Published:Updated:

`பள்ளிக்குப் போவதால்தான் இவ்வளவு ரிஸ்க்!' - ஓட்டுநரிடம் லஞ்சம் வாங்கிய காவலரை கலங்கடித்த கமிஷனர்

காவலர்கள்
காவலர்கள் ( எம். விஜயகுமார் )

சேலம் மாநகர ஆணையாளர் செந்தில்குமார் உத்தரவின் பேரில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு தற்போது உதவி ஆய்வாளரும், தலைமைக் காவலரும் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் சேலத்தில் காவலர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் ஏற்காடு மலை அடிவாரத்தில் உள்ள பெரியகொல்லப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் பிரகாஷ். இவர் கடந்த மாதம் 28-ம் தேதி ஆட்டோ ஓட்டிக்கொண்டு பெரிய கொல்லப்பட்டி அருகே உள்ள அண்ணாநகர் பகுதிக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது அண்ணாநகர் பகுதியில் கன்னங்குறிச்சி காவல் நிலையத்தில் பணியாற்றும் உதவி ஆய்வாளர் சுப்பிரமணி மற்றும் தலைமைக் காவலர் கணேஷ் ஆகியோர் ரோந்து வாகனத்தில் நின்றுகொண்டு வாகன சோதனை மேற்கொண்டு இருந்தார்கள்.

தலைமைக் காவலர்
தலைமைக் காவலர்
எம். விஜயகுமார்

அப்போது அந்த வழியாக வந்த பிரகாஷின் ஆட்டோவை நிறுத்தி ``ஆர்.சி.புத்தகம் இருக்கிறதா, லைசென்ஸ் உள்ளதா?'' எனக் கேள்வி மேல் கேள்வி கேட்டிருக்கிறார்கள். அதற்கு பிரகாஷ் தன்னிடம் ஆர்.சி புக் இல்லை என்று தெரிவித்துள்ளார். அதையடுத்து தலைமைக் காவலர் கணேஷ் ஆர்.சி. புக் இல்லை, செல்போனில் பேசிக்கொண்டு ஆட்டோ ஓட்டியது மற்றும் சீருடை அணியாதது உட்பட 3 வழக்குகள் உன் மீது போடப்போகிறோம். இதற்கு அபராதம் கட்ட வேண்டுமென்று தெரிவித்துள்ளார். அதற்கு ஆட்டோ ஓட்டுநர் பிரகாஷ், ''வழக்கு போட்டுக் கொடுங்கள். அபராத தொகையை நீதிமன்றத்தில் கட்டிக் கொள்கிறேன்'' என்று கூறி இருக்கிறார்.

அதன் பிறகு காணொளி உரையாடல் தொடர்கிறது. ஆட்டோ ஓட்டுநர் பிரகாஷ் பணத்தோடு நிற்கிறார்.

தலைமைக் காவலர் : `நாங்க இப்ப அபராதம் வசூலிக்கிறோம். ஒவ்வொருவரையும் தனித்தனியாக கோர்ட்டுக்கு அனுப்ப முடியுமா? 50 பேரின் தொகை சேர்ந்தால் மொத்தமாகக் கோர்ட்டில் கட்டிவிடுவோம்.'

ஓட்டுநர்: `சரிங்க சார், இவ்வளவு தூரம் வந்துட்டேன். இந்தாங்க சார்...'

தலைமைக் காவலர்: `பள்ளிக்கு போவதால்தான் நான் இவ்வளவு ரிஸ்க் எடுக்கிறேன். அவரை (எஸ்.ஐ) இந்த ஏரியாவில் பார்த்திருப்பீர்கள். என்னைப் பார்த்திருக்கீங்களா. ஆனால், இந்த ஏரியாவில் போற எல்லா ஆட்டோவையும் தெரியும்' என்று சொல்ல, ஆட்டோ ஓட்டுநர் பணத்தைக் கொடுக்கிறார்.

தலைமைக் காவலர்: (பணத்தை வாங்கிக்கொண்டு) ஐயா விட்டுறலாமா? என்று கேட்பதோடு காணொளி நிறைவு பெறுகிறது.

இந்தக் காணொளி பற்றி பிரகாஷ் தரப்பிடம் விசாரித்தபோது, ''தலைமைக் காவலரும் உதவி ஆய்வாளரும் ஆட்டோவை விட 900 ரூபாய் கேட்டார்கள். என்னிடம் பணம் இல்லை. வழக்கு எதுவும் போடாமல் ஆட்டோவை விட்டு விடுமாறு கெஞ்சினேன். லஞ்சம் கொடுத்தால்தான் விடுவதாகத் தெரிவித்தார்கள். அதையடுத்து 600 ரூபாய் லஞ்சமாகக் கொடுத்தேன். அதைத் தலைமைக் காவலர் என்னிடம் வாங்கி உதவி ஆய்வாளரிடம் கொடுத்தார்.'' என்றார்கள்.

கமிஷனர் செந்தில்குமார்
கமிஷனர் செந்தில்குமார்
எம். விஜயகுமார்

இந்தக் காணொலிக்காட்சி சமூக வலைதளத்தில் பரவி வருவதை அறிந்த சேலம் மாநகர காவல்துறை ஆணையாளர் செந்தில்குமார் இதுகுறித்து கன்னங்குறிச்சி உதவி ஆய்வாளரும் தலைமைக் காவலரும் ஆட்டோ ஓட்டுநரிடம் லஞ்சம் வாங்கியது உண்மையா? என்பதை விசாரணை செய்ய அஸ்தம்பட்டி உதவி கமிஷனருக்கு உத்தரவு பிறப்பித்தார்.

இவ்விசாரணை மேற்கொண்டிருக்கும் அஸ்தம்பட்டி உதவி கமிஷனர் ஆனந்தகுமாரிடம் கேட்டதற்கு, ''இரண்டு தரப்பிலும் விசாரணை மேற்கொண்டேன். கன்னங்குறிச்சி உதவி ஆய்வாளர் சுப்பிரமணியும் தலைமைக் காவலர் கணேஷூம் ஆட்டோ ஓட்டுநர் பிரகாஷிடம் பணம் வாங்கியது உண்மை என்பது தெரிய வந்ததையடுத்து சேலம் மாநகர காவல்துறை ஆணையாளர் கவனததுக்குக் கொண்டு சென்றதால் இருவரும் சஸ்பெண்டு செய்யப்பட்டிருக்கிறார்கள்'' என்றார்.

அடுத்த கட்டுரைக்கு