Published:Updated:

பெங்களூர்:`சட்டவிரோதமாகத் தொலைபேசி இணைப்பகங்களை நிறுவி பணம் பார்த்த கும்பல்; கைதுசெய்த உளவுத்துறை!

கைதுசெய்யப்பட்ட நபர்கள்
கைதுசெய்யப்பட்ட நபர்கள்

பெங்களூரூவில் சட்டவிரோதமாக தொலைபேசி இணைப்பகங்களை அமைத்து இயக்கிவந்த நபர்களை போலீஸார், உளவுத்துறை மற்றும் தீவிரவாத தடுப்புப் பிரிவினருடன் சேர்ந்து கைதுசெய்துள்ளனர். 

கடந்த சில தினங்களுக்கு முன், மேற்கு வங்க மாநிலம், சிலிகுரியில் பணியாற்றிவரும் ராணுவ உயரதிகாரி ஒருவரின் அலைபேசிக்கு மர்ம நபர் ஒருவர் அழைத்திருக்கிறார். அப்போது, தன்னை ராணுவ உயரதிகாரி என்று குறிப்பிட்டுப் பேசிய அந்த நபர், இந்திய ராணுவத்தின் செயல்பாடுகள் மற்றும் ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ள எல்லைப்பகுதிகள் குறித்துத் தகவல்கள் கேட்டிருக்கிறார். ராணுவத் தகவல்களைக் கேட்டதும் அதிர்ந்துபோன ராணுவ அதிகாரி, மறுமுனையில் பேசிய நபரிடம் விளக்கம் கேட்டிருக்கிறார். அதையடுத்து, மழுப்பிய மர்ம நபர் உடனடியாக இணைப்பைத் துண்டித்திருக்கிறார். அதைத் தொடர்ந்து, சந்தேகமடைந்த ராணுவ அதிகாரி உளவுத்துறை அதிகாரிகளிடம் விஷயம் குறித்துத் தெரிவித்திருக்கிறார். அழைப்பு வந்த எண்ணைவைத்து உளவுத்துறை அதிகாரிகள் விசாரித்ததில் அழைப்பு பெங்களூரிலிருந்து வந்திருப்பதை அறிந்தனர். மேலும், போலி சிம்கார்டு மூலமாக அழைப்பு வந்திருப்பதால் உளவுத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணையில் இறங்கினர். அப்போது, பெங்களூரில் ஆறு இடங்களில் சட்டவிரோதமான முறையில் போலி 'தொலைபேசி இணைப்பகங்கள்' அமைக்கப்பட்டு இயங்கிவந்ததைக் கண்டறிந்தனர். அதைத் தொடர்ந்து, உளவுத்துறை மற்றும் பெங்களூர் சைபர் காவல்துறையினருடன் இந்திய தீவிரவாத தடுப்புப் பிரிவு அதிகாரிகளும் விசாரணையில் இறங்கினர்.

அலைபேசி
அலைபேசி

இது தொடர்பாக, தமிழகத்தின் திருப்பூரைச் சேர்ந்த கௌதம் விஸ்வநாதன், கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த இப்ராஹிம் முல்லட்டி ஆகிய இரண்டு இளைஞர்களை உளவுத்துறையினர் கைதுசெய்தனர். மேலும், அவர்களிடமிருந்து சிம்கார்டுகள், லேப்டாப்கள், கம்ப்யூட்டர் மற்றும் ரூட்டர்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கைதுசெய்யப்பட்ட நபர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டதில், பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. இளைஞர்கள் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டுவந்ததாகவும், மேலும் பலருடன் தொடர்பு இருப்பதாகவும் முதற்கட்டமாக உளவுத்துறையினர் தகவல் தெரிவித்திருந்தனர். அதைத் தொடர்ந்து அதிகாரிகள் கைதுசெய்யப்பட்டவர்கள் அளித்த தகவல்களின் பேரில் சுமார் ஆறு இடங்களில் சோதனை நடத்தினர். அதில் 960 சிம்கார்டுகள் உள்ளடங்கிய 30 இணைப்புப் பெட்டிகளை அடையாளம் கண்டு மீட்டனர். கைதுசெய்யப்பட்ட நபர்கள் பல்வேறு இடங்களில் வாடகைக்கு வீடுகளை எடுத்து, அதில் தொலைபேசி இணைப்பகங்களை அமைத்து சட்டவிரோதமான அழைப்புகளைப் பெறுவதற்கும், அவற்றை உள்ளூர் அழைப்புகளாக மாற்றுவதற்கும் பயன்படுத்திவந்ததாகக் கூறப்படுகிறது.

உள்ளூர் அழைப்புகளைப்போல் சர்வதேச அழைப்புகளைக் கையாளும் இளைஞர்கள், இணைப்புப் பெட்டிகளில் ஒரே நேரத்தில் பல்வேறு நிறுவனங்களின் சிம்கார்டுகளை பொருத்தி சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். மேலும், கைதுசெய்யப்பட்டவர்களில் தமிழகத்தைச் சேர்ந்த இப்ராஹிம் துபாயைத் தலைமையிடமாகக் கொண்ட சர்வதேச வலையமைப்பின் கீழ் ஹவாலா மோசடிகளில் ஈடுபட்டுவந்ததாகவும் கூறப்படுகிறது. போலி ஆதாரங்களை வைத்து நூற்றுக்கணக்கான சிம்களைப் பெற்று, அவற்றைச் சட்டவிரோத பரிமாற்றத்துக்குப் பயன்படுத்தியுள்ளனர்.

கைது
கைது

அதன் மூலம் மாதம் 10 லட்சம் முதல் 15 லட்சம் ரூபாய் வரையில் சம்பாதித்திருக்கின்றனர். சர்வதேச அழைப்புகளை உள்ளூர் அழைப்புகளாகத் தொலைபேசி இணைப்பகத்தின் மூலம் மாற்றிவிடுவதால், தங்கள் வாடிக்கையாளர்களுக்குத் தங்கு தடையின்றி சர்வதேச அழைப்புகளை வழங்கிவந்துள்ளனர். அதற்கு, இந்தியாவில் வழக்கமாக சர்வதேச அழைப்புகளை மேற்கொள்வதற்கு வசூலிக்கப்படும் கட்டணத்தைவிடவும் குறைவான தொகையை சட்டவிரோதமாக வசூலித்திருக்கின்றனர். இது போன்று சர்வதேச அழைப்புகள் உள்ளூர் அழைப்புகளாகக் கணக்கில் வந்துவிடுவதால், அரசுக்கு மிக அதிக வருவாய் இழப்பு ஏற்படுவதாகக் கூறும் அதிகாரிகள், கைதாகியுள்ள இப்ராஹிம் புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் படிப்பறிவற்ற பாமர மக்களின் அடையாள ஆவணங்களை வைத்து சிம்கார்டுகள் வாங்கியிருப்பதாகத் தெரிவிக்கின்றனர்.

பெங்களூர் போலி தொலைபேசி இணைப்பகம் குறித்து தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், உளவுத்துறை அதிகாரிகள் மற்றும் சைபர் க்ரைம் போலீஸார் மேலும் தமிழகம் மற்றும் கேரளாவைச் சேர்ந்த ஐந்து நபர்களைக் கைதுசெய்துள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்த சந்தானகுமார் (29), சுரேஷ் தங்கவேலு (32), ஜெய் கணேஷ் (30) ஆகியோரும், கேரளாவைச் சேர்ந்த அனீஸ் (30) மற்றும் முகமது பஷீர் (51) ஆகியோரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதாகியுள்ள நபர்கள் அனைவரும் முன்னதாகக் கைதுசெய்யப்பட்ட இப்ராஹிமின் தலைமையில் செயல்பட்டுவந்ததாகக் கூறப்படுகிறது. கைதுசெய்யப்பட்டுள்ள நபர்கள் மொத்தம் ஒன்பது இடங்களில் சுமார் 3,000 சிம்கார்டுகள் உள்ளடங்கிய 109 இணைப்புப் பெட்டிகளைப் பொருத்தி சட்ட விரோதச் செயல்களில் ஈடுபட்டுவந்ததாகவும், இவர்களின் செயலால் இந்தியத் தொலைத் தொடர்புத்துறைக்கு மிகப்பெரிய அளவில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

அடுத்த கட்டுரைக்கு