Published:Updated:

`தினமும் குடித்தால் குடும்பத்தை நடத்த முடியுமா?’- தட்டிக் கேட்ட மகனுக்கு தந்தையால் நேர்ந்த விபரீதம்

தினமும் குடித்துவிட்டு வந்து மனைவி மற்றும் மகன்களுடன் தகராறு செய்துவந்திருக்கிறார். குடிப்பழக்கத்தைக் கைவிடுமாறு குடும்பத்தினர் கூறியதைக் கேட்காமல் பணத்தைச் செலவுசெய்திருக்கிறார்.

representational image
representational image

குடியின் கொடுமையால் நாள்தோறும் நடக்கும் குற்றச் செயல்களின் எண்ணிக்கை அதிகரித்தபடியே இருக்கிறது. மது போதையின் காரணமாக விபத்துகள் நடப்பதுடன் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றச்செயல்களும் அதிகரிப்பதாக சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து புகார் தெரிவித்துவருகின்றனர்.

`என் தளபதிக்காக நான் வருவேன்டா..!’ - குடிபோதையில் வீடியோ வெளியிட்டவர்கள் கைது

நெல்லை மாவட்டம் மணிமுத்தான்குளம் கிராமத்தில் அத்தகைய குற்றம் நடந்திருப்பது, பொதுமக்களை அச்சமடைய வைத்திருக்கிறது. குடிபோதையில் இருந்த தந்தை, தன் மகனையே கொலைவெறியுடன் வெட்டிச்சாய்த்த அந்தச் சம்பவம் குறித்து பத்தமடை போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இது தொடர்பாக காவல்துறையினர் கூறுகையில், ’’மணிமுத்தான்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர், முத்துப்பாண்டி. அவருக்கு கொம்பையா, லட்சுமணன் என்ற இரு மகன்கள் உள்ளனர். முத்துப்பாண்டி, தினமும் குடித்துவிட்டு வந்து மனைவி மற்றும் மகன்களுடன் தகராறு செய்துவந்திருக்கிறார். குடிப்பழக்கத்தைக் கைவிடுமாறு குடும்பத்தினர் கூறியதைக் கேட்காமல் பணத்தைச் செலவுசெய்திருக்கிறார்.

representational image
representational image

வழக்கம்போல குடித்துவிட்டு வந்து தகராறு செய்த முத்துப்பாண்டியை அவரது மூத்த மகன் கொம்பையா தட்டிக் கேட்டிருக்கிறார். ‘தினமும் இப்படியே குடித்துவிட்டு வந்தால் குடும்பத்தை எப்படி நடத்த முடியும்?' எனக் கேட்டிருக்கிறார். அதனால் ஆத்திரமடைந்த முத்துப்பாண்டி, அரிவாளை எடுத்து கொம்பையாவை சரமாரியாக வெட்டியுள்ளார்'' என்கின்றனர்.

அருகில் உள்ள வீடுகளைச் சேர்ந்தவர்கள் உதவிக்கு ஓடிவந்ததும் பயந்துபோன முத்துப்பாண்டி, அங்கிருந்து தப்பியோடிவிட்டார். ரத்த வெள்ளத்தில் கிடந்த கொம்பையா, சேரன்மகாதேவி அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

Vikatan

அரிவாள் வெட்டு காரணமாக அவரது உடலில் இருந்து அதிக அளவில் ரத்தம் வெளியேறியதால், உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்பட்டது. அதனால் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு மருத்துவர்கள் அனுப்பி வைத்தனர். தப்பியோடிய முத்துப்பாண்டியை போலீஸார் தேடிவருகின்றனர்.