Published:Updated:

`கடன் வாங்கித்தான் ஸ்கூல் ஃபீஸே கட்டுறேன்' - `50 வீடு' சர்ச்சை குறித்து இன்ஸ்பெக்டர் ரமேஷ்ராஜ்!

லோகேஸ்வரன்.கோ

வேலூரில் லஞ்சப் பணத்தில் சொத்துகளை வாங்கிக் குவித்த இன்ஸ்பெக்டரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் வளைத்திருக்கிறார்கள். அவரிடமிருந்து கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள ஆவணங்களைக் கைப்பற்றி விசாரணை நடத்திவருகிறார்கள்.

இன்ஸ்பெக்டர் ரமேஷ்ராஜ்
இன்ஸ்பெக்டர் ரமேஷ்ராஜ்

வேலூரில் வணிக குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டராகப் பணியாற்றிவருபவர் ரமேஷ்ராஜ். இவர் 2008-ம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறையில் பணியாற்றினார்.

ரமேஷ்ராஜ் வீடு
ரமேஷ்ராஜ் வீடு
ச.வெங்கடேசன்

பிறகு 2010 முதல் 2013-ம் ஆண்டு வரை திருவண்ணாமலை மாவட்ட தனிப்பிரிவு இன்ஸ்பெக்டராகப் பணியாற்றியிருக்கிறார். அந்தக் காலகட்டத்தில், இவரிடம் வரும் வழக்கை எடுக்காமல் குற்றவாளிகளிடமே லட்சக்கணக்கான ரூபாயைப் பேரம் பேசி லஞ்சமாகப் பெற்றிருக்கிறார்.

அந்தப் பணத்தில் இவரது பெயரிலும் இவர் தந்தை சுந்தரேசன் பெயரிலும் வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் சொத்துகள் வாங்கிக் குவித்திருப்பதாகவும், 50 வீடுகள் வரைக்கும் வாங்கியுள்ளதாகவும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

‘‘குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் புகாரை மறைத்து லட்ச லட்சமாகப் பேரம் பேசி லஞ்சம் வாங்கியிருக்கிறார்.’’
- லஞ்ச ஒழிப்புத்துறை தகவல்.

இன்ஸ்பெக்டர் ரமேஷ்ராஜ் ரகசியமாகக் கண்காணிக்கப்பட்டார். பல இடங்களில் வீடுகள் மற்றும் காலி மனைகள் உள்ளதையறிந்த லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் கடந்த 28-ம் தேதி இன்ஸ்பெக்டர் ரமேஷ்ராஜ் மீது வழக்கு பதிவு செய்தனர்.

அதைத்தொடர்ந்து, வேலூரை அடுத்த இடையன்சாத்து மண்டபம் சாலையில் உள்ள ரமேஷ்ராஜ் வீடு மற்றும் ஓசூர் தெள்ளூர்பாளையத்தில் உள்ள அவரின் பெற்றோர் வசிக்கும் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடியாகச் சோதனை நடத்தினர். இதில், லஞ்சப் பணத்தில் ரமேஷ்ராஜ் பல கோடி ரூபாய்க்கு சொத்துகளை வாங்கிக் குவித்த 10-க்கும் மேற்பட்ட முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இன்ஸ்பெக்டர் ரமேஷ்ராஜிடம் கிடுக்கிப்பிடியாக விசாரணை நடத்தப்பட்டுவருகிறது.

ரமேஷ்ராஜ்
ரமேஷ்ராஜ்

இதுதொடர்பாகப் பேசிய லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள், ‘‘குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் புகாரை மறைத்து லட்ச லட்சமாகப் பேரம் பேசி லஞ்சம் வாங்கியிருக்கிறார். அவரிடம் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகிறோம். முழுவிசாரணைக்குப் பின் பிற தகவல்கள் தெரிவிக்கப்படும்’’ எனத் தெரிவித்துள்ளனர். குற்றச்சாட்டுக்கு ஆளான வணிக குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ரமேஷ் ராஜிடம் கேட்டதற்கு, "என் மீது காவல்துறையில் உள்ள சில அதிகாரிகள் வீண்பழி சுமத்திருக்கிறார்கள். எனக்கு பதவி உயர்வு கிடைப்பதை தடுக்கப்பார்க்கிறார்கள். என் பிள்ளைகளின் பள்ளி கட்டணத்தை கூட கடன் வாங்கிதான் கட்டுகிறேன். எனக்கு கோடிக்கணக்கில் சொத்துகள் இல்லை. என் உறவினர்கள் சொத்துகளை என் கணக்கில் சேர்த்திருக்கிறார்கள். என்னைப் பற்றி நான் பணிபுரிந்த இடங்களில் விசாரியுங்கள்" என்றார் வருத்தத்துடன்.