Published:Updated:

`உன் தங்கையைக் கொன்றுவிட்டேன்... சாவி பூந்தொட்டியில்!'- அமெரிக்காவில் இந்திய கணவனின் விபரீதச் செயல்

டோஜோய், பாலிவுட் நடிகர் ஹிர்திக் ரோஷனின் தீவிர ரசிகை. ஹிர்திக்கின் படம் வெளியானால் முதல் நாளிலேயே பார்த்துவிடும் பழக்கம் கொண்டவர்.

டோஜோய்
டோஜோய்

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள குயின்ஸ் பகுதியில் வசித்து வந்தவர்கள் இந்தியாவைச் சேர்ந்த தினேஷ்வர் (33) - டோனி டோஜோய் (27) தம்பதி. இருவருக்கும் கடந்த ஜூலை மாதம்தான் திருமணம் நடந்ததாகக் கூறப்படுகிறது. தினேஷ்வர் அங்குள்ள பார் ஒன்றில் வேலைபார்த்து வந்துள்ளார். இதற்கிடையே, வெள்ளிக்கிழமை இரவு டோஜோயின் சகோதரிக்கு செல்போனில் எஸ்.எம்.எஸ் ஒன்றை அனுப்பியுள்ளார் தினேஷ்வர். அதில், `உன் தங்கை டோஜோயைக் கொன்றுவிட்டேன். வீட்டுச்சாவியை கீழே பூந்தொட்டியில் வைத்திருக்கிறேன்' எனக் குறிப்பிட்டிருந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக போலீஸுக்குத் தகவல் தெரிவித்துவிட்டு சம்பவ இடத்துக்கு விரைந்தார்.

தினேஷ்வர் - டோஜோய்
தினேஷ்வர் - டோஜோய்

அங்கு சென்று பார்த்தபோது, எஸ்.எம்.எஸ்ஸில் குறிப்பிட்டபடியே கத்திக்குத்துக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்துள்ளார் டோஜோய். கணவர் தினேஷ்வரோ, குடியிருப்புக்கு எதிரே இருந்த மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார். இரு உடல்களையும் கைப்பற்றி சம்பவம் குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் டோஜோயின் தோழி மாலா ராம்தானி கொலை குறித்து அமெரிக்க ஊடகங்களிடம் பேசுகையில், ``டோஜோய் பாலிவுட் நடிகர் ஹிர்திக் ரோஷனின் தீவிர ரசிகை. ஹிர்திக்கின் படம் வெளியானால் முதல் நாளிலேயே பார்த்துவிடும் பழக்கம் கொண்டவர். மேலும், ஹிர்திக் ரோஷன் நடித்த பாடல்களையும் அடிக்கடி வீட்டில் கேட்டுக்கொண்டே இருப்பார்.

`சேர மறுத்துவிட்டான்; கொன்றுவிட்டேன்'- கல்லூரி மாணவர் கொலை வழக்கில் போலீஸை அதிரவைத்த வாக்குமூலம்!

டோஜோயின் இந்தச் செயல் தினேஷ்வருக்குப் பிடிக்கவில்லை. இதனால் ஹிர்திக் நடித்த பாடல்களைக் கேட்டுக் கொண்டிருந்தால்கூட நிறுத்தும்படி சொல்வார். இதனால் இருவருக்கும் சண்டை வருவதுண்டு. இதுகூட இந்தக் கொலை நடந்திருக்க காரணமாக இருக்கலாம்" எனப் பேசியுள்ளார்.

மற்றொரு நண்பரோ, ``டோஜோய் அழகாக இருப்பார். அவரை தினேஷ்வர் அதிகம் விரும்பினார். அதனால் பொறாமை கொண்ட அவர், தனது கட்டுப்பாட்டுக்குள் அவள் இருக்க வேண்டும் என்று விரும்பினார். இதற்காக அவரைக் கொன்றுவிடுவதாகக்கூட மிரட்டியிருக்கிறார். ஆனால் டோஜோய் அதை சீரியசாக எடுத்துக்கொண்டதில்லை. காரணம் டோஜோயும் தினேஷ்வரை அதிகம் விரும்பினார்" எனக் கூறியுள்ளார்.

தினேஷ்வர் - டோஜோய்
தினேஷ்வர் - டோஜோய்

இதற்கு முன்பு ஒருமுறை ஹிர்திக் நடித்த பாடலைக் கேட்ட டோஜோயை, தினேஷ்வர் தாக்கியதாக ஏற்கெனவே வழக்கு தொடரப்பட்டு நீதிமன்றத்தின் கண்டனத்துக்கும் ஆளாகியுள்ளார்.

இதுதொடர்பாக போலீஸார் கூறுகையில், ``வீட்டிலிருந்து வெளியேற டோஜோய் முடிவு செய்துள்ளார். ஆனால், ஹிர்திக் ரோஷனின் படத்தைப் பார்க்க தினேஷ்வர் ஒப்புக்கொண்டதை அடுத்து அவர் மீண்டும் இங்கு தங்கியுள்ளார். இந்த நிலையில்தான் திடீரென டோஜோயைக் கொலை செய்துவிட்டதாக, சகோதரிக்கு குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு தினேஷ்வரும் தற்கொலை செய்துகொண்டுள்ளார். பொறாமையின் காரணமாகவே கொலை நடந்திருக்கலாம் எனச் சந்திக்கிறோம். விசாரணையின் இறுதியில் முழுவிவரங்களும் தெரியவரும்" எனக் கூறியுள்ளார்.

Vikatan