Published:Updated:

சென்னை: `வன்கொடுமைச் சட்டத்தில் புகாரளிப்பேன்' - இன்ஷூரன்ஸ் நிறுவன ஊழியரைக் கடத்திய பெண்

இன்ஷூரன்ஸ்  நிறுவன ஊழியரைக் கடத்திய பெண்
இன்ஷூரன்ஸ் நிறுவன ஊழியரைக் கடத்திய பெண்

இன்ஷூரன்ஸ் நிறுவன ஊழியரை, பட்டப்பகலில் பெண் ஒருவர் கடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

சென்னை, கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் பிரபல தனியார் இன்ஷூரன்ஸ் நிறுவன அலுவலகம் உள்ளது. இங்கு சைதாப்பேட்டையைச் சேர்ந்த பால்ஜோசப் (28) என்பவர் டீம் லீடராகப் பணியாற்றிவருகிறார். இந்தநிலையில், கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த கிரிதரன் (38), அயனாவரம் பகுதியைச் சேரந்த சுவேதா (38) ஆகியோர் தலா 52,000 ரூபாய் வீதம் இரண்டு பாலிசிகள் எடுத்துள்ளனர். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பே இருவரும் பாலிசி எடுத்த நிலையில் தங்களுக்கு லோன் கேட்டு இன்ஷூரன்ஸ் நிறுவனத்திடம் விண்ணப்பித்திருக்கின்றனர்.

கடத்தல்
கடத்தல்

அதற்கு நிறுவன ஊழியர் பால்ஜோசப் குறைந்தபட்சம் ஆறு மாதங்கள் பாலிசி தொகை செலுத்தினால் மட்டுமே லோன் தர முடியும் என்று கூறியிருக்கிறார். அதனால் பாலிசிதாரர்கள் தாங்கள் செலுத்திய பணத்தைத் திருப்பித் தருமாறு கேட்டனர். அதற்கு பாலிசி நிறுவனம் தரப்பில் ஒரு வருடம் முடிந்த பின்னரே பாலிசி தொகை திருப்பித் தரப்படும் என பதிலளிக்கப்பட்டியிருக்கிறது. இதனால் ஆத்திரமடைந்த சுவேதா, கிரிதரன் இருவரும் இன்ஷூரன்ஸ் அலுவலகத்துக்கு வந்திருக்கின்றனர். பின்னர், அலுவலகத்திலிருந்த பால்ஜோசப்பைப் பிடித்து காரில் வலுகட்டாயமாக ஏற்றியிருக்கின்றனர். அதன் பிறகு இன்ஷூரன்ஸ் நிறுவன மேலாளர் பிரனவ் (50) என்பவருக்கு போன் செய்து, தாங்கள் கட்டிய பணத்தைத் திருப்பிக் கொடுத்தால்தான் ஊழியர் பால்ஜோசப்பை விடுவிக்க முடியும் என மிரட்டல் விடுத்திருக்கின்றனர்.

அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த மேலாளர் பிரனவ், பாலிசிதாரர்களுக்கு அவர்கள் கட்டிய பணத்தைத் திரும்ப கொடுத்துள்ளார். ஆனால், பணத்தைத் திருப்பி கொடுத்த பிறகும் அவர்கள் பால்ஜோசப்பை விடுவிக்காததால், இது குறித்து கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து போலீஸார் பால்ஜோசப்பை மீட்க நடவடிக்கை எடுத்தனர். அவரைக் கடத்தியவர்களின் செல்போன் சிக்னலையும், சிசிடிவி கேமரா பதிவுகளையும் போலீஸார் ஆய்வு செய்தனர். இந்தச் சமயத்தில் கடத்தப்பட்ட ஊழியரை தேனாம்பேட்டை அருகே விட்டுவிட்டு கடத்தல் கும்பல் காரில் தப்பிச் சென்றது.

தங்கம் கடத்தல் வழக்கு: 98 நாள்கள் சிறை... 3 வழக்கிலும் ஜாமீன்! புத்தகத்துடன் வெளியேறிய சிவசங்கரன்!
கடத்தல் வழக்கில் தேடப்படும் கிரிதரன்
கடத்தல் வழக்கில் தேடப்படும் கிரிதரன்

இந்தத் தகவல் போலீஸாருக்குக் கிடைத்ததும் பால்ஜோசப்பை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது அவர், காரில் கடத்திய கும்பல் குறித்த தகவல்களை போலீஸாரிடம் தெரிவித்ததார். அதன் அடிப்படையில் விசாரணை நடந்துவருகிறது. இதற்கிடையில் மேலாளர் பிரனவ்விடம் கடத்தல் கும்பலைச் சேர்ந்த சுவேதா பேசிய போன் ஆடியோ காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. அந்த ஆடியோவில் பாலிசி தொகையைத் திரும்ப தராவிட்டால் பெண் வன்கொடுமைச் சட்டத்தில் புகார் அளிப்பேன் எனவும், குடும்பத்தில் உள்ளவர்களைத் தூக்கிவிடுவேன் எனவும் சுவேதாவும் கிரிதரனும் மாறி மாறி பிரனவை மிரட்டி ஆபாசமாகவும் திட்டியிருக்கின்றனர்.

பாலிசி ஊழியரை பெண்ணும் அவரின் கூட்டாளியும் கடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு