Published:Updated:

அமெரிக்கா: முற்றிய வாக்குவாதம்; மகள், மாமியார் சுட்டுக்கொலை!-விபரீத முடிவெடுத்த இந்திய வம்சாவளி நபர்

துப்பாக்கி
துப்பாக்கி

குடும்பத்தினரிடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதால் பூபிந்தர் சிங், வீட்டில் வைத்திருந்த தன் துப்பாக்கியை எடுத்து, மகள் மற்றும் மாமியாரைச் சுட்டுக் கொன்றிருக்கிறார்.

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் அல்பனி-க்கு (Albany) தெற்கே 19 கி.மீ தொலைவிலிருக்கும் ஸ்கோடாக் (Schodack) நகரைச் சேர்ந்தவர் பூபிந்தர் சிங் (Bhupinder Singh). 57 வயதான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பூபிந்தர் சிங்குடன் 14 வயதான மகள் ஜஸ்லீன் கவுர், மாமியார் மன்ஜித் கவுர் இருவரும் வசித்துவந்திருக்கிறார்கள்.

இந்தநிலையில், பூபிந்தர் சிங், தன் மகள், மாமியார் இருவரையும் வீட்டுக்குள்வைத்து சுட்டுக் கொன்றிருக்கிறார். குடும்பத்தினரிடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதால் பூபிந்தர் சிங், வீட்டில் வைத்திருந்த தன் துப்பாக்கியை எடுத்து மகளையும் மாமியாரையும் சுட்டுக் கொன்றிருக்கிறார் என்று நியூயார்க் நகர காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது.

துப்பாக்கி
துப்பாக்கி

பூபிந்தர் சிங் துப்பாக்கியால் சுட்டதில், அவருடைய மகள் ஜஸ்லீன் கவுரும், மாமியார் மன்ஜித் கவுரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், இந்தத் துப்பாக்கிச்சூட்டில், அந்த வீட்டிலிருந்த ராஸ்பல் கவுர் (Rashpal Kaur) என்ற 40 வயதான பெண் ஒருவரும் படுகாயமடைந்திருக்கிறார்.

மகள், மாமியார் இருவரையும் சுட்டுக் கொன்ற பூபிந்தர் சிங், துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு, தற்கொலை செய்துகொண்டார். இதற்கிடையில் ராஸ்பல் கவுர் போலீஸாரால் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

இந்தச் சம்பவம் குறித்துப் பேசிய நியூயார்க் நகர காவல்துறை, ``கையில் குண்டடிபட்டு படுகாயமடைந்த ராஸ்பல் கவுர், தப்பித்துவிட்டார். அவருக்கு அல்பனியிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. அவரது உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை. அவரிடம் விசாரணை நடத்த காவல்துறை அதிகாரிகள் காத்திருக்கின்றனர். விசாரணைக்குப் பிறகே முழு விவரமும் தெரியவரும்" என்று தெரிவித்திருக்கிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு