Published:Updated:

எல்ஃபின் மோசடி: ``பணத்தை தருவோம்னு ஆடியோ மட்டும்தான் அனுப்புறாங்க!''- கொந்தளிக்கும் மக்கள்

பணத்தை பறிக்கொடுத்தவர்கள்
பணத்தை பறிக்கொடுத்தவர்கள்

திருச்சியைச் சேர்ந்த எல்ஃபின் உரிமையாளர்களான ராஜாவும், ரமேஷும் தலைமறைவாக உள்ள நிலையில் பணத்தைக் கண்டிப்பாகக் கொடுத்துவிடுவோம் என்று வாட்ஸ் அப்பில் ஆடியோ அனுப்புகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

திருச்சியைச் சேர்ந்த எல்ஃபின் தனியார் நிறுவனத்தில் பணத்தைப் போட்டு ஏமாந்து நிற்கும் மக்கள் அந்த அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திவரும் சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எல்ஃபின் நிதி நிறுவனம் ஒரு மோசடி கும்பல் என்பதை விகடனில் தொடர்ந்து எழுதிவருவது குறிப்பிடத்தக்கது!

எல்ஃபின்
எல்ஃபின்
திருச்சி முதல் சிவகாசி வரை; ஆசையைத் தூண்டி `சதுரங்க வேட்டை', எல்ஃபின் நிறுவனம் ஏமாற்றியது எப்படி?

எல்ஃபின் நிறுவனத்தில் அப்படி என்ன பிரச்னை?

எல்ஃபின் என்கிற நிதி நிறுவனம் திருச்சியை மையமாகக் கொண்டு செயல்படுகிறது. இந்த நிறுவனத்தை நடத்தி வருபவர் ராஜா மற்றும் அவரது தம்பி ரமேஷ். இந்த நிறுவனம் எம்.எல்.எம் எனப்படும் மல்ட்டி லெவல் மார்க்கெட்டிங் முறையில் ஆட்களைப் பிடிக்கும். நிறைய பணம் கிடைக்கும் என்கிற ஆசையில் வருபவர்களிடம் பலவிதமாக பொருள்களைத் தந்து, விற்கச் சொல்லும். இப்படிப் பலரும் இந்த மார்க்கெட்டிங் நெட்வொர்க்கில் சேர, எல்லோருக்கும் கமிஷன் கிடைக்கும்.

முதலில் மளிகைப் பொருட்களை விற்கத் தொடங்கிய இந்த நிறுவனம், நாளடைவில் வீடு கட்டிக் கொடுப்பது, காலி இடங்களை வாங்கி விற்பது போன்ற ரியல் எஸ்டேட் சம்பந்தமான தொழில்களையும் செய்யத் தொடங்கியது. ஆரம்பத்தில் ஒன்றும் தெரியாத அப்பாவிகள் பலர் இந்த நிறுவனம் சொன்னப் பொய்களை உண்மை என்று நம்பி சேர்ந்தனர். பிறகு அதிகமாக நபர்கள் இணைந்ததும், `அறம் மக்கள் நலசங்கம்' என்று ஆரம்பித்தனர்.

ரமேஷ் - ராஜா
ரமேஷ் - ராஜா

அத்துடன், மக்களிடம் ஆசை வார்த்தை கூறி ஏமாற்றத் தொடங்கினார்கள். அதன் விளைவுதான் தஞ்சை, புதுக்கோட்டை போன்ற சில மாவட்டங்களில் இவர்கள் நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவர்கள் மீது 32 மேற்பட்ட புகார்கள் குவிய, திருச்சி பொருளாதாரக் குற்றப் பிரிவு போலீஸார் இவர்கள் மீதான வழக்கை விசாரித்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்நிலையில், முதலீட்டாளர்களிடம் இருந்து பெறப்பட்ட உரிய பணத்தைத் திருப்பித் தராமல் ஏமாற்றுவதாகத் தொடர்ந்து பல புகார்கள் எழுந்து வருகிறது. இந்த நிலையில், கடந்த வாரத்தில்கூட 4 கோடி ரூபாய் திருப்பித் தரவேண்டும் என்று ஒரு முதலீட்டாளர் ஒருவர் புகாரின் அடிப்படையில், அந்த நிறுவனத்தின் ஏஜென்டுகள் 4 பேர் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

எல்ஃபின்
எல்ஃபின்

எல்ஃபின் உரிமையாளர்களான ராஜாவும், ரமேஷும் தலைமறைவாக உள்ள நிலையில், பணத்தைக் கண்டிப்பாகக் கொடுத்துவிடுவோம் என்று வாட்ஸ் அப்பில் ஆடியோ அனுப்பப்பட்டுள்ளது. ``பல மாதங்களாக இப்படிதானே சொல்கிறீர்களே தவிர, பணம் வந்தபாடில்லை" என்று எல்ஃபின் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள் பாதிக்கப்பட்ட மக்கள்.

எல்ஃபின் நிறுவனத்தினால் பாதிக்கப்பட்ட ராமமூர்த்தி என்பவரிடம் பேசினோம். ``நானும் எனது உறவினர்களும் சேர்ந்து இதுவரை 2 கோடி வரை இந்த நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளோம். பல மாதங்களாகப் பணத்தைக் கொடுக்காமல் இழுத்தடித்துக் கொண்டே இருக்கிறார். அழுத்திக்கேட்டால் கொரோனா பிரச்னை என்பதால் பணத்தைக் கொடுக்க முடியவில்லை என்கிறார்.

பாதிக்கப்பட்ட மக்கள்
பாதிக்கப்பட்ட மக்கள்
திருச்சி: `பணம் இரட்டிப்பு ஆசை; லட்சங்களை இழந்த வாலிபர்’ - நிதிநிறுவன உரிமையாளர் மீது வழக்கு

அத்தோடு, அவர் வாட்ஸ் அப்பில் வெளியிட்ட ஒரு ஆடியோவில் பணத்தைக் கொடுத்துவிடுவதாகத் சொல்கிறார். பல மாதங்களாக இப்படித்தான் சொல்லிக்கொண்டிருக்கிறார். ஆனால் பணம் கொடுத்தபாடில்லை என்பதால் பணத்தைக்கேட்டு அலுவலகத்தை முற்றுகையிட்டுள்ளோம்" என்றார்.

இந்த மாதிரியான மோசடி நிறுவனத்தை நடத்தியவர்கள் நிம்மதியாக இருக்கின்றனர். ஆனால், பணம் போட்ட மக்கள் நீதி கேட்டு அலைகின்றனர். இது போன்ற மோசடி நிறுவனங்களில் சிக்காமல் மக்கள்தான் உஷாராக இருக்க வேண்டும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு