Published:Updated:

தலைதூக்கும் வெடிகுண்டு, துப்பாக்கி கலாசாரம்... உளவுத்துறை கொடுத்த சீக்ரெட் ரிப்போர்ட்!

வெடிகுண்டு, துப்பாக்கி கலாசாரம்...
பிரீமியம் ஸ்டோரி
வெடிகுண்டு, துப்பாக்கி கலாசாரம்...

ஜார்க்கண்ட், பீகார் உள்ளிட்ட வட மாநிலங்களிலிருந்துதான் தமிழகத்துக்கு கள்ளத் துப்பாக்கிகள் ரயில்கள் மூலம் கடத்திக்கொண்டுவரப்படுகின்றன.

தலைதூக்கும் வெடிகுண்டு, துப்பாக்கி கலாசாரம்... உளவுத்துறை கொடுத்த சீக்ரெட் ரிப்போர்ட்!

ஜார்க்கண்ட், பீகார் உள்ளிட்ட வட மாநிலங்களிலிருந்துதான் தமிழகத்துக்கு கள்ளத் துப்பாக்கிகள் ரயில்கள் மூலம் கடத்திக்கொண்டுவரப்படுகின்றன.

Published:Updated:
வெடிகுண்டு, துப்பாக்கி கலாசாரம்...
பிரீமியம் ஸ்டோரி
வெடிகுண்டு, துப்பாக்கி கலாசாரம்...

தலைநகர் சென்னையில் சாதாரண கைகலப்பு, ‘பார்’ பிரச்னையில்கூட நாட்டு வெடிகுண்டுகள் வீசப்பட்டிருப்பது காவல்துறையைக் கதிகலங்க வைத்திருக்கிறது. இதேபோல மாநிலம் முழுக்க கள்ளத் துப்பாக்கி, நாட்டு வெடிகுண்டு நடமாட்டம் கன்னா பின்னாவென அதிகரித்திருப்பதாக அரசுக்கு ரிப்போர்ட் கொடுத்திருக்கிறது உளவுத்துறை.

சம்பவம் 1

சென்னை ஜாபர்கான்பேட்டை, அன்னை சத்யா நகரிலுள்ள முத்து மாரியம்மன் கோயில் திருவிழாவின்போது பிரச்னை வெடித்திருக்கிறது. அதன் விளைவாக கடந்த 19.8.2022-ம் தேதி இரவு சிவில் இன்ஜினீயர் பாலாஜி தரப்புக்கும், ராஜா என்பவர் தரப்புக்கும் இடையே நடந்த மோதலில் நாட்டு வெடிகுண்டுகள் வீசப்பட்டன. சென்னையின் இதயப் பகுதியில் நடந்த இந்தத் தாக்குதலுக்கு நாட்டு வெடிகுண்டுகள் எப்படிக் கிடைத்தன என்று எம்.ஜி.ஆர் நகர் போலீஸார் விசாரித்தனர். அப்போது சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் குற்றப் பின்னணிகொண்ட பலர் தங்கள் வீடுகளில் குடிசைத்தொழில்போல சர்வ சாதாரணமாக நாட்டு வெடிகுண்டுகள் தயாரிப்பதும், அவர்களிடமிருந்து இவர்கள் நாட்டு வெடிகுண்டுகளை வாங்கி வீட்டு மொட்டை மாடியில் பதுக்கிவைத்திருந்ததும் தெரியவந்தது.

சம்பவம் 2

சேலையூர் வேங்கைவாசல் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த வாகனச் சோதனையில் ஒரு கும்பல் ஆயுதங்களுடன் சிக்கியது. அவர்களிடமிருந்து நாட்டு வெடிகுண்டு ஒன்றையும், கள்ளத் துப்பாக்கி ஒன்றையும் சேலையூர் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

சம்பவம் 3

சென்னை தாம்பரத்தை அடுத்த மண்ணிவாக்கம் பகுதியிலுள்ள டாஸ்மாக் பார் மீது கடந்த 21.8.2022-ம் தேதி இரவு 12 மணியளவில் இளைஞன் ஒருவன் நாட்டு வெடிகுண்டை வீசிவிட்டுத் தப்பினான். சிசிடிவி-யில் பதிவான காட்சிகளைவைத்து, வண்டலூர் பகுதியைச் சேர்ந்த சொக்கா என்ற சொக்கலிங்கம், அவனுடைய நண்பன் வண்டலூரைச் சேர்ந்த பாலமுருகன் ஆகியோரை ஓட்டேரி போலீஸார் கைதுசெய்தனர். இருவரிடமும் விசாரித்தபோது யூடியூபைப் பார்த்து வெடிகுண்டு தயாரித்ததாக கூலாகக் கூறியுள்ளனர்.

இந்த மூன்று சம்பவங்களுக்கு முன்பே, வெடிகுண்டுப் புழக்கம் பற்றி உளவுத்துறை அரசுக்கு ‘ரிப்போர்ட்’ ஒன்றைக் கொடுத்திருக்கிறது. அது குறித்து தகவல் கிடைத்ததும், உளவுத்துறையைச் சேர்ந்த சில அதிகாரிகளிடம் பேசினோம். ``போதைப்பொருள் கடத்தல் கும்பல்களும், ரௌடி கும்பல்களும் நாட்டு வெடிகுண்டுகள், கள்ளத் துப்பாக்கிகளை அதிக அளவில் இருப்பு வைத்துள்ளன. சிலர் தங்கள் வீடுகளிலேயே தயாரிக்கிறார்கள். எந்தெந்தக் கும்பல் கள்ளத் துப்பாக்கி, நாட்டு வெடிகுண்டுகளைப் பயன்படுத்துகிறார்கள் என்ற விவரங்களை எங்கள் ரிப்போர்ட்டில் விரிவாகத் தெரிவித்திருக்கிறோம்.

தலைதூக்கும் வெடிகுண்டு, துப்பாக்கி கலாசாரம்... உளவுத்துறை கொடுத்த சீக்ரெட் ரிப்போர்ட்!

செங்கல்பட்டு மாவட்டத்தில் நடிகர் பெயரைக்கொண்ட பிரபல ரௌடி, நாட்டு வெடிகுண்டு தயாரித்து விற்பதில் முன்னணியில் இருக்கிறார். தேசியக் கட்சியின் பின்னணியைத் தொழிலுக்குப் பயன்படுத்திக்கொள்பவர் அவர். போலீஸ் நடவடிக்கை எடுத்தாலும், சட்டத்திலுள்ள ஓட்டையைப் பயன்படுத்தி வெளியே வந்துவிடுகிறார். இன்னொருவர், தென்சென்னையைக் கலக்கிய பிரபல இனிஷியல் ரௌடி. எந்தக் கட்சி ஆட்சியிலிருக்கிறதோ அவர்களோடு நெருக்கத்தை ஏற்படுத்திக்கொண்டு என்கவுன்ட்டரிலிருந்து ஒவ்வொரு தடவையும் தப்பித்துவிடுகிறார். வடசென்னையிலிருக்கும் மற்றொரு ரௌடியை போலீஸாரால் என்கவுன்ட்டர் அல்ல... கைதுசெய்யக்கூட முடியவில்லை. அவரின் ஸ்டைலே வெடிகுண்டுகளை வீசி ‘அட்டாக்’ செய்வதுதான். சில ஆண்டுகளுக்கு முன்பு அண்ணாசாலையில் தேனாம்பேட்டை காவல் நிலையம் அருகே ரௌடி ஒருவனைக் கொல்ல வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவத்திலும் அந்த டீமுக்குத் தொடர்பு இருக்கிறது. அந்த ரௌடியை போலீஸார் பல தடவை சுற்றி வளைத்தும், கைது செய்ய முடியவில்லை. ஆளுங்கட்சி மேலிடத்திலிருந்து வரும் கடைசி நேர போன் அழைப்பால், அவரை விடவேண்டியதாகி விடுகிறது” என்றனர்.

கள்ளத் துப்பாக்கி குறித்து நம்மிடம் விவரித்தார் மற்றோர் அதிகாரி. ``ஜார்க்கண்ட், பீகார் உள்ளிட்ட வட மாநிலங்களிலிருந்துதான் தமிழகத்துக்கு கள்ளத் துப்பாக்கிகள் ரயில்கள் மூலம் கடத்திக்கொண்டுவரப்படுகின்றன. கடந்த 2018-ம் ஆண்டு கவுஹாத்தியிலிருந்து சென்னைக்கு வந்த ஒரு கும்பலிடமிருந்து, ஏழு கள்ளத் துப்பாக்கிகள், கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இப்போதும் பல கும்பல்கள் அதே தொழிலைச் செய்கின்றன. சென்னை தாம்பரத்தில் சில மாதங்களுக்கு முன்பு, அடிதடி வழக்கு ஒன்றில் கைதான ஒருவனின் பின்னணியை விசாரித்தபோது அவன் கள்ளத் துப்பாக்கிகளை வாங்கி விற்கும் பிசினஸ் செய்துவந்தது தெரியவந்தது. அவனுடைய வீட்டிலிருந்து பல துப்பாக்கிகள் பிடிபட்டும்கூட, ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவரின் தலையீட்டால் அவனை அப்படியே விட்டுவிட்டார்கள் போலீஸார். தென் சென்னையில் ஒருகாலத்தில் டானாக இருந்தவர், இப்போது ஆளுங்கட்சியின் மிக மூத்த அமைச்சருக்கு வேண்டப்பட்டவராக இருக்கிறார். இவரிடம் இல்லாத துப்பாக்கி ரகங்களே கிடையாது. இவரின் ஆதரவாளர்கள் சிலர் இன்னமும் துப்பாக்கிமுனையில் எதிரிகளை அச்சுறுத்திவருகின்றனர். அரசியல் தலையீடு இல்லாவிட்டால், கள்ளத் துப்பாக்கி நடமாட்டத்தை வெகுவாகக் குறைக்க முடியும்.

மேற்குத் தொடர்ச்சி மலையடிவார கிராமங்களிலும் நாட்டு வெடிகுண்டு, துப்பாக்கி கலாசாரம் தலைதூக்கியிருக்கிறது. குறிப்பாக, நீலகிரி மாவட்டத்தில் வேட்டைக்காக அதிக அளவில் இவற்றைப் பயன்படுத்துகிறார்கள். தென் மாவட்டங்களில் இம்மானுவேல் சேகரன், தேவர் குருபூஜை உள்ளிட்ட நிகழ்வுகளையொட்டி, சிலர் நாட்டு வெடிகுண்டுகளைத் தயாரித்து, பதுக்கிவருவதாகவும் தகவல் வந்திருக்கிறது” என்றார்.

இப்படி உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட் அடிப்படையில்தான் டி.ஜி.பி அலுவலகம், கடந்த 22-ம் தேதி ஒரு சுற்றறிக்கையை காவல்துறை அதிகாரிகளுக்கு அனுப்பிவைத்திருக்கிறது. அதில், “தமிழ்நாட்டில் எதிர்வரும் நாள்களில் அரசியல், சாதி, மதத் தலைவர்களின் பிறந்தநாள், நினைவுதினங்களில் மோதல் சம்பவங்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. அதனால் சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்பிருப்பதால் முன்னெச்சரிக்கையாகப் பாதுகாப்பு நடவடிக்கைகளில் கூடுதல் கவனம் செலுத்தவும்” என்று வலியுறுத்தப்பட்டிருக்கிறது.

வெறும் எச்சரிக்கையுடன் நிற்காமல், சம்பந்தப்பட்டவர்கள் மீது தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் காவல்துறை!