Published:Updated:

வடிகாலில் சடலம்;உடலைத் துளைத்த தோட்டாக்கள்?!- டெல்லி கலவரத்தில் கொல்லப்பட்ட மத்திய உளவுத்துறை காவலர்

அன்கித் குடும்பத்தினர்
அன்கித் குடும்பத்தினர்

டெல்லியில் நடந்த கலவரத்தில் மத்திய உளவுத்துறையில் பணியாற்றும் அன்கித் ஷர்மா என்பவர் உயிரிழந்துள்ளார்.

தலைநகர் டெல்லியில் குடியிரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் வெடித்த வன்முறையில் இதுவரை 20 -க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதாகவும் ஏராளமானவர்கள் காயமடைந்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சம்பவத்தில் மத்திய உளவுத்துறையில் பணியாற்றும் அன்கித் ஷர்மா என்பவர் உயிரிழந்துள்ளார். வன்முறையாளர்கள் கற்களை வீசித் தாக்கியதில் அன்கித் ஷர்மா இறந்ததாக டெல்லி போலீஸார் கூறுகின்றனர். அன்கித் ஷர்மாவைக் கடுமையாகத் தாக்கிய கும்பல், உடலை வடிகாலில் தூக்கி வீசிவிட்டுச் சென்றதாக அவரது சகோதரர் கூறியுள்ளார்.

கலவரத்தில் கொல்லப்பட்ட அன்கித்
கலவரத்தில் கொல்லப்பட்ட அன்கித்

27 வயதாகும் அன்கித் ஷர்மா 2017-ம் ஆண்டு மத்திய உளவுத்துறைப் பணியில் சேர்ந்துள்ளார். அவரது தந்தை டெல்லிக் காவல்துறையில் பணியாற்றி வருகிறார். அன்கித் இறப்புச் செய்தியைக் கேட்டு அவரது தாய் ‘என் குழந்தையை ஏன் கொல்ல வேண்டும்’ எனக் கண்ணீர் வடித்து வருகிறார். நேற்று மாலையில் இருந்தே அன்கித் ஷர்மாவைக் காணவில்லை. இந்நிலையில்தான் இன்று அவரது உடல் ஜாஃப்ராபாத் பகுதியில் உள்ள வடிகாலிலிருந்து மீட்கப்பட்டது. அவரது தந்தை நேரில் சென்று பார்த்து இறந்தது தன் மகன்தான் என்பதை உறுதி செய்தார்.

சம்பவம் குறித்து அவரது சகோதரர் அன்கூர் பேசுகையில், “அன்கித் பணி முடிந்து 4.30 மணிக்கெல்லாம் வீடு திரும்பிவிட்டார். இந்தப்பகுதியில் நடந்த வன்முறையையடுத்து என்ன நடக்கிறது எனப் பார்ப்பதற்காக வெளியே சென்றார். அதன்பின்னர் அவரைக் காணவில்லை. அவர் இறந்த செய்தி மட்டுமே எங்களுக்குக் கிடைத்தது. வன்முறையாளர்கள் அன்கித் மீது சரமாரியாகத் தாக்கியுள்ளனர். அவருடன் சென்ற நண்பர்கள் அவரைக் காப்பாற்ற முயற்சி செய்துள்ளனர். வன்முறையாளர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியதால் அவர்களால் நெருங்க முடியவில்லை. என் சகோதரனின் நண்பர்களுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது” என்றார்.

தேவேந்திர ஷர்மா
தேவேந்திர ஷர்மா
`டெல்லி வன்முறையைக்  கட்டுப்படுத்த நியமிக்கப்பட்ட சிறப்பு அதிகாரி!'- யார் இந்த ஐ.பி.எஸ் ஶ்ரீவஸ்தவா?

``என் மகனுக்கு இன்னும் திருமணமாகவில்லை. நாங்கள் அவனுக்குப் பெண் பார்த்துக்கொண்டிருந்தோம். அவரது இறப்புச் செய்தியை எங்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. என் மகனைக் கடுமையாகத் தாக்கியுள்ளனர். அவரது உடலில் துப்பாக்கிக் குண்டுகள் துளைத்துள்ளது என அவரது தந்தை தேவேந்திர ஷர்மா தெரிவித்துள்ளார். செவ்வாய்க்கிழமை அன்கித் வெளியே சென்றபோது கலவரக்காரர்கள் கொடூரமாகத் தாக்குதல் நடத்தி வந்துள்ளனர். அப்போது சிலர் அங்கித்திடம் உதவி கேட்டதாகவும் அப்போது அவர் தாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. கலவரக்காரர்கள் கற்களைக்கொண்டு தாக்கியதில் அவர் இறந்திருப்பதாக டெல்லி போலீஸார் தெரிவிக்கின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு