத்தப்பட்ட நாட்டுப்படகு ஒன்று இலங்கை சர்வதேச எல்லையிலிருந்து தமிழகம் நோக்கி வந்திருக்கிறது. ரேடார் மூலம் அந்தப் படகைக் கண்டறிந்த இந்திய கடற்படையினர், சிக்னலைப் பின்தொடர்ந்து அந்த நாட்டுப்படகை விரட்டிச் சென்றிருக்கின்றனர்.

ஆழ்கடல் நீச்சல் வீரர்கள் மூலம் மர்ம மூட்டையை தேடும் கடற்படையினர்
ஆழ்கடல் நீச்சல் வீரர்கள் மூலம் மர்ம மூட்டையை தேடும் கடற்படையினர்

இந்திய கடற்படையினர் பின்தொடர்ந்து விரட்டி வருவதை தெரிந்துகொண்டு, நாட்டுப்படகிலிருந்து மர்ம மூட்டை ஒன்றை, அதில் இருந்தவர்கள் கடலில் வீசிவிட்டு தப்பிக்க முயன்றனர். அதையடுத்து, சுமார் மூன்று நாட்டிக்கல் மைல் தூரம் விரட்டிச் சென்று, அந்த நாட்டுப்படகை சுற்றிவளைத்தனர். பின்னர் அந்தப் படகிலிருந்த மண்டபம் பகுதியைச் சேர்ந்த நாகூர் மீரான் உட்பட மூன்று பேரை கரைக்குக் கொண்டுவந்து விசாரணை நடத்தினர்.

அவர்கள் கடலில் மூட்டை ஒன்றை வீசுவதைப் பார்த்திருந்த இந்தியக் கடற்படையினர், அது குறித்து அவர்களிடம் விசாரணை நடத்தியபோது, `அது போன்று நாங்கள் எதுவும் கடலில் வீசவில்லை' எனத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. பின்னர் தேசிய புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் துருவித் துருவி விசாரணை செய்ததில், `நாங்கள் மீன்பிடிக்கும் வலையைத்தான் கடலில் வீசினோம்' எனக் கூறியதாகச் சொல்லப்படுகிறது.

முன்னுக்குப் பின் முரணான பதிலால், அவர்கள் இலங்கையிலிருந்து தங்கக் கட்டிகள் கடத்தி வந்திருக்க வாய்ப்பு இருக்கிறது எனச் சந்தேகித்த அதிகாரிகள், அவர்கள் கடலில் வீசிய மூட்டையைத் தேடும் பணியில் இறங்கினர். இதற்காக ஆழ்கடல் நீச்சல் வீரர்கள் மூலம், இன்று அதிகாலை முதல் அந்த மூட்டையை அதிகாரிகள் தேடிவருகின்றனர்.

கரையோரத்தில் விசாரணை நடத்தும் அதிகாரிகள்
கரையோரத்தில் விசாரணை நடத்தும் அதிகாரிகள்

பிடிபட்ட மூன்று பேரில், இருவர் கடத்தல் கும்பலின் 'ஹப்' என அழைக்கப்படும் வேதாளை கிராமத்தைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது. கடலில் வீசப்பட்ட மர்ம மூட்டை கிடைத்தவுடன் அதில் என்ன கடத்திவரப்பட்டது என்பது குறித்த முழு விவரங்கள் தெரியவரும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.